பக்கங்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2016

அப்பத்தா காவியம் - பகுதி ஒன்று - சுயபுராணம்

அப்பத்தா காவியம் - பகுதி ஒன்று 

சுயபுராணம் 

1967ம் ஆண்டு எனக்கு பத்துவயசு இருக்கும், தம்பிக்கு எட்டு வயசு, நாங்கள் இரண்டுபேரும் அப்பத்தா வீட்டு கூரையிலை உச்சியிலை ஏறி இருந்துகொள்ளுவம். இது ஒவ்வொரு சனிக்கிழமை காலமை  நடக்கும். அப்பத்தா வீடு தாழ்வாரம் பெரிய உயரமில்லை. பக்கத்திலை இருக்கிற மாமாரத்திலை ஏறினால் அவவிண்டை கூரையிலை ஏறியிடலாம்.

அப்பத்தா முகம் கழுவி திருநீறு பூசி சூரியனை கும்பிட வரும். என்கைகளை கண்டிடும் , அதோடை சூரிய நமஸ்காரம் அரோகராதான். எங்களை திட்ட தொடங்கும்.

"எட கட்டையில போவாங்களே இறந்குங்கோடா, உருண்டுவிழுந்து கை கால் முறியப்போகுது "

நாங்கள் முகத்தை பரிதாபமாக வைச்சுக்கொண்டு இருக்க தம்பி கேட்பான்," கட்டையிலை போறதெண்டால் நாங்கள் இரண்டு பேரும் செத்து போவமே ?"

அப்பத்தா இரண்டு கையையும் விரிச்சு "எட பாடையிலை போவாரே உங்களுக்கு காலம் காத்தாலை நல்ல பேச்சு வராதே ? ஏன்டா இழவெடுத்த கதை பேசுறியள்  , இறண்குங்கோடா பரயல சரிவு. "பரயல சரிவு" அதுக்கு என்ன அர்த்தமெண்டு எனக்கு இன்னும் தெரியாது.

அப்ப நான் சொல்லுவன் , பாடையிலை போறது கட்டையிலை போறது எல்லாம் ஒண்டுதானே அப்பத்தா. அப்பத்தா கையிலை எம்பிடறதை எடுத்து கொண்டு "இந்தா நான் மேலை வாறன் எண்டு"மாமாரத்திலை ஏற வெளிக்கிடும். ஐயோ அப்பத்தா நாங்கள் கீளை வாறம் எண்டு சொல்லி நாங்கள் இரண்டு பேரும் விடுவிடு எண்டு கீளை  வந்து தாழ்வாரத்தாலை தொப் எண்டு குத்திப்பம். குதிக்கிறதொண்டும் பெரியவிசயமில்லை. அந்த உயரம் எங்கடை வீட்டு சாப்பாட்டு மேசையிலை இருந்து குதிக்கிற அளவுதான்.

எங்கடை ஊரிலை ஒவ்வொரு சனியும் எல்லாரும் எண்ணை  தேச்சு , சீயாக்கையும் வெந்தயமும் ஊற வச்சு விழுதாக அரைச்சு தலையில குளிப்பினம்.பிறகு மத்தியானம் குசவ பிட்டியிலை பங்கு போட்டு வாங்கின ஆட்டு இறைச்சி கறி , கத்தரி வெள்ளை கறி ஆட்டெலும்பு சொதி எல்லாம் சம்பா  அரிசி சோத்தொடை சாப்பிடுவம். ஆக புரட்டாசி சனி கிழமை விரதகாலத்திலை அல்லது நல்ல நாள் பெருநாள் மட்டும் மரக்கறி சாப்பாடு. அதிலை ஒண்டுதான் அப்பத்தா வீட்டு கூரையிலை நானும் தம்பியும் ஏறி அப்பத்தாவின் வசவுகளை வாங்கி கட்டி கொள்ளுதல். ஊர் வழக்கம் மாதிரி எனக்கும் என் தம்பிக்குமே உரித்தான வழக்கம் .

அப்பத்தா வீட்டு வாசல் நிலை சரியான பதிவு. நல்லா  குனிஞ்சுதான் உள்ளை போகலாம். லட்சுமி வாழுறதாலை தலை குனிஞ்சுதான் உள்ளை போகலாமாம். எங்கடை ஊரிலை எல்லாத்துக்கும் ஒரு ஐதீகம் இருக்கும். Burma தேக்கு மரத்தாலை செய்தது. நான் பத்து வயசிலையே நல்ல உயரம் 5 அடி 6 அங்குலம். அவசரமா போய் எத்தனை தரம் தலைஇலை அடி வாங்கியிருப்பன்.

அப்பத்தா என்கிற உறவுமுறை நான் பிறந்து வளந்த ஊரில பொதுவாக பாவிக்காத ஒன்று . அப்பாவின்  அல்லது ஐயாவின் அம்மாவை அப்பாச்சி அல்லது ஐயாச்சி அல்லது ஆச்சி எண்டோ , கோவமா கூப்பிடறதானால் ஏ கிழவி எண்டுதான் கூப்பிடுவம். அப்பத்தா எண்டு யார் முதலிலை கூப்பிட்டது எண்டு எனக்கு தெரியாது.



எங்கடை  ஊர் எண்டால் அதுதான் காரைக்கலட்டி. பருத்திதுறையிலை இருந்து யாழ்ப்பாணம் போற ரோட்டிலை அரை கிலோமீட்டர் போய் சிவன் கோவிலடி தாண்டி வாற மூண்டாவது இடது பக்க ஒழுங்கையிலை திரும்பி இன்னும் ஒரு கால் கிலோமீட்டர் போனால் எங்கடை ஊர் வரும்.

எங்கடை ஊர் எண்டால் தனிய காரைக்கலட்டி  மாத்திரம் இல்லை. பக்கத்துக்கு ஊருகளான மாலையிட்டான் கண்டல், வாழ்க்கைப்பட்டான்  கலட்டி , பெத்துபோட்டான் குளம் ,இத்தியடி, தம்மம்பளை, அத்திக் கண்டல், பிடாரி குளம்,காளவாய் பிளவு  , இப்பிடி எட்டு ஊர்கள் சேந்ததுதான் எங்கடடை ஊர். மொத்தமாக பார்த்தால் ஒரு 16 சதுர கிலோமீட்டர் இடம் இருக்கும். எல்லாருமே கொண்டான் குடுத்தான் உறவு முறை. அம்மா வழியிலை பார்த்தால் மச்சாள் உறவாக இருக்கும், ஐயா வழியிலை பார்த்தால் மாமி முறை வரும். எது வசதியோ அதை பிடிசுக்கொள்ளுவம்.

எல்லா வீடுகளுக்கும் நாலு பக்கமும் வேலி அடைச்சு , பின்பக்கம் ஒரு கிணறும் ஆடுகால்  அல்லது கப்பியோடை இருக்கும், ஆக அடியிலை வாழி  கக்கூசு இருக்கும். அருவருக்க வேண்டாம் இது 1957 கதை. 99 வீதமான ஆக்கள் படிச்ச சனம். Hartley College, வேலாயுதம் ஹை ஸ்கூல் அல்லது நெல்லியடி central எங்கையாவது படிச்சு டாக்டர், engineer , பிரக்கிராசி, ஆக  குறைஞ்சது clark அல்லது பள்ளிகுட வாத்தியார் எண்டு ஏதாவது வேலையிலலை இருப்பினம். பெம்பிளையள் வேலைக்கு போறது குறைவு. வீட்டு வேலை தான்.

இந்த கதையின் நாயகி அப்பாத்தா பிறந்தது 1904ம் ஆண்டு முதல் ஆவணி  ஞாயிறு அண்டு. அப்பத்தாக்கு பிறந்த திகதியோ நேரமோ தெரியாது. அவ பிறந்து நான் இந்த ஊருக்கு இடம் பெயரும் வரை சாதிவழமை வேர் ஊன்டின இடம். நான் அப்பாத்தா காவியம் சொல்றபோது நிறைய சாதி பெயர் வரும். அது யாரையும் மனம் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. எப்படி பல சாதி மக்கள் யாழ்ப்பாணத்தில் தம்தம் கடமைகளை செய்து ஒரு சமுதாயமாக முன்னேறினார்கள், வாழ்ந்தார்கள் என்பதை மட்டும் பாருங்கள்.

எனக்கு நினைவு தெரிஞ்சனாளிலை அப்பாத்தக்கு ஒரு 60 வயசு இருக்கும். நல்ல அழகான சிரிப்பு , வெத்திலை போட்டு போட்டு வெத்திலை காவி படிஞ்ச பல்வரிசை. தினமும் காலையிலை கரி  போட்டு பல்லு துலக்கினாலும் பல்லு ஈறுகளிலை வெத்திலை காவி படிஞ்சிருக்கும். ஆனால் எப்பவும் கடைவாயிலை வெத்திலை சாறு வழிஞ்சு கொண்டிருக்கும். அதுவே அவவுக்கு ஒரு தனி அழகை குடுக்கும்.

அவ சீலை கட்டுறது  வித்தியாசம். சீலை கொய்யகம் பின்னுக்கு தான்  இருக்கும் . எப்பவுமே வெள்ளை ப்ளௌஸ் போடுவா. அவவிண்டை கொண்டை  கூட வித்தியாசம். இரண்டு பக்க கன்னத்து மயிரையும் தனித்தனியா பின்னி பிறகு பின்பக்கம் நடுவிலை ஒண்டாக பின்னி, பிறகு மிஞ்சின கீழை தொங்கிற மயிரை எல்லாம் அந்த குறுக்கு பின்னலிலை செருகி ஒரு வெள்ளி கம்பி போட்டு இறுக்கி இருக்கும். அந்த வெள்ளி கம்பி  ஒரு பக்கம் சின்ன கிண்ணம் இருக்கும். அது காது தோண்டி, மற்ற பக்கம் ஊசியக  இருக்கும். அது பல்லு தோண்டி.

அப்பத்தா 10 வயசாக இருந்தபோது 8 ஊர் அம்மன்களும் முனை கடல்கரையிலை ஆடி பூரத்தண்டு ஒன்று கூடல் திருவிழாவில் 1 ரூபா நாணயம் அளவு குங்கும நிற பச்சை அவ அம்மா செல்லாச்சன் வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லவும் நாண்டு  கொண்டு நிண்டு  குத்தி கொண்டாவாம். அவ அப்பு அய்யாக்கண்டுவும் சரி விடு செல்லாச்சன்  ஒத்தை பெண்பிளைப்பிள்ளை கேக்கறா எண்டு சொல்லி 5 ரூபா குடுத்து பச்சை குத்த விட்டாரம். அவவட வயசுக்கு நல்ல பலத்த தேகம். ஒரு கூனல், நொண்டல், மூட்டு வலி ஒண்டும் இல்லை. காய்ச்சல் தலை இடி எண்டு படுத்ததேயில்லை.

அப்பத்தாவின்  அம்மாக்கு பிறந்த ஊர் இத்தியடி. என்ர ஐயா  ஊரும் அதுதான். என்ட  அம்மய்யா ஊர் இத்தியடிக்ககு அடுத்த ஊர் பிடாரிகுளம். எங்கட ஊரிலை மாப்பிள்ளை கேட்டுபோறதுதான் வழக்கம். இந்தியா தமிழர் மாதிரி பெண்கேட்டு போறதில்லை. கலியாணம் முடிவானால் சீதனமாக பெண்ணுடைய குடும்பம் தம்பதிகளுக்கு அவரவர் தகுதிகேர்ப்ப ஒரு வீடு குடுப்பினம். மாப்பிள்ளை பென்வீட்டிலை  வந்து வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். இந்தியாவிலை வீட்டோடை மாப்பிள்ளை எண்டு இழக்காரமாக  பேசுவினம் ஆனல் எங்கடை ஊரிலை அதுதான் சம்பிரதாயம்.

ஆனால் அப்பத்தாவிண்டை அம்மாக்கு இத்தியடி இலை  சீதன வீடு இருந்தும், வீட்டுக்கு ஒத்தை பிள்ளை அய்யாகண்டுவை கட்டினதால காரைகலட்டிக்கே அவவை வந்து வாழும்படி கலியாண பேச்சிலையே ஒத்துகொண்ட விசயமனபடியால் வீட்டு பெறுமதிக்கு காசும், நிறைய நகை நட்டும்  மற்ற பட்டு,பாத்திரம் வீட்டு சாமான் எல்லாம் குடுத்து வாழ அனுப்பினவையாம். ஐயாக்கண்டுவுக்கும் செல்லாச்சனுக்கும் ஒரு குழந்தை. அதுவும் பெண் குழந்தை, அதுக்கு பெயர் பொன்னாச்சன். அதுதான் எங்கடை அப்பத்தா. எங்களுக்கு அவ கிட்டின சொந்தம் எண்டில்லை ஆனல் அப்பாச்சிக்கு 4 விட்ட மச்சளாம். ஆனல் இரண்டுபேரும் சொந்த மச்சாள்மார் மாதிரி வாரப்பாடக இருப்பினம்.

என்ற வயசு பிள்ளையள்  எல்லாம் அவவை அப்பத்தா எண்டுதான் கூபிடுவம் அம்மா வயசு ஆக்கள் பொன்னு மாமி எண்டு வாரப்பாடக கூப்பிடுவினம். என்ரை அம்மாச்சி, அப்பாச்சி வயசுக்கரர் எல்லாம் அவவை முறை சொல்லி கூப்பிடுவினம். மச்சாள் அல்லது அக்கா. அப்பத்தாவிண்டை முறை மச்சான் கணவதி என்கிற கணபதிபிள்ளை. ஐயாக்கண்ணுவிண்டை மூத்தக்கா மகன். நல்ல வாட்ட சாட்டமான ஆம்பிளையாம். நான் கண்டதில்லை. 1940ம் ஆண்டு ஒரு தீபாவளியண்டு செத்து போனாராம். அந்தக்காலத்திலை கல்கத்தாவிலை படிச்சு கலை  மாணி பட்டம் வாங்கினவராம். கொழும்பிலை வெள்ளை காரனோடை 1920ம்  ஆண்டு தொடக்கம் அரசாங்க வரி திணை களத்திலை மேலதிகாரியாக வேலை பாத்தாராம்.

இவ்வளவுக்கும் ஒருத்தரும் கணவதியை மாப்பிள்ளை கேட்டு போக இல்லையாம் . ஏனெண்டால் அவருக்கும் அப்பத்தாக்கும்  தான் கல்யானம் எண்டு எல்லாருக்கும் தெரியுமாம். அப்பத்தா 12 வயசிலை பெரியபிள்ளை ஆனபோது பெரிய அளவிலை சடங்கு வைச்சு ஊரை எல்லாம் கூட்டி சாப்பாடு போட்டு  சன்னதியிலை ஏழையளுக்கு அன்னதானம் குடுத்தினமாம்.

எங்கடை குடியை பெரிய வெள்ளாளன் குடி என்பினம். ஒவ்வொரு பெரிய குடிக்கும் முறை செய்ய எண்டு குடி மக்கள் இருப்பினம். துணி வெழுக்க வண்ணான் மயிர் வெட்ட அம்பட்டன், சவம் தூக்க கோவியர் பறை அடிக்க இன்னார், சவம் எரிக்க இன்னார் என்று இருப்பினம். என்ரை  காலத்திலை அவையள் அடிமையாக  இருந்ததில்லை ஆதியிலை அப்பிடித்தான் எண்டு என்ர  அம்மையா  சொல்லும். இனி ஒவ்வொரு ஊரிலையும் குடிக்கு தர்மபரிபாலனம் பண்ண எண்டு ஒருவர்  இருப்பார். எங்களுக்கு தலைக்கட்டு எங்கடை அம்மையா. அவர் இளைப்பாறிய பிரக்ராசி. இளைப்பாறியபின் தனியாக வழக்குகள் எடுத்துக்கொள்வார் . வயல் குத்தகை வர்ற  பென்ஷன்  எண்டு லக்ஷ்மி வாசம் வீட்லை. ஊரிலையும் நல்ல மரியாதையை. இதே மாதிரி மற்ற குடியளிலையும் தலையாரி, மூப்பன், போடியார், எண்டு பரிபாலனம் செய்ய ஒரு ஆள் இருக்கும். அம்மையாக்கு  பெயர் ஞானபிரகாசம். அம்மாச்சிக்கு பெயர் அன்னலட்சுமி . பெயருக்கு ஏற்ப லட்சுமிகரமானவ. இரண்டு  ஆண் பிள்ளைகள் அம்மா  கடை குட்டி ஒத்தை  பெண். மூத்தவர் டாக்டர் கார்த்திகேசு சிறுபிள்ளை வைத்திய நிபுணர், இரண்டாவது மகன் பிரதம நில அளவையாளர் வேலுப்பிள்ளை அம்மாக்கு பெயர் முத்துமணி. அந்த காலத்து HSC முடிச்சவ.

அப்பத்தா வயசுக்கு வந்தபொழுது அவளுடைய தூம சீலையை எடுக்க வண்ணாத்தி முத்துப்பேய்ச்சி  வந்தாளாம். அவளுக்கு ஆர் ஆர் வீட்டிலை எப்ப தூம சீலை எடுக்க வேணுமெண்டு தெரியுமாம். திகதி மனப்பாடம். அப்பாத்தா  வாழ்க்கையிலை முதுப்பேய்ச்சி பெரிய அங்கம் வகிப்பாள்  எண்டு கடவுளுக்குத்தான் தெரியுமாம்.

அப்பாத்தா  வீடு எங்கடை வீடில்லை இருந்து மூண்டு வீடு தள்ளி முன்னுக்கு இருந்தது. ஆனால் அவவுடைய பெரும்பொழுது எங்கடை வீடில்லை தான்  கழியும். அம்மாவுக்கு அவமேலை அலாதி அன்பு. பொன்னுமாமி, பொன்னுமாமி எண்டு உயிரையே வைச்சிருந்தா. எங்கடை ஊரிலை எல்லாருக்குமே அவவை பிடிக்கும். ஆனால் மகாத்மா காந்தியையும் வெறுக்க ஒருவன் இருந்ததது போலை அப்பத்தாவை வெறுக்கவும் ஆக்கள்  இருந்திருக்கினம்

1975ம் ஆண்டு நான் advance level எடுத்து போட்டு பரீட்சை முடிவுக்காக கத்திருந்தவேளை. கடர்கடைக்கு சிநேகிதரோடை நீந்த போயிருந்தேன். நீந்தி  முடிச்சபின்பு அப்பத்தா மத்தியானம் செய்த ஒடியல் கூழ் பற்றி அவங்களுக்கு சொன்னேன். அவவோடை கை ருசியே ருசி எண்டன்.  அதுக்கு முத்து மாமி மகன் அழகு சொல்லுறான், அப்பத்தா நல்ல பெம்பிளை இல்லை எண்டு. எனக்கு மூக்கு முட்ட கோவம் தம்பி அவனை அடிக்க போயிட்டான். நான் அவனை சமாதானம் பண்ணி ஏன்டா அப்பிடி சொல்லுராய்  எண்டன். அவ அரண்மனை வீட்டிலை ,(அதுதான் எங்கடை வீடு , ஊரிலையே பெரிய வீடு, ஆறு பெரிய அறையள் ஒரு பெரிய களஞ்சிய அறை, இரண்டு சமையல் அறை. ஒண்டிலை மரக்கரறி  மாத்திரம் காயச்சுவினம். அது ஒன்றும் அரண்மனை இல்லை அனால் ஊரிலை பெரிய வீடு) காலம் களிச்சாப்போலை அவசெய்த பாவம் இல்லை எண்டு ஆகியிடுமே என்கிறான். அவவின்ர ஒரே மகன் முத்து மாமா ஏன்  இவவை பாக்க வாறது இல்லை. சரிடா அப்பத்தா செய்த பாவம்தான் என்ன.

நீ அவவை கேள் அல்லது உன்ரை அம்மாவை கேள் என்கிறான். நானும் தம்பியும் கனத்த மனத்துடன் வீட்டுக்கு போனம். ஏதோ சாட்டுக்கு சாப்பிட்டிட்டு அம்மா வரும்வரையும் காதிருக்கிறம். ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக கழிகிறது. கடைசியாக அம்மா சமையல் அறையால் வெளிய வாறா. அம்மா என்கிறேன். என்னடா நீங்கள் இன்னும் படுக்கையில்லை. மணி பத்தாகுது. அம்மா இங்கை வாங்கோ , நாங்கள் ஒண்டு கேக்க வேணும். அம்மா புதிராக எங்களை பாக்கிறா. என்னடா கேளுங்கோ என்கிறா. ஏன் அம்மா முத்து மாமா அப்பத்தாவை பாக்கவாறயில்லை. அம்மா திரு திரு எண்டு முழிக்கறா, அழகு சொல்லுறான் அப்பாத்தா  பாவம் செய்தவவாம். அம்மா அதிர்ந்து போகிறா.

ம்ம் !!ஆ ஆ!!  எண்டு சொன்னவ, அம்மாவுக்கு பொய் சொல்ல சரியாக வராது. அது பாவம் இல்லையடா  விதி என்கிறா. அந்த விதி என்னம்மா என்கிறோம். சரி தலைக்கு மேலை வெள்ளம் போயிட்டுது சாண்  போயென்ன முழம் போயென்ன, சொல்லுறன், கதவை மூடு என்கிறா.
அம்மா சொல்ல சொல்ல எனக்கு இடி இறங்கியது போல் ஒரு உணர்வு. அப்பாத்தா  உனக்குள்ளை இப்படி ஒரு  சோகமா? கரைந்து போகிறோம் ............


தொடரும்....