பக்கங்கள்

அப்பத்தா காவியம்-பகுதி 3-சாதி உரைச்ச புராணம்

அப்பத்தா காவியம் - பகுதி 3

சாதி உரைச்ச  புராணம் 

எட  இவ்வளவு நேரமா ஊர்கதை சொன்ன நான் என்ரை பெயரை சொல்லாமல் விட்டிட்டன் , என்ரை பெயர் மணி, அக்கா பெயர் மங்கை , தம்பி பெயர் சங்கரன் , முதல் தங்கச்சிக்கு பெயர் வடிவு இவ்வளவு இரத்தின சுருக்கமா பெயர் வைச்ச ஐயா கடைசி தங்கச்சிக்கு மட்டும் நீட்டி முளக்கி   கோணேஸ்வரி எண்டு பெயர் வைச்சிட்டார். அவர் மேல்கோட்டு நீதவான். அது அரசாங்க உத்தியோகம். ஒவ்வொரு ஐஞ்சு வருசத்துக்கு இடமாற்றம் வரும், அந்த இடத்துக்கெல்லாம் அம்மாவும் கூட போயிடுவா. திருகோணமலை இலை ஐயா நீதவானாக வேலை பார்த்தபொழுதுதான்   அம்மா கடைசி தங்கச்சியை உண்டாகினா, அதுதான் இந்த பெயர் கோணேஸ்வரி. ஐயாவுக்கு பெயர் சங்கரவேலன். ஐயாவின்ரை அம்மா, அதுதான் எங்கடை அப்பாச்சி தங்கமுத்து, அப்பத்தா ஊர் இத்திக்கண்டல்காரி.

மீண்டும் அப்பத்தா காவியம். அப்பத்தா வாழ்கையை புரட்டிபோட்ட, 1920ம் ஆண்டு ஆடி பூரம் முடிஞ்ச அடுத்த நாள்.

எல்லாம் முடிஞ்சுது எண்டு சும்மா இருக்காமல் மறுநாள் காலமை  சூரியன் வழக்கம் போல உதித்தது. ஊர்சனமெல்லாம் காலமை எழும்பி முத்து மாரி சொன்னதையே திருப்பி திருப்பி யோசிக்கினம். ஒருத்தர் கூட எழுதி வைச்சு பாக்க யோசிக்கையில்லை. என்னடா இது இதுக்கு என்ன அர்த்தம் அதுக்கு என்ன அர்த்தம் எண்டு மறுகி  போகினம். வீட்டு வேலையளை செய்து செய்து யோசிக்கினம். ஒருத்தருக்கும் ஒண்டும் விளங்கயில்லை.

தலைக்கட்டு பெண்டில் சொல்லுறா அம்மன் வலும் உக்கிரமமா நிண்டா, காலமையே போய்  ஒரு செம்பு பால் அபிஷேகம் செய்யவேணும்என மனதுக்குள்ளை வேண்டிக்கொள்ளுறா. அப்பிடித்தான் காரைக்கலட்டி எல்லா வீட்டு பெண்டுகளும் இதையே யோசிச்சினம்.

எங்கடை ஊரிலை அந்த காலம் எல்லாருமே வசதியானவை, நூலிடை பிடிச்ச மாதிரி ஊர் வழக்கம், சம்பிரதாயம் எண்டு ஊறிப்போனவை. அதுமாதிரியே நடந்தால் எல்லாரும் ஒன்டாக  நிண்டு  கூடி மற்றவைக்கும் உதவி செய்வினம், அது கலியாணமோ , கருமாதியோ, பிள்ளைப்பெத்தோ எல்லாம் ஒண்டுதான். ஆனால் கொஞ்சம் இசகு பிசகாக அல்லது வழக்கத்துக்கு மாறாக நடந்தால் எல்லாரும் திரு! திரு ! எண்டு முளிஞ்சுகொண்டு தலைக்கட்டை பாப்பினம். தலைக்கட்டு
முத்துமாரியிட்டை முறையிட்டு, பூக்கட்டி போட்டு ஒரு முடிவுக்கு வருவினம். இப்ப எவ்வளவோ முன்னேறியிட்டினம் எண்டு அம்மா சொல்லும்.

அதே மாதிரிதான், சாமி  கும்பிடக்கை,எல்லாருமே, "ஆத்தா எல்லாரும் நல்லா  இருக்கவேணும் , எல்லாரையும் வாழவை  தாயே" எண்டு வேண்டுவினமாம், சிலபேர் மாத்திரம் எல்லாரும் வாழவேனும் ஆனால் தாங்கள் சிறு துக்காணி கூட இருக்கவேணும் எண்டு கேப்பினமாம். அம்மையா சொல்லும் " எல்லாரும் அழிஞ்சுபோக நான் நல்லா வாழவேனும் எண்டு கேக்கிறதை விட இந்த வேண்டுதலுக்கு அம்மாளாச்சி காது குடுக்கும்" எண்டு. எல்லா ஊரிலையும் இருக்கிற மாதிரி ஈயை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கிற சிறு கூட்டமும் இருந்ததாம். கருப்பு கருப்பாக சத்தி  எடுத்தன் எண்டு நீங்கள் பரியாரியாரிட்டை  போனால், நாளைக்கு பக்கத்துவீட்டு காரன் " என்ன மச்சான் காகம்  காகமாக சத்தி எடுத்தியாமே?" எண்டு கேப்பானாம்.

செல்லாச்சன் காலமை எழும்பி வீட்டு வேலை எல்லாம் முடிச்சு "பொன்னு, பொன்னு "  எண்டு  மகளை தேடுறா , பொன்னு  இன்னும் நித்திரையாகவே இருக்கிறா. "எடியேய் பொன்னு  இன்னுமா நீ நித்திரை, எழும்படி, நான் அம்மாள் கோவிலிக்கு ஒரு செம்பு பால் குடுத்துட்டுவாறன், அம்மாளாச்சி நேற்று வலும்  கோவமா நிண்டா.எழும்படி ஐயாவுக்கு புட்டவிச்சு முட்டை பொரியல் வைக்கவேணும் " என்றா. புரண்டு படுத்த பொன்னு " ஆத்தா உடம்பை அடிச்சு போட்டது மாதிரியிருக்கு" என்றா. "உனக்கென்ன காய்ச்சலே?" எண்டு மகளிண்டை நெத்தியை தொட்டுபாக்க குனிஞ்சவ "ஆத்தே ! உன்னிலை பிண நாத்தமடி, நேற்றுகட்டின சீலையும் இறவுக்கையும் , மூதேவி எழும்பி குளிச்சு சீலை சட்டை மாத்தடி" எண்டவ அயாகண்டுவிட்டை "இஞ்சருங்கோ, அம்மாளாச்சிக்கு ஒரு செம்பு பால் குடுத்துட்டு வாறன்" என்றா.

இதே கதிதான் கணவதி என்கிற கணவதிப்பிள்ளை வீட்டிலையும். கணவதியின் அம்மா முத்தாச்சன் வீட்டு வேலை எல்லாம் முடிச்சு , தன்  ஏக புத்திரன் கணவதியை தேடுறா, கணவதியோ நல்ல நித்திரை. "எடை மோனை கணவதி, எழும்படா இந்த மாட்டு வண்டிலை கட்டு நான் அம்மாளாச்சிக்கு ஒரு செம்பு பால் குடுத்துட்டு வாறன்" என்கிறா. கணவதியோ"ஆத்தா உடம்பை அடிச்சு போட்டது மாதிரியிருக்கு" என்கிறார். "என்ன உனக்கு காய்ச்சலே?" எண்டு மகனின்ரை நெத்தியை தொட குனிஞ்சவ " என்னடா உன்னிலை பிணவாடை அடிக்குது, நேற்று கட்டின வேட்டியும் சட்டையும், சனியனே குளிச்சு வேட்டி சட்டையை மாத்து , எழும்படா" என்டவ தன் புரிசன் செல்லக்கண்டுவிடம் "போட்டு வாறன்" எண்டு சொல்லி வாசல் படியை தாண்டிறா.

என்னஇது, சொல்லி வைச்சமாதிரி எல்லா பெரியவெள்ளளான் பெண்டுகளும் நகை நட்டுப்போட்டு, பட்டுக்கட்டி , தலையெல்லாம் பூவா கையிலை பால் செம்போடை அம்மன் கோவில் பக்கம் போகினம். முன்னுக்கு தலைக்கட்டு பெண்டில் குதிரை வண்டிலிலை, மற்றவை எல்லாம் மாட்டு வண்டிலிலையும், கால்நடையாகவும் போகினம். வெள்ளாளர் தெரு தாண்ட வரும், பிராமணத் தெரு.

வாசல் பெருக்கி தண்ணி தெளிச்சு கோலம் போட வந்த மங்கள பிரமாணத்தி தன் ஓரகத்தியை பார்த்து "எடியே மரகதம், இங்க வாயேன், இந்த வெள்ளாளக்குடி ஆத்துகாரிக, மங்களகரமா உடுத்தி செம்பிலை பாலேந்தி கிழக்கு பக்கமா போரா, நோக்கு எதாவது தெரியுமோ" என்கிறா. அதுக்கு மரகதம் "தெரியாதோ நோக்கு, உன் ஆத்துகாரர் சொல்லலியோ, நேத்து எட்டூர் அம்மன் கடல் தீர்த்தம் ஆடி முடிய , முத்துமாரி பூசாரி மேல  இறங்கி தலைகட்டுவை கெட்ட, கெட்ட பேச்செல்லாம் சொல்லி வைதாவாம்.  "இதென்னடி கூத்தாயிருக்கு" எண்டு மங்களம் நாடியிலை கைவைச்சு அபினயமே பிடிச்சாவாம்.

பெரிய தம்பிரானுக்கு பூசை செய்து வீடு வந்த விஸ்வநாத குருக்கள் , மருமகள்மாரை தாண்டி வெளி திண்ணையில் உட்கார்ந்து "அடியே காமு, காமு! சித்த வெளியே வாடி" என்கிறார்.  அரக்க பரக்க ஓடி வாரா காமு, அவ கட்டியிருந்த மடிசார் அவவை வேகமாக ஓட விடவில்லை."என்னங்க கூப்பிட்டேளா" என்கிறா முன்வாசல் கதவுக்கு பின்னால நிண்டுகொண்டு. " எடியே ஊரே கலங்கி போய் இருக்கு, நீ மடப்பள்ளியிலை பட்சணம் பண்ணிறியாக்கும், முத்து மாரி  பூசாரியிலை இறங்கி தலைகட்டுவுக்கு சாபமே குடுத்தாவாம். என்னவோ கருவேலம் காடு , விதை முளைக்கிறது எண்டு எல்லாரையும் கலக்கினவ கடைசியிலை, தலைக்கட்டு சந்ததி பரதேசம் போகும், நடு வீட்டிலை ஆலமரம் முளைக்கும் என்டாவாம். "அட பகவானே, பெருமாளே !!" என்கிறா காமு என்கிற காமாட்சி.

விஸ்வநாதக்குருக்கள் அங்கலாய்கிறார், ஒரு நூறு, நூற்றம்பது வருஷத்துக்கு முன்பாக, இந்த பெரிய வெள்ளாளன் குடி தலைகட்டுவும் இன்னும் கொஞ்சப்பேரும் மதுரை மேலை தெருவுக்கு தங்க நாணயங்களும், பட்டு, பீதாம்பரமுமா கொண்டுவந்து இப்பிடி யாழ்ப்பாணத்து பெரிய வெள்ளாளன் குடிக்கு கோவிலுக்கு பூசை செய்ய எட்டு  பிராமணக்குடி வேணும் எண்டு பணிவாக கேட்டு நிண்டினமாம். இவா தமிழ் பேசுறது கேட்டு அவா எல்லாம் சிரிச்சாகளாம். ஆனல் பெரிய வெள்ளான்குடி தளராமல் பேசி, எங்கடை குடியள் எட்டூரிலை குடிமக்கள் சமேதரா இருக்கினம், ஒவ்வொரு ஊரிலையும் காவல் தெய்வங்கள் தவிர நடு  ஊரிலை பெரிய கோவில் கட்டியிருக்கு.எங்களோடை வாற ஒவ்வொரு பிராமணக்குடிக்கும் இரண்டு பரப்பு நிலத்திலை கிணத்தோடை  மூண்டு அறை  கல்வீடு குடுப்பம். மாசாமாசம் ஒரு மூட்டை அரிசி, அரை மூட்டை பருப்பு, அரை மூட்டை உழுந்து குடுப்பம். மற்றும்படி அவைக்கோ, எங்களுக்கோ வாற  நல்லது கேட்டதுக்கு தாரளமா தானம் குடுப்பம் எண்டு விண்ணப்பித்து நின்டினமாம்.

நிலம், பணம் இல்லாத எட்டு பிராமணக்குடிகள் , கட்டின வேட்டியோடை, அவா அவா ஆத்துக்காரிகள், குழந்தைகள் சமேதரா இங்கை வந்து குடியேறினார்கள். அண்டைக்கு அவா மூதாதையர் குடுத்த வாக்குறுதியை மறக்காமல் , இப்பவும் சந்ததி சந்ததியா எங்களுக்கு படியளக்கிரா. என்ரை தோப்பனாரோடை பெரியண்ணன்,  அச்சு இயந்திரசாலை தொடங்க அனுமதி கேட்க, மனம் கோணாமல், நாலு பரப்பு காணியும், பணமும் குடுத்து, வட்டி வேணாம் முதலை மாத்திரம் தவணையிலை தாங்கோ" எண்டு குடுத்த மகா பிரபுக்கள். அவா சந்ததியே பரதேசம் போகும் எண்டால் நாம என்னடி செய்ய எண்டு கண் கலங்குகின்றார் பிராம்மணர்.

பிராமண தெரு தாண்டினா எள்ளு எண்ணெய்  விக்கிற வைசிகர் தெரு. அவையள் எள்ளை  மூட்டை, மூட்டையா வன்னியிலை வாங்கி வந்து, காய வைச்சு, செக்கிலைபோட்டாட்டி, எண்ணையை எடுத்து விப்பினம், எஞ்சின சக்கையை, எள்ளு புண்ணாக்கு எண்டு ஆடு, மாட்டுக்கு தீவனமாக விப்பினம். அவையள் படிக்கிறதது  குறைவு, எல்லாரும் வியாபாரம் தான்.  வைசிக பெண்டுகள் இரவிக்கை போட மாட்டினம், ஆனால் சீலையை குறுக்கு கட்டாக மார்புக்கு மேலை  கட்டுவினம், கீழ் சீலை முழங்காலுக்கு கீழை  ஒரு சாண் , இரண்டு சாண் வரை வரும். தாலிக்கொடி மாத்திரம் ஒரு இருவது பவுண். வைர அட்டியல், எட்டுக்கல் பேசரி, விளைஞ்ச முத்துதோடு எண்டு ஒரு நகை கடையே வந்தது மாதிரி இருக்கும்.  காணாததுக்கு வாய்நிறைய வெத்திலை, ஒண்டோடை ஒண்டு ஒத்து போகாமல் எல்லாம் தனி தனியாக நிக்கும். இப்பத்திய  இளசுகள் சொல்லுங்களே மிக்ஸ் மேட்ச் எண்டு அப்பிடி இருக்கும். ஆம்பிளையலெல்லாம்  பட்டு தலைப்பாகை கட்டி, வைர கடுக்கன் போட்டு, தொப்புள் வரை நீளமா அட்சரக்கூடு பவுன் சங்கிலியிலை கோத்து  கல்லாப்பெட்டிக்கு முன்னாலை பெரிய தொந்தியோடை இருப்பினம்.

பெரிய வெள்ளாளன் குடி பெண்டுகள் கூட்டம் இப்ப பிராமண தெரு தாண்டி வைசிகர் தெரு காலடி வைக்க வைசிகர் பெண்சாதி அங்கமுத்து முறைவாசல் செய்ய விளக்குமாறும் ஓலை  பெட்டியுமா வெளியிலை வாறா. வெள்ளாடிச்சிமார் கூட்டமா  வாறது கண்டு, வெட்கப்பட்டு ஒரு அடி பின்வைச்சு உள்ளை போறா. "இந்தாரும் வைசிகரே!" எண்டு தன்  புருசனை கூபிடுறா. வெளிய வந்த ஏகாம்பரம் செட்டியார், "என்னடி இழவு, விளக்குமாறும் கையுமா, இண்டைக்கு விடிஞ்ச மாதிரிதான்." என்கிறார்.  "தெருவை பாருமோய் தெருவை " என்கிறா அங்கமுத்து". "என்னடி பறையிறாய்" எண்டவர் வேலியிலை மறைப்புக்கு கட்டியிருந்த தென்னோலை கிடுகை  விலக்கி பாக்கிறார்.

"வெள்ளாள  பெண்டுகள் அவை சந்ததியை காப்பாத்து எண்டு அம்மனை வேண்டி போகினம், இவையின்டை தலைக்  கொழுப்புக்கு இது இல்லையடி இன்னும் மேலை இருக்கு, அம்மாள் நேற்று இவை குடிக்கு சாபம் குடுத்தாவாம், இவை சந்ததி பரதேசம் போகுமாம் , அவை பரதேசம் போக எங்கடை வைசியர் சந்ததிதாண்டி மூத்த குடி" எண்டு தன்ரை தொங்கிற மீசையை முறுக்கி விட்டாராம்  ஏகாம்பர செட்டியார். " " சரிதான் போங்காணும், உம்மடை  அப்பையா  கோவில் சொத்தை அள்ளப்போய், தலைக்கட்டு நியாயம் சொல்லி, மொட்டை அடிச்சு கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையிலை ஊர்வலம் வந்ததை மனசிலை வைச்சு பழிக்கு பழி தீர்கிறீராக்கும், பத்து ரூவா கடன் குடுத்து பதினைஞ்சு ரூவாக்கு பத்திரம் எழுதி , இருவது ரூவா வட்டி வாங்கிற கூட்டம், மூத்த குடியாகுமோ, போங்காணும்!! நினைப்புதான் பிழைப்பை கெடுத்துதாம்." என்கிறா  வைசியர் பெண்டில் .

"ஓய் வைசியரே பத்து பிள்ளை பிறந்தால் மூண்டு கூன் குருடு, அந்த பெரிய வெள்ளாளன் குடி எங்கை  உம் குடி எங்கை, எல்லாரும் நல்லா இருக்க வேணும் எண்டு நினைக்கிற குடி அது. அக்குடி அடி அத்து போனால் உம் குடி எப்பிடி வாழும், போங்காணும்,  நூறுமூட்டை எள்ளு புண்ணாக்கு இருக்கு, ஏதோ தவிட்டையோ உமியையோ கலந்து வித்து காசாக்கி குடிக்கு பாவத்தை சேர்த்து வாரும்  ஓய்." எண்டவ சலிச்சுகொண்டே மூலையிலை படுத்திருந்த வலது குறைஞ்ச மகனை தூக்கி மலம், சலம் எல்லாம் கழுவி துடைக்கிறா, ஆத்தா பெரிய வெள்ளான் குடியை காப்பாத்து, அந்த குடி செய்த புண்ணியம் இந்த ஊரிலை மழை பெய்யுது, அவையும் இல்லை எண்டால் கள்ளி மரம் முளைச்சு இந்த ஊர் பொட்டல் காடா போகும்" எண்டு வேண்டினவ, மத்த வீட்டு வேலையிலை எல்லாத்தையும் மறந்து போறா.

பெரிய வெள்ளாளன்  பெண்டுகள் வைசியர் தெரு தாண்டி இப்ப கோவிய தெருவிலை காலடி வைக்கினம். கோவியர் அந்தகாலத்திலை வெள்ளாளர் வீட்டிலை செத்த வீடெண்டால் வீட்டு வெளிவாசலிலை இருந்து சுடலை வரை சவம் காவுவினம், கலியாணம், கருமாதி எண்டால் பெரிய சமையல் செய்ய வருவினம். ராசா காலத்திலை அவையடை சிவிகை தூக்குவினம், யாழ்ப்பாண பட்டினதிலை அவையளை சிவிகையார் எண்டுவினம். அந்தக்குடி ஆம்பிளையள் நல்லா சமைப்பினம். நள பாகம் தான், அவை சமைக்கிறது எட்டூருக்கும் மணக்கும். அதே மாதிரித்தான் மடப்பள்ளியாரும், கோவிலுக்கு சமைப்பினம், ஐயருக்கு உதவி செய்வினம். அவை செய்யிற புளியோதரை, தயிர் சாதம் !! இப்ப நினைச்சாலும் வாயிலை  சலம் ஊறும்.

இந்த இரண்டு சாதியளும்  ஒருநாளும் வெள்ளாருக்கு குடிமக்களாக இருந்ததில்லை. வெள்ளளர்தான் ஒரு காலத்திலை வானம் பொய்ச்சு, பூமி விளையாமல் போக, விளை  நிலத்தை வைசியருக்கு பட்ட கடன் அடைக்க குடுத்துப்போட்டு, வெள்ளாருக்கு வேலைக்காரர்  ஆகிப்போட்டினம் எண்டு அம்மையா சொல்லும். இது ஒண்டும் எழுத்திலை இல்லை. அவயளிலை கனபேர் படிச்ச ஆக்கள். அம்மா காலத்திலை வெள்ளாள ஆம்பிளையள் எங்கடை சவம் காவ எங்களுக்கு தென்பில்லையோ எண்டு கோவியரை விடுறதில்லை.

இனி எங்கடை வெள்ளாள பெண்டுகள் போகப்போற தெரு மிகவும் சுவாரஸ்சியமான தெரு. இந்ததெருவில் வாழும் குடிகள் வெள்ளாளன் குடி நடுக்கூடம் வரை போகக்கூடிய சாதி, அதுதான் வண்ணான்  தெரு அல்லது கட்டாடி தெரு. வண்ணாத்திகள் அல்லது கட்டடிச்சியார்கள் வெள்ளாளக்குடி குடும்பம்களிண்டை சந்தோசமான மண  வாழ்க்கைக்கு அடிகோலியவர்கள். ஒரு பெண் பெரியவளா ஆன நாளிலையிருந்து,  வீட்டுவிலக்குக்கு வாற நாட்களை மனப்பாடமாக வைச்சு அவை கலியாணத்துக்கு ஆயித்தாமோ இல்லையோ எண்டு தீர்மானிக்கிறது அவையள். மாப்பிள்ளை கேக்க போக முதல் வண்ணாத்தியை தான் கலந்த்தாலோசிப்பினம். "இன்னும் ஒரு வருஷம் போகட்டுமாக்கும் நாச்சியார் " எண்டு வண்ணாத்தி சொன்னால் அதை வேத வாக்காக எடுத்து அடுத்த வருசம் வண்ணாத்தியை கேட்டுப்போட்டுதான் கலியாணம் பேசுவினம்.

வண்ணான் குடி வெள்ளாள குடிக்கு, குடி மக்கள்தான். வெள்ளாளன் குடியிலை யாரும் செத்தால் அவை படுத்த தலையாணி, மெத்தை, படுக்கை விரிப்பு எல்லாம் அவைக்குத்தான். பிறகு கலியாண வீட்டிலை வெளியிலை கட்டுற இரண்டு வாழை குலைகளிலை ஒண்டு அவைக்கு போகும். கலியாணமோ, கருமாதியோ எஞ்சி போற சாப்பாடெல்லாம் அவைக்கு குடுத்த பிறகுதான் மற்றவைக்கு. மற்றும்படி தீவாளி, தைபொங்கல் எண்டால் அரிசி, ஒடியல் எண்டு வந்து வாங்கி போவினம். அவையள்  வீட்டிலை நல்லது நடந்தால் காசாகவோ, சீலை சட்டையாகவோ வாங்கி போவினம். அவையள் வீட்டிலை கெட்டது நடந்தால், பெரிய பெரிய அண்டாவிலை சோறு கறிகள், வெள்ளாள பெண்டுகள் செய்து வைக்க அவையள்  வந்து எடுத்துகொண்டு போவினம். இப்பிடி அது ஒரு ஒர்தட்டில் உண்ணும் வாழ்க்கை முறை. அவை வெள்ளாஞ்சாதிக்கு செய்யிற கடமைக்கு வெள்ளாஞ்சாதி அவைக்கு குடுக்குற சன்மானம்.

வெள்ளாள பெண்டுகள் வரிசையை கண்ட வண்ணாத்தி முத்துபேய்ச்சியும் அவபுரிசன் மூப்பனும் வந்து மூப்பன் தோள் துண்டை கக்கத்துக்கை வைச்சு மரியாதையாக குனிஞ்சு "என்னவாக்கும், முத்துமாரியை பாக்க போறியளாக்கும் ?  ஆத்தா நேத்து கோவமா நிண்டவா, என்ன குறையோ? "ம்ஹ்ம்  என்னகுறையோ, காத்திருந்துதான் பாக்கவேணும் " என்ட தலைக்கட்டு பெண்டில் "சரி நான்கள் வாறம் மூப்பன் நேரமாச்சு" என்றா.

இப்ப வெள்ளாடிச்சி பெண்டுகள் அம்பட்டன் தெருவிலை போகினம். வண்ணான்மாருக்கு செய்யிற அவ்வளவு சன்மானமும் அம்படன் அல்லது நாவிதனுக்கும் கிடைக்கும். கலியாண வீட்டுக்கு கட்டுற மற்ற வாழைக்குலை அவைக்கு, இதுதவிர செத்தவீட்டிலை கொள்ளி  வைக்கிறவருக்கு சவரம் செய்தால் அவர் தோள்  துண்டு அம்பட்டனுக்கு, அதேமாதிரித்தான் கலியாண மாப்பிளைக்கு சவரம் செய்தால் மாப்பிள்ளை தோள் துண்டை எடுத்து கொள்ளுவினம்.

எண்ட அம்மையா இளம் ஆளாக இருந்த காலத்திலை, ஒரு ஆம்பிளை கலியாணத்துக்கு ஆயத்தமோ இல்லையோ எண்டு தீர்மானிக்கிறது நாவிதர்தான். இது கொஞ்சம் வித்தியாசமானது. கொஞ்சம் கொச்சை ஆனதும் கூட. கலியாணம் தீர்மானமாகி பந்தல் கால் போட முதல் நாள் மாப்பிள்ளை சவரம் எண்டு ஒரு சடங்கு செய்வினமாம். சந்ததி விளங்க வேண்டியது முக்கியமெனினும்  ஆண், பெண் இருவரது உடம்பு சுகம் ஒரு ஆரோக்கியமான மணவாழ்க்கைக்கு அதைவிட முக்கியமானது என்பதை அந்தக்கால யாழ்பாணத்து ஆக்கள் அறிந்சிருக்கினம்.

அம்மையா ஒருநாள் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. "எடை மோனை! பசி வந்தால் வயிறு காந்திற  மாதிரி, தாகம் வந்தால் தொண்டை வறண்டு போய் தவிக்கிற மாதிரி, மல, சல உபாதை மாதிரி, காமம் என்கிறதும் ஒரு உபாதை.அதுதான் முதல் முதலா நடக்கிற உடல் உறவை "சாந்தி முகூர்த்தம்" எண்டுவினம். ஆண்  பெண் இருவரது உடம்புகளும் சாந்தபடும்." அந்தக்காலத்திலை இப்பமாதிரி விவாக இரத்து மறுகலியானம் என்ட வழக்கம் வெள்ளாள பெம்பிளையளுக்கு இருக்கில்லை. ஆம்பிளையள் கதை வேறை, மூண்டு தரம் கலியாணம் கட்டின ஆம்பிளையளும் இருந்திருக்கினம்.

வாற மாப்பிள்ளை தங்கள் குல வதுவுக்கு நல்ல உடம்பு சுகத்தை குடுப்பாரா எண்ட சோதனைதான் மாப்பிள்ளை சவரம். உடம்பிலை எந்த இடத்திலை சவரம் செய்து பாப்பினம் எண்டு உங்களில் அநேகருக்கு இப்ப விளங்கியிருக்கும். அம்பட்ட பொன்னுதம்பி சொல்லுவாராம்" எந்த பொம்பிளையை கண்டும்  திமிறாத  ஆம்பிளையும் என்ட சவரக்கத்தி பட்டால் காணும் கலங்கி போவான்". முதலே ஒரு கூலியை அனுப்பி மாப்பிள்ளை வீட்டிலை தென்னோலை தடுக்காலை மறைப்பு கட்டுவினமாம். மாப்பிள்ளை வீடு பெம்பிளையள் சமையல் கட்டுக்குள்ளை போயிடுவினமாம். ஆம்பிளை கூட்டம் மாத்திரம் தென்னோலை தடுப்புக்கு வெளியிலை கூடி இருப்பினம்.

மாப்பிள்ளை தலை குனிஞ்ச படி அந்த தடுப்புக்குள்ளை போவாராம். அம்பட்டனும்  சவரக்கத்தியை தீட்டினபடி உள்ளை போவாராம். "வெக்கபடாமல் வேட்டியை அவுக்கவாக்கும் நாயனார்" எண்டு அம்பட்டன் சொல்லுறது கேட்குமாம். பிறகு ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு அம்பட்டன் வெளியிலை வருவாராம். அதிகமா தொண்ணூத்தி ஒன்பது சதவீதமான ஆம்பிளையள் இந்த பரீட்சையில் தேறி விடுவினமாம். "மாப்பிளை சிங்க குட்டி" எண்டு  சத்தமா சொல்லுவாராம். வந்திருந்த ஆம்பிளையள் நாவிதருக்கு ஒரு ரூபா, இரண்டு ரூபா எண்டு சன்மானம் வைப்பினமாம் அங்கனைக்கை ஒண்டு  இரண்டு பேர் மாத்திரம் தான்  தேறாமல் போயிருக்கினமாம்.

சில பேருக்கு மட்டும் நாவிதர் "சேவல் கோழி " எண்டு மெண்டு முளிப்பாராம். அதை கோழி வருத்தம் எண்டுவினம். கனநேரம் தாக்கு பிடிக்காது ஆனால் சேவல் மாதிரி அடிக்கடி தேவைப்படும். இதுக்கு மேலை பச்சையாக நான் சொல்லமுடியாது. இவ்வளவு காலத்துக்கு இரண்டு பேருக்கு மாத்திரம் "சங்கு ஊதாது" எண்டு சொல்லி நாவிதர் தலையிலை துண்டை போட்டு கொண்டு வெளியிலை போயிட்டாராம்.  "சங்கு ஊதாது" எண்ட பட்டம் வாங்கினவருக்கு கலியாணம் நடக்காதாம். ஒருத்தரும் மாப்பிள்ளை கேட்டு போக மாட்டினமாம். "சேவல் கோழி" பட்டம் வாங்கினவை அந்த கலியாணம் தட்டிப்போனாலும், நல்ல வேலையிலை இருந்து காசு பணம் இருந்தால், உதெல்லாம் பாக்க ஏலாது எண்டு கட்டி வைப்பினமாம். அவையும் கலியாணம் கட்டி பிள்ளை குட்டி பெத்து கனகாலம் சந்தோசமாக  சீவிச்சிருக்கினமாம். நாளடைவிலை படிச்ச சனம் கூட, கூட இந்த வழக்கம் இல்லாமல் போச்சாம்.

இந்த தெரு தாண்டினால் அடுத்தது பாதிரி பள்ளி வரும். அது ஒரு கிறீஸ்தவ பாடசாலை. பாதிரி வணக்கத்துக்குரிய தம்பாப்பிள்ளை, நீண்ட வெள்ளை  அங்கியும் , ஒரு கையிலை செபமாலையும் மறு கையிலை வேதாகம புத்தகமுமா நிக்கிறார். அவர் பெரிய வெள்ளாளன் குடி ஆள்தான் ஆனால் சாதி முறை பிடிக்காமல் கத்தோலிக்க சமயத்திலை சேர்ந்து, பாதிரியாகி, மேல்சாதியால் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கிறவர். நடு ஊரிலை கிறீஸ்தவ கோவில் கட்டிறதயோ பள்ளிக்கூடம் நடத்திறதயோ சாதி சனம் ஒத்துக்கொள்ள மறுக்க தண்ட நில புலம் எல்லாம் வித்து ஊருக்கு ஒதுக்குபுறமா இந்த பள்ளியை நடத்துகிறார். அவருக்கு ஊரிலை நல்ல மரியாதையை.

அவரை கண்ட தலைக்கட்டு பெண்டில் "ஏய் இளையவன், வண்டியை நிப்பாட்டு " எண்டவ, வண்டிலாலை இறங்கி. "வணக்கம் சுவாமி " என்கிறா.  "ம்ம்ம் !!! விஷயம் கேள்விப்பட்டன். எல்லாம் கர்த்தருடைய செயல். அவர் எப்பொழுதும் உங்களின் மேல் அன்பாக இருப்பாராக. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும். " எண்டவர் காத்திலை சிலுவை போட்டு எல்லா பெண்டுகளையும் ஆசீர்வதிக்கிறார். எல்லாரும் கும்பிட்டு விடை பெறுகினம்.

அது தாண்ட வரும் ஒரு பொட்டல் காடு வெள்ளாள  பெண்டுகள் அந்த பொட்டல் காட்டையும் தாண்டி அம்மன் கோவிலை போய்  சேருகினம். பூசாரி முதல் நாள் அம்மன்மார் கூடல் முடிஞ்சு நடு நிசிக்கு பிறகு  நித்திரை கொண்டதாலை, அப்பத்தான் குளிச்சு முழுகி அம்மனுக்கு பூசை செய்ய ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார். வெள்ளா பெண்டுகளை கண்டவுடனை, மடிச்சு கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டிட்டு  " வாருங்கோ, வாருங்கோ எனக்கு தெரியும் நீங்கள் வவருவியள்  எண்டு , என்னவோ தெரியாது நேற்று அம்மாளாச்சி படு கோவமா நிண்டா, நல்ல யோசினைதான் இந்த பாலபிசேகம் அவவை கொஞ்சமாவது சாந்தப்படுத்தும்" எண்டவர், குடத்திலை இருந்த தண்ணியை அம்மன் மேலை ஊத்தி கழுவினார்.

அம்மனுக்கு ஒரு பூவைச்சு கற்பூர ஆரத்தி காட்டி  முதலிலை தலைக்கட்டு பெண்டில் பாலை வாங்கி அம்மன் தலையிலை வாக்கிறார். "ஆத்தா இந்த குடியை காப்பாத்து, எல்லாரையும் வாழ விடு தாயி" எண்டு எல்லாரும் கும்பிட்டு கன்னத்திலை போட்டுகொள்ளுகினம் பிறகு மற்ற பெண்டுகள் வரிசையாக வந்து பால் செம்புகளை குடுத்து கும்பிட்டு நிக்கினம். செல்லாச்சன் முறைவர, செல்லாச்சன் பால் செம்பை நீட்ட பூசாரி சரியாய் பிடிக்க இல்லையோ அல்லது செல்லாச்சன் வெள்ளன கையை எடுதுப்போட்டாவோ தெரிய இல்லை, பால் செம்பு தவறி அம்மனுக்கு முன்னுக்கிருந்த பலி பீடத்திலை விழுந்து நசுங்கி போச்சு. அப்பிடியே பால் முழுக்க விரயமா வழிஞ்சு ஓடுது. விழுந்த உயரம் அதிகம்  இல்லை ஆனால் சம்மட்டியாலை ஓங்கி அடிச்ச மாதிரி செம்பு நசுங்கி போச்சு.

செல்லாச்சன் நடு நடுங்கி  போட்டா "ஐயோ ஆத்தா, இது என்ன அபசகுனம் " எண்டவ தலையிலை அடிச்சு "ஐயோ, ஐயோ" எண்டு அழுது புலம்பிறா. ஓடிவாறா  தலைக்கட்டு பெண்டில் "அழாதை செல்லாச்சன் எதோ கை பிழை பாடா  தவறிப்போச்சு" எண்டவ, இளயவனை  பார்த்து  " இன்னும் ஒரு செம்பு பால் வண்டிலிலை  இருக்கு எடுத்து வா"  என்றா . இளையவன் கொண்டு வந்த பாலை செல்லாச்சன் கையிலை  குடுத்து "எழும்பு மச்சாள், பாலை குடு" என்கிறா. செல்லாச்சன் இந்த முறை வலும் கவனமா நடந்து போய், பூசாரி கையிலை வைச்சவ, பூசாரி "கையை எடு தாயி" எண்டு சொல்லும் வரையும் கையை எடுக்க இல்லை. அபிசேகம் முடிஞ்சு , எல்லாரும் சுத்தி கும்பிட்டு பூசாரிக்கு சொல்லிப்போட்டு, முத்து மாரியை இன்னும் ஒருக்கால் சேவிச்சு திரும்பி வீடு போகினம்.

தலைக்கட்டு பெண்டில் சொல்லுறா " இந்தா மச்சாள், இந்த குதிரை வண்டிலிலை நீ ஏறு, இந்தா முத்தாச்சன்!!! தங்கச்சி, நீ மாட்டு வண்டிலிலை ஏறு, மற்ற பெண்டுகளையும் ஏறச்சொல்லு, ஊஹ் !!ஊஹ்!! சரியான வெய்யில், ஏய் இளையவன் குதிரைக்கு தண்ணி காட்டினனியே?" என்றா.
" ஓமாக்கும் " எண்டு சொல்ல, வண்டிலிலை  ஏறி " வண்டிலை எடு" என்கிறா.

வண்டில் கொஞ்ச தூரம் போக, செல்லாச்சன் இளையவனுக்கு கேக்காமல் மெல்லிய குரலிலை சொல்லுறா " அண்ணன் பெண்சாதி!! எனக்கு என்னவோ பயமா கிடக்கு, எல்லாம் அபசகுனமா நடக்குது, வீட்டிலை ஒரு குமர் பிள்ளையை வைச்சுக்கொண்டு, அடி வயித்தை கலக்குது, நேத்து ஒண்டுக்கு போன பொன்னு திரும்பி வர சரியான நேரமாச்சு, மருமகன் கணவதியும் மெல்லிய வெறியிலை நிண்டவன். ஏண்டி இவ்வளவு நேரம் எண்ட, வழி மாறி மற்ற பக்கம் போட்டன் எண்டாள் . " கெட்ட காலம் வரும் அது  மதி கெட்டு வரும்", காக்கைக்கும் தன்  குஞ்சு பொன்குஞ்சு எண்ட  மாதிரி, தலைகட்டு பெண்டில் சொல்லுறா " மச்சாள்!! பொன்னு நீ வளர்த்த பிள்ளை அவ இப்பிடி எல்லாம் செய்ய மாட்டா, அவளை மட்டும் கேட்டு அவளை மனம் நோகப்பண்ணாதை, அவள் தவிச்சு போவாள்"" எண்டவ வெத்திலையை மடிச்சு செல்லாச்சனுக்கு குடுக்கிறா.

செல்லாச்சன் பொன்னுவை கேக்கவும் இல்லை பொன்னு  சொல்லவும் இல்லை. தாய் நினைச்சா மகள் தங்க பவுண் எண்டு, பொன்னு  நினைச்சா தான் தன்னை கொடுத்தது தன்ரை  அத்தானுக்குதானே, அது ஒண்டும் பாதகமில்லை என்டுநினைக்கிறா, ஆனால் அது ஒரு உசிதமான செயல் அல்ல எண்டு விதியை தவிர வேறை ஒருவருக்கும் தெரியவில்லை.

தொடரும் ...









கருத்துகள் இல்லை: