பக்கங்கள்

அப்பத்தா காவியம் பகுதி-9 -இயேசுவின் திருநாமம் கேட்டு வளர்ந்த கரு புராணம்

அப்பத்தா காவியம் பகுதி 9 -இயேசுவின் திருநாமம் கேட்டு வளர்ந்த கரு புராணம் 

ஓ!  வந்துதித்தாய் யேசுவே நீர் கன்னி மரியாளின் திருமகனாய் !
சிந்து மொழி சிறுகாலை உம் பெயர் சொல்லி உதிக்கின்றது !

யேசுவே உம் நாமம் வாழ்க, பர மண்டலத்திலை இருக்கிற பிதாவே !
உம்முடைய நாமம் பரிசுத்தப் படுவதாக, உம்முடைய நாமம் இங்கு வருக !

உம்முடைய சித்தம் பரமண்டலத்தில்  எப்படி இருக்கின்றதோ அப்படியே பூலோகத்திலும்  
இருப்பதாக. உம்முடைய இராஜ்ஜியம் இங்கும் வருவதாக! ஆமென். 

அதி காலையில் மாதா கோவில் மணி ஓசையுடன் எழுந்த திவ்விய சங்கீத ஒலியினால் உறக்கம் கலைந்த பொன்னு குடும்பம், இவ்வளவு நேரம் உறங்கி விட்டோமே என்ற சங்கோச உணர்வுடன், மட மடவென காலை கடன்களை முடித்து வெளியே வர வாசலி ஒரு சுடு தண்ணி போத்தலில் தேத்தண்ணியும், சீனியும், குவளைகள் சகிதம் இருந்தது. அதை கண்டபின்புதான் ஐய்யாக்கண்டுவிக்கு உயிரே வந்தது. அவருக்கு எழும்பியவுடன் ஒரு குவளை சூடாக தேநீர் குடித்த பின்புதான், உடலில் சக்தியே வரும்.

சிறிது நேரத்தின் பின், காரைக்கலட்டியில் இருந்து புறப்பட்ட மாட்டு வண்டிலில்  பல வகை வீட்டுக்கு தேவையான, முக்கியமாக சமையல் பாத்திரங்கள், மண் அடுப்புகள், தானியங்கள், கருவாடு, ஊறுகாய் என பல்வகை பொருட்களுடன் வந்து சேர்ந்தது. ஐயாக்கண்டு, ஊரிலிருந்து புறப்படு முன்பே இவற்றை எல்லாம் ஒரு வண்டிலில் ஏற்றி அனுப்பி இருந்தார்.

பாதிரி அதிரியான் மிகுந்த அதிருப்தியுடன், "இவ்வளவு சாமானும் கொண்டு வர என்ன அவசியம், இந்த ஊரிலை எல்லா சாமானும் இருக்கு, அதைவிட என்னுடைய விருந்தினராக நீஎங்கள் வந்திருக்கிறியள், இதெல்லாம் ஏன் சின்னையா ?" என்கிறார். ஐயாக்கண்டு முந்திக்கொண்டார் "எட மேனை, விருந்தும் மருந்தும் மூண்டு வேளை, பொன்னுவுக்கு குழந்தைபிறந்து நாங்கள் ஊர் போய்சேர எவ்வளவு காலமாகுமோ" அதுவரை விருந்துண்டு கொண்டிருக்கேலாது, அதுக்குமேலை இந்த இடமும், சாப்பாடும் கிறிஸ்தவ சபையினால் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் குடுக்கப்பட்டது அதை எங்களை மாதிரி காசு பணம் உள்ளவை பங்குபோடுறது எப்பனும் சரியில்லை" எண்டார்.

" சரி,சரி என்னவோ, ஏதும் தேவை எண்டால் கேளுங்கோ," எண்டவர் பொன்னுவை பார்த்து "தங்கச்சி எல்லாம் வசதியாயிருக்கே ?"என கேடடார். "எனக்கு எல்லாம் பிடிச்சிருக்கு பாதிரியாரே , இந்த இடம், இங்கை உள்ள ஆக்கள், அமைதியான சூழல், எப்பக்கண்டாலும் ஆசீர்வதிக்கும் பாதிரிமாரும், எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு, நான் இங்கை நல்ல சந்தோசமா இருக்கிறன்" என்றாள் வெகு வெகுளியாக. "நல்லது, உடம்பை கவனமா பாத்துக்கொள்" என்ற பாதிரி விடைபெற்று சென்றார்.

மறுநாளே செல்லக்கண்டு தன் குடும்ப சமையலை ஆரம்பித்துவிட்டா. தேவாலய விடுதி சாமான்கள் வாங்கப் போவோரிடம் பணம் கொடுத்து அண்டாடம் தேவையான மீன், இறைச்சி, இறால் என்பவற்றை வாங்கிக்கொண்டா. அவர்கள் தேவையெனின் பணம் கொடுத்து தேவாலய விடுதியிலேயே சாப்பிட்டிருக்கலாம் , ஆனால் காரைக்கலட்டி பெரிய வெள்ளான் சாதி, திண்டு கெட்ட  சாதி என்பார்கள். பொன்னு குடும்பமோ ஊரிலை வாய்க்கு உருசியாக சாப்பிட்டு பழகிய நாக்கு , தேவாலய எளிமையான உணவை தாக்கு பிடிக்கவில்லை.

1920ம்  ஆண்டு ஐப்பசி  மாசம் பொன்னுவுக்கு லேசாக வயிறு மேடுதட்டி இருந்தது. கேட்பவர்களுக்கெல்லாம் பொன்னுவின் கணவன் சிங்கப்பூரில் வியாபாரம் செய்வதாகவும், சாதக கோளாறினால் குழந்தையை ஒரு அநாதை ஆச்சிரமத்தில் பெறுவதாய் வேண்டுதல் என சொல்லிவைத்தாள். சிலர் "அப்பிடியா, சரி சரி, கர்த்தரே பிள்ளையையும் தாயையும் சுகமாக பிரிச்சு போட்டிட்டு" என வேண்டி போனார்கள். சிலர் "என்னதிது நாங்கள் கேள்விப்படாத வேண்டுதலாய் இருக்கு" என ஐமிச்சமாக நெற்றியை சுருக்கினார்கள். பொடி வைச்சு பேசுவதற்கு அங்கும் ஆட்கள் இருந்தபோதும், அதிரியான் பாதிரியின் உறவினர்கள் என்பதனால் எல்லோரும் வாய் மூடி இருந்தனர்.

இதற்கிடையில் ஐயாக்கண்டு தன் சகோதரி முத்தாச்சனுக்கும், அவள் கணவனுக்கும் கடிதம் ஒன்று முல்லைத்தீவில் இருந்து எழுதியிருந்தார்.  என்ன திட்டம் அவர் மனதில் இருந்ததோ, தன் மனைவி செல்லாச்சன் கரு தரித்திருப்பதாகவும், இப்பொழுது நாலு மாசமாகி விட்தால் தூர பயணம் உசிதமானதல்ல என்றும், முல்லைத்தீவில் பிரசவத்தை வைத்து கொள்வதாயும் எழுதியிருந்தார். மேலும் முல்லைத்தீவு கிறிஸ்தவ தேவாலய விடுதியில் ஆங்கில மருத்துவர்கள் இருப்பதால் பயம் ஒன்றும் இல்லை என்றும், குழந்தை 1921ம் ஆண்டு சித்திரை மாதம் பதினைஞ்சாம் திகதிக்கும் இருபதாம் திகதிக்கும் இடையில் பிறக்கும் எனவும் எழுதியிருந்தார்.

அதைவிட மருத்துவச்சி முத்துபேய்ச்சியை சித்திரை மாசம் பத்தாம் திகதியே  முல்லைத்தீவுக்கு வந்து சேர ஆயத்தங்களை செய்யுமாறும், குழந்தை பிரசவ நேரத்திலும் அதன் பின்பும் பத்திய வகை பராமரிப்புக்கும்  அவளை தேவை படுவதாகவும் எழுதி இருந்தார். தலைக்கட்டு குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கு அறிவிக்குமாறும் எழுதியவர் பொன்னுவைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை, கணவதியின் சுக துக்கங்களை பற்றி கேட்டிருக்கவுமில்லை. எழுதிய கடிதத்தை பொன்னாச்சனுக்கு காட்டிய பின்பே தபால் பெட்டியில் போட்டார். அச்சமயம் பொன்னுவுக்கு அதைவிட வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை. மனசுக்குள் அழுதபடி மவுனமாக இருந்துவிடடாள்.

மற்றும்படி பொன்னு, வந்திறங்கிய அடுத்த நாளே தேவாலய பாடசாலையில் சேர்ந்து விடடாள். ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் என்பவற்றை படிக்க தொடங்கி விடடாள். ஆங்கிலம் பேசுவது எப்படி என்பதற்கு கூட நேரம் ஒதுக்கியிருந்தார்கள். பாடசாலை முடிந்தபின், தையல் வேலை, கம்பளி பின்னுவதெப்படி போன்ற  வகுப்புகளில் சேர்த்துக்கொண்டாள். அங்கிருந்த எல்லோருடைய பெயர்களையும் ஞாபகப்படுத்த மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டாள். 

அந்தோனி, அந்தோனிப்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை, மரியம், மேரி,மரியம்மா, சிஞ்சார், லூர்த்தம்மா, ஜோசேப்பு, ஜோசேப்பன், எலிசபெத், அடம், இமானுவேல், நேசம்மா , ஜீவரத்தினம், சகாயம், செபமாலை, என அத்தனை பெயர்களையும் அச்சரம் பிசகாமல் பழகிக்கொண்டாள். அங்கிருந்த எல்லோருடனும் மிக அன்பாகவும் நேசமாகவும் இருந்தாள். செல்லச்சானுக்கும், ஐயாக்கண்டுவுக்கும் சகசமாக சிறிது காலம் எடுத்தது. சனி, ஞாயிற்று கிழமைகளில் தேவாலய விடுதி சமையலறையில் பொன்னு உதவி செய்தாள்.

அங்குள்ளவர்களுக்கு பொன்னுவில் மிகுந்த பாசமாகவும், நேசமாகவும் இருந்ததோடல்லாமல், அவளை கன்னி மரியாள் என்றும், இயேசு பிரானை ஈன்றெடுக்க போகிறாளென சிறுவர், சிறுமிகள் எல்லாம் நம்ப தொடங்கிவிட்டனர். தம்மிடையே பேசிக்கொண்டரனே அல்லாமல் பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. இது பொன்னுவின் காதுக்கெட்டியபோது அவள் பதை பதைத்து போய்விட்டாள்.

"ஐயையோ! நான் கன்னிமரியாள்  இல்லை, நான் சாதாரண மனுஷி, எனக்கு என்ன குழந்தை பிறக்கும் எண்டு தெரியாது, நீங்கள் எப்படி இயேசு பிரான் எண்டு சொல்லுவியள். இது பெரிய தெய்வ குத்தம் ஆகிவிடும், மரியாள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேளுங்கள்" என பொன்னு அவர்களுக்கு எடுத்து சொல்லி பார்த்தாள். அவர்கள் மரியாள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட போதும் அவர்கள் நம்பிக்கை மட்டும் மறையவில்லை.

பொன்னு பயந்தே போய்விட்டாள், பாதிரி மாருக்கு தெரிய வந்தால் கோபித்து கொள்வார்களே என எண்ணி கலங்கி போனாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதிரியான் பாதிரியிடம் சிறுவர்கள் நம்புவதை சொன்னாள். பாதிரி அதிரியான் மற்ற பாதிரிமாருக்கு விடயத்தை  சொல்ல, எல்லா பாதிரிமாரும் புன்னகைத்தனர், ஒருவர் கூட கோபிக்கவில்லை. பெண் பாதிரி லூசியா சொல்கிறா "பொன்னு! குழந்தைகளும், தெய்வமும் ஒன்று, களங்கம் இல்லாதது, உனக்கு குழந்தை சித்திரையில்தானே பிறக்கும், நத்தார் அன்று இயேசு அவதரித்த தினம், மார்கழி 25ம் திகதி உனக்கு குழந்தை பிறக்காது, அத்துடன் அவர்கள் நம்புவதை நிறுத்தி விடுவார்கள், நீ வீணாக கலங்க வேண்டாம் ".

மனம் சாந்தமடைந்து, நன்றி சொல்லி போனாள்  பொன்னு. பலவேளைகளில் கணபதியின் ஞாபகம் அவளை அலைக்கழிக்கும், அவருடைய அரவணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது. குழந்தை வளர வளர கணபதியின் ஞாபகமாவே இருந்தாள். ஏன் கணபதி கடிதம் ஒன்றுகூட எழுதவில்லை. தன்னை ஏன் வந்து பார்கவில்லை என ஏங்க தொடங்கினாள்.  ஒருவேளை மாமா, மாமி தன்னை நடத்தை கெட்டவள் என நினைத்து கணபதிக்கு வேறு பெம்பிளை பார்க்க தொடங்கி இருப்பார்களோ, சேசே! அப்பிடியிருக்காது, அத்தான் எனக்கு அப்பிடி செய்ய 
மாட் டார், என மனதை தேற்றிக்கொள்வாள்.

கடிதம் கண்ட  செல்லக்கண்டு தீயை மிதித்தவர் போலானார், "எடியே முத்தாச்சன் எல்லாம் குடி முழுகி போச்சடி, கொண்ணனும் என்டை தங்கச்சியும் நல்லாக கோவிச்சு கொண்டினம் போல இருக்கு" எண்டவர் கடிதத்தை வாசித்துக்காட்டினார். முத்தாச்சன் விக்கித்துப்போனா. "என்னதிது, பொன்னு பிள்ளைத்தாச்சியா அல்லது தாயும், மகளும் ஒரே நேரத்தில் உண்டாகியிருக்கிறார்களா, செல்லாச்சனுக்கு கனவயசில்லை, பதினாறு வயசில் கலியாணமாகி பதினேழு வயசில் பொன்னுவை பெத்தவள். இப்ப என்ன முப்பத்தி மூண்டு வயசுதான். முத்தாச்சனுக்கு அதுக்குமேல யோசிக்க முடியவில்லை.

அதான் நான் முதலே சொன்னனே என்ரை ஊர் காரங்களை பற்றி, அதிகமானவை அந்தக்காலத்திலேயே படிச்ச சனம், ஆனால் ஊர் கட்டுப்பாட்டுக்கு அடங்கின சனம். ஏதும் ஊர் கடுப்பாட்டுக்கு  ஏறு மாறாக நடந்தால் இப்பிடித்தான் தறி கெட்டுப்போய் ஏதாவது கோக்கு மாக்காக செய்துவிட்டு திரு திரு என்று முழிப்பார்கள். 

பெரிய வெள்ளாளன் சாதியில் அதுவரை தாலி ஏறாமல் எந்த பெண்ணும் உண்டாகியதில்லை. பொன்னு, கணபதி விடயம் தான் முதல் முதலாக நடக்கிறது. இருகுடும்பமும் ஒருவர் ஒருவரில் அன்புள்ளவர்கள், குடும்ப நலனில் அக்கறை உள்ளவர்கள், எப்படி இந்தவிடயத்தை ஊர் முன் போட்டு உடைப்பது என தெரியாமல், என்னவோ செய்து விடயத்தை இடியப்ப சிக்கலாக்கி, இப்போது செல்லாச்சன் உண்டாகி இருப்பதாக தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.

அலமந்து போனா முத்தாச்சன், தன் மகன் கணவதியில் கோவம் கோவமாய் வந்தது. பொன்னுவை நினைக்கையில் அவவால் தாங்கவே முடியவில்லை, பூவாக பொத்தி காக்கவேண்டியதை இப்பிடி ஊர் ஊரக அலையவிட்டிடான் இந்த பாவி, இது எங்கை போய்  முடியுமோ என சுவரில் தலையை  முட்டிக்கொண்டாள். சுவாமி விளக்கேத்தியவள் சாமி கும்பிட்டு எதோ தெளிவாகியவள் போல் வெளியே வந்தா.

"இஞ்சருங்கோ, ஒருக்கால் தலைக்கட்டு வீடு வரை போயிட்டு வருவம், அண்ணை எழுதின செய்தியை சொல்லிப்போட்டு வருவம்" எண்ட முத்தாச்சனை முறைச்சுப்பார்த்த செல்லக்கண்டு "உனக்கென்ன தலை பிசகே, இந்த பச்சை பொய்யை எப்பிடி சொல்ல, நாக்கழுகி போகாது". எண்டார்.  "என்ன செய்ய இது பொன்னுவின் மான பிரச்சனை, அவளுக்காக நான் இந்த பொய்யை சொல்லுறன், எழும்புங்கோ" என செல்லக்கண்டுவை வலுக்கடடாயமாக அழைத்துக்கொண்டு தலைக்கட்டு வீட்டுக்கு போனா.

தலைக்கட்டுவை கண்டவுடன் முத்தாச்சனுக்கு கை கால் எல்லாம் உதற தொடங்கி விட்டது. தயங்கி வாசலில் நின்றவர்களை வயதான தலைக்கட்டு கண்களை சுருக்கி பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். "அடட, முத்தாச்சனும் புரியனும், உள்ளை வாங்கோ, வாங்கோ" எண்டவர் மரியாதைக்கு தன் easy chairல் நிமிர்ந்து அமர்ந்து வரவேற்றவர் "இங்கை பார் யார் வந்திருக்கிறது" என அடுக்களை பக்கம் பார்த்து சொன்னார்.

இரவு சமையலை மேற்பார்வை செய்துகொண்டிருந்த தலைக்கட்டுபெண்டில் வெளியே வந்து, "வாங்கோ, வாங்கோ! என்ன இந்த நேரத்திலை, எதாவது நல்ல செய்தியோ?" எண்டவ அடுக்களை பக்கம் பார்த்து "ஏய் சின்னத்தாயி, ஒரு தட்டிலை வறுத்த கச்சான் கொட்டையும் , இரண்டு கோப்பை பால் தேத்தண்ணியும் கொண்டுவா" எண்டவ வெத்திலை தட்டுடன் முத்தாச்சன் அருகில் அமர்ந்து கொண்டா.

சிறிது நேர மயான அமைதியை, முத்தாச்சன் முடிச்சு வைச்சா. "நல்ல செய்திதான் அக்கா, ஆனால் கொஞ்சம் பயமாகவும் இருக்கு" எண்டு பீடிகை போட்டா. "சரி நல்ல செய்தியை சொல்லு,  என்ன பயம் எண்டதை பிறகு பாப்பம்" எண்ட தலைக்கட்டு பெண்டில் ஒரு சுருள் வெத்திலையை மடித்து சுண்ணாம்பு தடவ தொடங்கினா. மெண்டு முழுங்கிய முத்தாச்சன் "அண்ணன் கடிதம் போட்டிருக்கிறார், அண்ணன் பெண்சாதி செல்லாச்சன் நாலு மாசமாம்".

"அட நல்ல விஷயம்தானே, உங்கடை குடும்பத்திலை எல்லாருக்கும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எண்டு ஒண்டு தான் பிறக்கும், பொன்னு கலியாணமாகிப்போக வீடு வெறிச்சுப்போகாமல் இன்னொன்று வீட்டிலை வளையவரும், என்ன இப்ப செல்லாச்சனுக்கு ஒரு முப்பது, முப்பத்தைஞ்சு  வயசு இருக்குமே, அவளொண்டும் கிழவியில்லையே, என்ன மச்சாள் உனக்கு ஒரு முப்பத்தி எட்டு இருக்குமே, நீயும் யானை  குட்டி போடுறமாதிரி இன்னொன்டை இவ்வளவு இடைவெளி விட்டு பெத்துப்போடுறது" எண்டார் தலைக்கட்டு ஒரு நமட்டு சிரிப்புடன்.

அவருடைய பகிடி அவ்வளவாக அந்தநேரத்தில் எடுபடவில்ல. சும்மா நாட்கள் எண்டால் முத்தாச்சன் வெட்கப்பட்டு சிரித்தருப்பா, செல்லக்கண்டு ஹோ ஹோ! எண்டு சிரித்திருப்பார். நிலைமையை உணர்ந்த தலைக்கட்டு "என்னவோ பிரச்சனை எண்டியளே என்ன பிரச்சனை?" என வினாவினார். "கணக்கை பாருங்கோ இப்ப நாலு மாசம், இங்கிலீசுக்கு சித்திரை கடைக்கூறிலை தான் பிள்ளை பிறக்கும், அப்பிடி எண்டால் தமிழுக்கு சித்திரை பதினைஞ்சு. அதுதான் பயமாக்கிடக்கு".

உயிர் பாம்பை மிதித்தவ போல் திடுக்கிட்டு நிண்டா தலைக்கட்டு பெண்டில் என்கிற சின்னப்பிள்ளை. "ஐயோ! ஆம்பிளை பிள்ளை எண்டால் அதோ கதிதான், "சித்திரை மாசம் புத்திரன் பிறந்தால் அக்குடி நாசம்" எண்டுவினம். தலைக்கட்டு பெண்டிலுக்கு அந்த முழு வெள்ளாள குடியும்  அவவுடைய குடும்பம். எல்லா குடும்பமும் அவவுக்கு முக்கியம். அதுக்கிடையில் தலைக்கட்டு இடைமறிச்சு "அங்கையொண்டும்  சித்திரையிலை பெடியன் பிறந்து குடி கெடுக்கிறதில்லை, குடி கெடப்போகுது என்றத்துக்கு அது ஒரு சகுனம். அதுவும் அந்தக்கால கதை. என்ன சாத்திரத்திலை எழுதியே இருக்கு? சும்மா, இரு, நீ ஒரு வாழ்வாடிச்சி, விளக்கேத்தின நேரம் இப்பிடி அமங்கலமா கதைக்காதை".

குலுங்கி, குலுங்கி அழத்தொடங்கிவிட்டா செல்லாச்சன். "என்னதிது இளம்பிள்ளையளே? வயசு ஏறினவை, ஆடியிலை கூடப்படாது எண்டு தெரியாதே. எனக்கென்னவோ முத்துமாரி சொன்னது மனசுக்குள்ளை பெரிய பாரமாக்கிடக்கு, காணததுக்கு அடுத்த நாள் செல்லாச்சன் அபிஷேகத்துக்கு கொண்டு போன பாலையும் அம்மன் ஏற்கயில்லை, ஆத்தா இந்தக்குடியை காப்பாத்து தாயே" என சொல்லி அழத்தொடங்கி விட்டா  தலைக்கட்டுபெண்டில்.

"கொஞ்சம் பொறுங்கோ, இரண்டு வாழ்வாடிச்சி மாரும் விளக்கேத்தின நேரம் ஒப்பாரிவையுங்கோ, இந்த குடி உருப்பட்ட மாதிரிதான். எனக்கு ஞாபகம் இருக்கு, பிடாரிகுளத்திலை சித்திரையிலை ஒரு ஆம்பிளை பிள்ளை பிறந்தபோது, கோவிலிலை தாய் தகப்பன் பரிகாரம் பண்ணினது ஞாபகம் இருக்கு.  என்ன பரிகாரம் எண்டு ஞாபகம் வருகிதில்லை, பெடியன் என்னோடைதான் படிச்சவன், வயசாகிதில்லை ... ஐயரை கேடடால்  தெரியும் , எந்த பாவத்துக்கு ஒரு பரிகாரம் இருக்கும்" எண்டார் தலைக்கட்டு.

"அந்த பெடியனை வித்து வாங்கின சண்முகம்" எண்டு கூப்பிடறவை, ஆ!! இப்ப ஞாபகம் வருகுது, தாய் தகப்பன் பெடியனை கோவிலுக்கு தானமாக குடுக்க, ஐயர் தானத்தை ஏற்று, அந்த பெடியனை ஏலத்திலை விடுறதா சொல்லி, ஏலம் கூற, தாய் தகப்பன் இரண்டு தென்னங்கண்டும், ஒரு மாட்டுக்கண்டும் குடுத்து வாங்கினால் அந்த சித்திரையிலை பிறந்த வீரியம் குறையும் எண்டுறவை, பிள்ளை பிறக்கட்டும், சாதகம் எழுதினபிறகு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் எண்டு முடிவெடுப்பம்.

தலைக்கட்டுவின் இந்த உற்சாகமான, நம்பிக்கை ஊட்டும் பேச்சு எல்லோரையும் சாந்தப்படுத்தியது போல் இருந்தது. செல்லக்கண்டு கச்சான் கொட்டையை கொறிக்க ஆரம்பித்திருந்தார். எல்லோரும் கச்சான் கொட்டை சாப்பிட்டு தேத்தண்ணி குடிச்சு முடிய, தலைக்கட்டு பெண்டில் சொல்லுறா "எங்கடை வீட்டிலையும் ஒரு சுப செய்தியொண்டு, எங்கடை கடைசி அன்னலெட்சுமிக்கு கலியாணம் முடிவாகியிருக்கு அடுத்தவருசம் தை 18 பின்னேர நாள் குறிச்சிருக்கு.

"அது சரி எல்லாம் சொன்ன நீங்கள் மாப்பிளை யார் எண்டு சொல்லயில்லையே " என இடைமறித்தார் செல்லக்கண்டு. "இதைத்தான் கலியாண சந்தடியிலை தாலி கட்டட மறந்த கதை  எண்டிறது,  எல்லாம் தெரிஞ்ச இடம்தான், பிடரிக்குளத்திலை என்டை ஒண்டுவிட்ட மச்சான் செண்பகப்பெருமாளின்டை கடைசிப்பெடியன் ஞானப்பிரகாசம். படிச்சு முடிஞ்சு அனுராதபுரத்திலை மேல்கோட்டு அரசாங்க பிரக்கிராசியா வேலை செய்யிறார்.' என ஒரே 
மூச்சில் தலைக்கட்டு சொல்லி முடித்தார்.


கீரை துரைமார் பக்கம், படிச்ச மாப்பிளை, அத்தான் ஒரு மாதிரி உங்கடை பக்கமா தேடி பிடிச்சுப்போட்டியள், சந்தோசம்" என்றா முத்தாச்சான். "அட போ மச்சாள், நான் ஒண்டும் தேடி போகயில்லை, மாப்பிளை அன்னலெடட்சுமியை எட்டூர் அம்மன் கூடலிலை கண்டிருக்கிறார், பிடிச்சு போச்சுதாம். அவருக்கு தாய், தகப்பன் அவர் ஐஞ்சு வயசிலையே செத்துப்போட்டினம். உனக்குத்தான்  தெரியுமே, செண்பகப்பெருமாளுக்கு முதல் தாரத்துக்கு ஆறு பெடியன்களும், ஒரு பெடிச்சியும், முதல் தாரம் சாக இரண்டாம் தாரத்துக்கு தான் எங்கடை மாப்பிளையும், ஒரு தங்கச்சியும்". தாய், தகப்பன் சாக அண்ணிமார்தான் இவையளை வளர்த்து".

"இவற்றை தங்கச்சியை பச்சிலைப்பள்ளியிலை கட்டி குடுத்திருக்கு. மாப்பிளை பக்கம் வன்னிமார் பக்கம். எங்களைவிட சாதி ஒண்டும் குறைவில்லை, அந்தக்காலத்திலை சங்கிலியனை போத்துக்கீசருக்கு காட்டி குடுத்ததெண்டு குலப்பகை இருந்ததென்னவோ உண்மை, ஆனால் இப்ப எல்லாம் மாறிப்போச்சு" எண்டு சொல்லிமுடித்தார் தலைக்கட்டு. "மாப்பிள்ளை அன்னலெட்சுமியை கட்டவேணும் எண்டு தன்ரை அண்ணிமாருக்கு சொல்ல, அவையள் எல்லாம் கூடி பேசி, ஆள் சொல்லி அனுப்பவும் இல்லை, இண்டைக்கு காலமை திடுதிப்பெண்டு வந்து நிக்கினம்."

"அண்ணன்மாரும், அண்ணிமாரும் பெம்பிளையை பாக்கவேணும் எண்டுக்கினம்,  அன்னலட்சுமி பள்ளிக்கூடம் போயிட்டாள். நல்ல காலம் தமையன் வல்லிபுரம் வீட்டிலை நிண்டபடியால் கூட்டி வந்தான். பின்பக்கமா வரப்பண்ணி சீலையை உடுப்பிச்சு கொண்டுவந்து முன்னாலை நிப்பாட்டினன்.  தமையன்காரன் வாற வழியிலை என்ன நடக்குதெண்டு சொல்லி கூட்டி வந்ததிலை எனக்கு பிரச்சினை இல்லாமல் போச்சு, அப்பிடி இருந்தும் என்னை கண்டதும் கண்ணிலை தண்ணி வந்திட்டுது, தான் படிக்க வேணுமாம். என்ன இந்த ஆவணி தானே பதினைஞ்சு முடிஞ்சு பதினாறு நடக்குது.  ஒரு வருஷம் போகட்டும் எண்டு நினைச்சம். கடவுள் சித்தம் அப்பிடியெண்டால் என்ன செய்ய." என முடித்தா சின்னப்பிள்ளை என்கிற தலைக்கட்டு பெண்டில் 

"சாதகம் பொருத்தம் பாக்காமல் ஓமெண்டிட்டியளே?" செல்லக்கண்டு கேட்டார்.  "நல்ல கதை, சாதகம் பொருத்தம் பார்க்காமலோ, அவைக்கும் எங்களுக்கும் சாத்திரி ஒண்டெண்டபடியால் இவளின்டை சாதகம் அவரிட்டை இருக்கும் எண்டு அனுமானிச்சு, மாப்பிளை சாதகத்தை குடுத்து ஏதாவது பொருத்தமான சாதகம் இருந்தால் காட்டும்படி கேட்டிருக்கினம். அவருக்கு இவளின்டை சாதகம் மனப்பாடம். சாத்திரி சங்கரபாணி தேசிகர் பொருத்தம் பார்த்து பத்துக்கு எட்டு பொருத்தம் எண்டு எழுத்திலை குடுத்து கலியாண திகதியும் குறிச்சு குடுத்திடடார். கொத்தானுக்குத்தான் சாதகவிஷயம் கொஞ்சம் தெரியுமே, அவருக்கும் திருப்தி" என்கிறா தலைக்கட்டு பெண்டில்.

" பரவாயில்லையே! கீரைத்துரைமார் பக்கம் வலும் கில்லாடிகள் தான்!!!


கீரை துரைமார் பக்கம் .... என்ன இது .... அடுத்த பகுதியில் விளக்கம்.

தொடரும்....















கருத்துகள் இல்லை: