பக்கங்கள்

அப்பத்தா காவியம்- பகுதி 4-சினை கொண்ட புராணம்


அப்பத்தா காவியம் - பகுதி 4


சினை கொண்ட புராணம்  


தாய் செல்லாச்சன் கோவிலுக்கு போன உடனை பொன்னு  கையை உயர்த்தி, கலைஞ்ச முடியை முடியிறா. ஆத்தா சொன்னது உண்மைதான், சவ மணம் அடிக்குது எண்டு சொன்னவ சீலையை கழட்டி, பாவாடையை மார்புக்கு மேலை குறுக்கு கட்டாக கட்டப்போனவ பாவாடையிலை இரத்தம் துமிச்ச மாதிரி இருக்க கண்டு, இதென்னதிது வீட்டுக்கு விலக்கு வந்து பதினைஞ்சு நாள்  கூட இல்லை எண்டு நினைக்கிறா. தன்னுடைய கன்னி தனம் கேட்டு போனதன் அறிகுறி என்று அவ அறியவில்லை. பிறகு தனக்கு தானே சொல்லுறா "இந்தமனிசன் நேற்று உலுப்பின உலுப்பலிலை கெற்பபையே கலங்கி இருக்கும். என்ன ஒரு உடம்பு , தேக்க மரம் மாதிரி" எண்டு நினைச்சவ, மறுபடியும் உடம்பிலை தீ பரவ ஆரம்பிக்க, வேகமாக கிணத்தட்டிக்கு போக திரும்பினவ, தேக்கு மர  கட்டில் காலிலை கால் விரலை இடிச்சு கொள்ளுறா. 

கிணத்திலை குளிர் தண்ணியிலை தலையிலை வார்தபிறகுதான் மனம் ஒருநிலைப்பட்டுது.  காலமை சாப்பாடு முடிஞ்சு பொன்னு மத்தியான சாப்பாடு செய்து முடியிற நேரமா செல்லாச்சன் உள்ளை வாரா. "ஐயோ என்ன வெயில் " எண்டு சொல்லி சீலை தலைப்பாலை முகத்தை துடைச்சவ "பொன்னு கொஞ்சம் தண்ணி  கொண்டு வா" எண்டவ முன் வாசல் படியிலை புரிசனுக்கு பக்கத்திலை இருந்து  சொல்லுறா "இஞ்சருங்கோ பொன்னுவுக்கும் வயசாகுது, கணவதியை போய் மாப்பிளை கேப்பமே ?" அதுக்கு ஐயாக்கண்டு சொல்லுறார் "அவனுக்கு இன்னும் வேலை கிடைக்க இல்லை கொஞ்சம் பொறு" என்டிறார். பொன்னு  செம்பிலை மோர் கொண்டு வந்து "ஆத்தா மோர் குடியுங்கோ, குளிர்ச்சியாக இருக்கும்" என்கிறா. மோர் செம்பை வாங்கினவ மகளிண்டை முகத்தை பாக்கிறா, பிறகு மனதுக்குள்ளை நினைக்கிறா "இன்னும் பால் வடியிற முகம், இதைப்போய் பிழையாக  நினைச்சனே, நான் சரியான மக்கு". வந்த களைப்பாற சீலை தொங்கலை விரிச்சு படுத்து கொள்ளுறா.

அவ படுத்து ஐஞ்சு நிமிசமுமில்லை கணவதியிண்ட ஆத்தா அரக்க பரக்க ஓடி வாறா "மச்சாள்!! பொன்னு, பொன்னு!! கெதியிலை வாங்கோ " எண்டு  சொல்லுறா. ஐயாக்கண்டு எழும்பி நிண்டு "உள்ளை வா அக்கை, என்ன நல்ல சந்தோசமா வாறாய், என்ன விஷயம்" எண்டுறார். அந்தநேரம் பொன்னுவும் வெளியிலை வாறா. "வாங்கோ மாமி , உள்ளை வாங்கோ" என்றா. "எடியே பொன்னு கொழும்பிலை இருந்து தந்தி வந்திருக்கு, கொத்தானுக்கு வேலை கிடைச்சிருக்கு, நாளைக்கே கொழும்புக்கு கணவதி போறான், மூண்டு மாசம் வேலை சொல்லி குடுப்பினமாம், அந்த மூண்டு மாசமும் இங்கை வர ஏலாதாம். அதுக்கு பிறகு வேலை நிரந்தரமாகி, சம்பளம் மட்டும் தொளாயிரத்து சொச்சமாம் ". அப்போ பொன்னு வெக்கமாகி முகம் சிவந்தாவாம். அப்ப செல்லாச்சன் " அண்ணன் பெண்சாதி, கண்படப்போகுது, அவனுக்கு நாவூறு சுத்தி போடுங்கோ" என்றா.

பிறகு நாக்கை கடிச்சவ " பழைய ஞாபகம் அண்ணன்பெஞ்சாதி , எண்டை மடியிலை வளர்த்தவர் , அந்த நினைப்பு, ஆனால் இனி மருகமகன் எண்டெல்லோ கூப்பிட வேணும்" எண்டு பூடகமா சொல்லுறா. அதுக்கு முத்தாச்சனும் " அது, அந்த மரியாதையை இருந்தால் காணும்" எண்டு பூடகமா பதில் சொல்லுறா.  அந்த இடத்திலேயே தனக்கும் தன்ரை அத்தானுக்கும்  நிச்சயதார்த்தம் நடந்த மாதிரி பொன்னு நினைக்கிறா. வெளியிலை போக திரும்பின முத்தாச்சன் எதோ ஞாபகம் வந்தவ மாதிரி, "பொன்னு! ஒரு மூண்டு மணி மாதிரி வீடு பக்கம் வா, கொத்தான் கொழும்புக்கு கொண்டு போக பயத்தம் பணியாரம் செய்யவேணும், உன்ரை கைப்பக்குவம் எனக்கு வராது" என்றா. "ம்ம்!! வாறன் மாமி" எண்டு வெக்கப்பட்டு சொல்லுறா.

இதுக்கிடையிலை செல்லாச்சன் முன்னுக்கு வந்து " அண்ணன் பெண்சாதி !! மருமகன் கோச்சியிலை சாப்பிட மான் வத்தல் குழம்பும், பால் சோறும் செய்து" எண்டவ, கத்தரிக்காய் பொரியலும் செய்யவே?" எண்டுறா . "என்னவோ, மருமகனுக்கு செய்யவேணும் எண்டு ஆசைப்படுறாய், செய்! செய்!, அவனுக்கு, அதுதான் உன்ரை மருமோனுக்கு உண்டை மான் வத்தல் குழம்பெண்டால் நல்ல விருப்பம், நாக்கை தொங்க போண்டுக்கொண்டு நிப்பான், செய், செய், ஆனால் பொரிச்ச மோர் மிளகாய் வைக்க மறந்திடாதை, உனக்குத்தான் தெரியுமே,மோர் மிளகாய் இல்லாமல் அவனுக்கு சாப்பாடு இறங்காது " எண்டுறா. "செய்திடுறன்  அண்ணன் பெண்சாதி" என்கிறா செல்லாச்சன்.

எங்கடை ஊர் காரங்கள் இதிலை பலே கில்லாடிகள். மருமகனோ மருமகளோ பிறந்தால் மடியிலை கிடத்தி சீராட்டி பாராட்டி வளப்பினம், மூக்கு ஒழுகினால் மூக்கு சீறி கழுவிவிடுவினம், மனசுக்கை நினைப்பினம், "எட  இந்த வழியல் மூக்கை என்ரை மகளுக்கு கட்டினால் அவளுக்கு மூக்கு  சீறியே காலம் போயிடும்". மெதுவாக சிரிப்பினம் , அண்ணன் பெஞ்சாதிக்காரி " என்ன மச்சாள் சிரிக்கிறியள்  எண்டால், ஒண்டும் இல்லையே எண்டு மற்றபக்கம் பாப்பினம். தன்ரை பிள்ளையளுக்கு  சாப்பாடு ஊட்டிவிடுற  மாதிரி ஊட்டி விடுவினம். மருமகள் ஒல்லியா குச்சியாக இருந்தால் "என்ன இது  இவள் உருக்கு நோய் வந்தவள் மாதிரி இருக்கிறாள், இவளை எப்பிடி  மகனுக்கு கட்டி வைக்க, அவண்டை கை பட்டால் இவள் நாலாக உடைஞ்சு  போவாள்" எண்டு  நினைப்பினம். அப்பிடித்தான் ஆம்பிளையளும் , பந்து விளையாட காட்டி குடுப்பினம், பாடம் சொல்லி குடுப்பினம்.

ஆனால் நாக்கு தெறிக்க பெயர்  சொல்லித்தான் கூப்பிடுவினம். சின்ன வயசிலையே பிள்ளையளுக்கு ஒருவர் மேல் ஒருவர் ஆசை வராத மாதிரி பாத்துக்கொள்ளுவினம்.பிறந்த உடனை  பிள்ளையளுக்கு சாத்திரியாரை கூப்பிட்டு சாதகம் பாப்பினம், ஏழில் செவ்வாய், கனபாவம் இல்லையெண்டால் சரி இவனுக்கு இவள் தான் எண்டு மனசுக்குள்ளை பரிசம் போட்டுக்கொள்ளுவினம். ஆனால் அது ஒரு புரிந்துணர்தல் மாதிரி, ஒரு சொந்த மச்சானும், மச்சாளும் இருந்தால், எப்பிடியும் அவை கலியாணம் கட்டுவினம். அப்பிடி ஏதும் ஏறு  மாறான சாதகமா இருந்தால் மட்டும், கொஞ்சம் எட்டவா போய்  பொருத்தமான சாதகமா தேடுவினம்.

பெண் வயசுக்கு வந்தால் மாமன் வீட்டாலை சீர் வாறது, பரிசம் போடுற கதை எல்லாம் கிடையாது. எட்டவே வைச்சுக்கொள்ளுவினம், ஆக உரிமைக்கார மாமிமார் தண்ணி வாப்பினம், அவ்வளவுதான். சொந்த மாமிமார் முட்டையும், நல்லெண்ணையும்  கொண்டுவருவினம். அதோடை சரி. ஆனால் எதுக்கும் மருமக்களிலை ஒரு கண் வைச்சிருப்பினம். ஆரும்  கேட்டால் "ஆருக்கு தெரியும் கடவுளுடைய முடிவு, பாப்பம் இப்பத்தானே பத்து வயசும், பதினஞ்சும்" எண்டு மழுப்பிபோடுவினம்.

மருமக்கள் படிச்சு முடிச்சு வேலை கிடைச்ச உடனை நல்ல நாளா பாத்து போய் மாப்பிள்ளை கேப்பினம். எவ்வளவு சீதனம், எவளவு நகை நட்டு அந்த கதை எல்லாம் கிடையாது. எங்கடை ஊர் நிச்சயதார்த்தம் வித்தியாசமானது. ஐயர் வந்து பத்திரிக்கை வாசிக்கிறது எண்டெல்லாம் நடக்காது. கோவிலுக்கு போய் அருச்சனை செய்தோ அல்லது தலைக்கட்டு வீட்டிலையோ தட்டு மாத்துவினம், பிறகு அண்டு பின்னேரம் பித்தளை தாம்பாளம்கள் நிறைய பல்லு கொழுக்கட்டை செய்து மாப்பிள்ளை வீட்டுக்கு கொண்டுபோவினம். மாப்பிளை வீடுக்காரரும் சொந்த பந்தம் எல்லாருக்கும் வந்த கொழுக்கட்டைகளை குடுத்தனுப்புவினம். அவ்வளவுதான் அதுக்குமேலை அந்த மாப்பிள்ளையை ஒருத்தரும் கேட்டு போக ஏலாது. அதுதான் ஊர் வழக்கம்.

அவ்வளவுதான், இவ்வளவு காலமும் பெயர் சொல்லி கூப்பிட்ட பெடியனை, மருமகன் எண்டு பவ்வியமா கூப்பிடுவினம். அதுவும் மாமியார் "மருமகன்" எண்டு கூபிடக்கை வார்த்தையிலை பல்லு படாமல்தான் மெதுவாக கூப்பிடுவினம். உங்களுக்கு மருமகன் என்ட வார்த்தை "மஹ்மகன் " எண்டுதான் கேக்கும். கலியாணமான பெம்பிளையளும் பெயர் சொல்லி கூபிட்டவனை, அத்தான் எண்டு கூப்பிட்டு முடிஞ்சு அதுக்குமேலை "இஞ்சருங்கோ" எண்டுதான் சாகும் வரை கூபிடுவினம்.

ஆனால் பொன்னு அதுக்கு மேலை ஒரு படி கூட. பக்கத்துவீட்டு தெய்வானை பாட்டி சொல்லுவாவாம் "புரியன் பெயரை பெண்டில் சொன்னால், ஒவ்வொரு தரத்துக்கும் புரியன் ஆயுள் ஒரு வருடத்தாலை குறையும்" எண்டு . கணவதியை பன்னிரண்டு வயசிலை தன்ரை கணவனா நினைச்சவ கணவதி எண்ட பெயரை உச்சரிச்சதே இல்லையாம். எங்கடை குடிக்கு  முத்து மாரி காவல் தெய்வம், குலதெய்வம் பெரிய தம்பிரான் பிள்ளையாரப்பன். "பிள்ளையாரே, தும்பிக்கையானே, தொந்தி வயித்தோனே, முன்னை முழு முதலே " எண்டு கும்பிட்டதெல்லாமல்  "கணவதியரே" எண்டு வாய் தவறியும் சொன்னதில்லை.

ஆகப் பகிடியெண்டால் கணவாய் மீனுக்கு முதல் இரண்டு எழுத்தும் , கணவதியிண்டை முதல் இரண்டு எழுத்தெண்டபடியால் ,கணவாய் எண்டு சொல்ல மாட்டாவாம். " ஆத்தா அந்த காலையிலை படுற மீன் சாப்பிட ஆசையாய் இருக்கு " எண்டு சொல்லுவாவாம். செல்லாச்சனும் "என்னடி அது காலையிலை படுற மீன், எனக்கு தெரியாதே, ஏண்டி உனக்கு மீன் பெயர் தெரியாதே " எண்டால், "களுக் முழுக் எண்டு தசையோடை முள்ளிலாத மீன், அதுக்கு நிறைய மீசை இருக்கும், தலை மயிரை அவித்து விட்டது மாதிரி, ஆ!! ஆத்தா கருப்பு மை இருக்கும்" எண்டா. 'ஏண்டி!கணவாய் எண்டு சொல்லுறதுக்கு ஏன்  இவ்வளவு வர்ணனையும். "என்னவோ வாயிலை வருகுதில்லை" என்டவாம் பொன்னு. "கொஞ்ச காலமா ஒரு மார்கமாத்தான் நீ இருக்கிறாய், முத்துமாரிக்கு ஒரு படையல் வைக்கவேணும்" எண்டாவாம் ஆத்தா செல்லாச்சன்.

ஆனால் ஒரு படி தாண்டியோ அல்லது மற்ற எழு ஊரிலையோ போய்  சம்பந்தம் வைச்சால் சீதனம், சீர் , நகை நட்டு, நிலம் நீச்சு எண்டு எல்லாம் பேசி முடிச்சுத்தான் கொழுக்கட்டை கொண்டுபோய் நிச்சியம் பண்ணுவினம். ஏனெண்டால் அதுக்குபிறவு தீபாவளி சீர், பொங்கல் சீர் எண்டெல்லாம் வழக்கமில்லை. எங்கடை ஊரிலை மாமியார் கொடுமை எண்டு ஒருத்தரும் கேள்விப்பட்டதே இல்லை. அம்மா தான் முதன் முதலா இந்தியாவிலையிருந்து வந்த கல்கி, குமுதம் புத்தகங்களிலைதான் படிசாவாம். இதுக்கு முக்கிய காரணம் மாப்பிள்ளை, பெம்பிளை வீடில்லை வந்து வாழுரபடியாதான் எண்டு அம்மையா சொல்லும்.

அதுக்காக எல்லா கலியாணமும் ஒழுங்காக வாழ்ந்ததெண்டு சொல்ல ஏலாது. ஒண்டு இரண்டு, தடம் புரண்டு போனதுண்டு. அதிகமா ஆம்பிளையள்தான் பிழை விடுறது. குடிப்பழக்கம், கூத்தியா வீடு  எண்டு காசை விரயம் பண்ணி குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கினம். சில பெம்பிளையளுக்கு பிள்ளை பெத்தோடை மனம் குழம்பி முழு குடும்பத்தையும் குழப்பி இருக்கினம். ஆனால் எல்லா தமிழ் ஆம்பிளையள் மாதிரி எங்கடை குடி ஆம்பிளையளும்  பெண் சகோதரம் எண்டால் உயிரையும் குடுப்பினம். அக்கா, தங்கச்சி விஷயமெண்டால் பார்த்து பாக்காமல் செய்வினம். ஐயோ!!  அவள் வாழ்க்கை இப்பிடி ஆச்சே எண்டு மனம் நொந்து போடுவினம். இப்பிடி ஏதும் பிக்கல்  பிடுங்கல் எண்டால், அவையள் தூணாக நிண்டு பெண் சகோதரத்திண்டை குடும்பத்தை தூக்கி விடுவினம்.

அடுத்தநாள் காலமை குதிரை வண்டிலிலை சாமான் எல்லாம் ஏத்தி முடிய செல்லாச்சன் தூக்கு சட்டியிலை கட்டு சாப்பாட்டோடை வாறா, கணவதிக்கு கிட்ட வந்து "இந்தாடா  கணவதி" எண்டவ நாக்கை கடிச்சு  " பழக்க தோஷம், இந்தாங்கோ மருமகன்" எண்டுறா. "என்ன மாமி, இது என்ன புது மரியாதை, டேய்  கணவதி எண்டே கூப்பிடுங்கோ, எங்கை கூப்டுங்கோ மாமி" எண்டு கணவதி வீம்பு பண்ணுறான்.  "சரி கவனமா போட்டு வாங்கோ, பிறவு பேசுவம்" எண்ட பொன்னாச்சன் ஒதுங்கி நிக்கிறா. கணவதி வண்டிலிலை ஏறி அங்கையும் இங்கையும் கண்ணை திருப்பி பொன்னுவை தேடுறார். புரிஞ்சுகொண்ட அவர் ஆத்தா "சரி மோனை போயிட்டு வா, அடுத்த தரம் போககுள்ளை நீ தேடுற ஆளை பக்கத்திலையே வச்சு கூட்டி  கொண்டு போகலாம்" என்றா. தன்ரை வீட்டு சுவர் ஓரமா ஒதுங்கி நிண்ட பொன்னுவுக்கு எல்லாம் கேக்குது. யாரோ ஆயிரம் தாமரை மொட்டுகளாலை அவளுக்கு அபிசேகம் செய்த மாதிரி புல்லரிச்சு போறா.

கணவதி கொழும்புக்கு போய் ஒரு மாசமாச்சு. இரண்டாம் ஆவணி ஞாயிறு காலமை, செல்லாச்சன் காலமையே எழும்பி அடுப்படி கழுவி, வெண்கல பாத்திரம் எல்லாம் கழுவகொண்டு போறா. அப்பத்தான் எழும்பின பொன்னு வாய்க்குள்ளை கரப்பான் பூச்சி பூந்த மாதிரி இருக்கே எண்டு நினைச்சவ பிரட்டி கொண்டு வர "ஐயோ ஆத்தா, ஓடி வா ஆத்தா, என்டை முழுக்குடலும்
வெளியிலை வந்திடும் போலை இருக்கு" எண்டு வெளியிலை வந்தவ "ஓவாக்!! ஒவாக் " எண்டு சத்தி எடுக்கிறா. ஓடி வாறா செல்லாச்சன், மகளிண்டை தலையை பிடிச்சவ "நாசமா போனவளே, தலைக்கட்டு பெண்டில் வாழைப்பழ வாய்ப்பன் சுட சுட நீ தின்னகுள்ளையே யோசிச்சனான், கெலி பிடிச்ச மூதேவி" எண்டு திட்டினவ, மகளுக்கு பித்த வாந்தியில்லை, மசக்கை வாந்தி எண்டு தெரியாமல், "பொறு பொன்னு உள்ளி போட்டு ரசம் வைச்சு வாறன்" எண்டு உள்ளை போறா.

தலைக்கட்டுவிண்டை மூண்டாவது மகளுக்கு அடுத்த கிழமை கலியாணம். பலகாரம் சுட எண்டு செல்லாச்சன் போகக்கை பொன்னுவும் போறா. எஞ்சிப்போன மாவை என்ன செய்ய எண்டு பெம்பிளையள்  யோசிக்க, பொன்னாச்சன் தலைக்கட்டு பெண்டிலுக்கு சொன்னாவாம்  "மாமி நீங்கள் செய்யிற வாழைப்பழ வாய்ப்பன் நல்ல ருசி " எண்டு. "சரியெடி மருமகளே எண்டவ" அரை சீப்பு வாழை பழத்தை உரிச்சு போட்டு சீனியும், போட்டு மிஞ்சின மாவோடை பினைஞ்சு வாய்ப்பன்  சுடுறா, பொன்னுவும் ஏதோ முழு நாளும் பட்டினி கிடந்தது மாதிரி ஊதி ஊதி சாப்பிட்டவா, அதுதான் சமிக்கயில்லை எண்டு தாய் சொல்ல மகளும் அப்பிடித்தான் இருக்கும் எண்டு நம்புறா.

முகம் கழுவி ரசம் குடிச்ச பொன்னு போய் படுத்து கொள்ளுறா. மத்தியானம் சமைச்சு முடிச்சு சாமிக்கு படைச்சு முடிய,காகத்துக்கு வைச்சுப்போட்டு  "பொன்னு!! சாப்பிட வா என்றா, எழும்பி வந்த பொன்னு, எனக்கு கொஞ்சம் சோறும் ஊறுகாயும் காணும் ஆத்தா" என்றா. "இவளுக்கு என்ன, காய்ச்சல் வந்த மந்தி மாதிரி நிக்கிறாள். பரியாரியாரை கூடிவரவே" எண்டுறார் ஐயாக்கண்டு. "சும்மா இருங்கோ இரண்டு தரம் மிளகு ரசம் குடுக்க எல்லாம் சரியாப்போடும்" என்றா ஆத்தாக்காறி.

பிறகும் விதி பொன்னு வாழ்க்கையிலை புகுந்து விளையாடுது. அண்டைக்கு பரியாரி கை நாடி பாத்திருந்தால் கர்ப்ப நாடி ஓடுறதை கண்டு பிடிச்சிருப்பார். பொல்லாத முத்து மாரி  அம்மன், தான் நினைச்சதை, சொன்னதை செய்து காட்டுவன் எண்டு அடம்பிடிச்சு நிக்கிறா. அதுக்கு இந்த பொன்னுதான் கிடைச்சாளா. ஊறுகாயை வாயிலை வைக்க நல்ல ருசியாக இருந்தது, சோத்தை விட்டுப்போட்டு ஊறுகாயாக போட்டு போட்டு சாப்பிடறா. இடையிலை தலை நிமிர்ந்த செல்லாச்சன் "ஏண்டி!! வெறும் ஊறுகாயா சாப்பிடுறாய், சோத்தோடை குளைச்சு சாப்பிடு". "நிறைய சீரகம் போட்ட ஊறுகாய் நல்லா இருக்கு ஆத்தா " எண்டவ மோர் குடிச்சு எழும்பிறா.

பொன்னு யோசிக்கிறா "என்னதிது புளிப்பா சாப்பிட ஆசையாயிருக்கே". ஒருவேளை வயித்திலை பிள்ளையோ? அடிவவுத்தை பிடிச்சு பாக்கிறா, ம்ஹ்ம்!! இருக்காது எண்டு மனதுக்கு சமாதானம் சொல்லிகொள்ளுறா. முத்துபேய்ச்சி முன்னுக்கு வந்து நிக்கிறா, "சின்ன நாச்சியார், மாறு சீலை கொண்டு வந்திருக்கிறனாக்கும்". பொன்னு மெண்டு முழுங்கிறா. "ம்ஹ்ம் இன்னும் இல்லை" என்கிறா  பொன்னு ".  "இல்லையே வந்திருக்கவேணுமே?"" எண்டு கண்ணை சுருக்கி கணக்கு பாக்கிறா முத்துப்பேய்ச்சி, இந்த விஷயத்திலை அவ கணக்கு தப்பாது.  இல்லை!! ஆடி பூரத்துக்கு அடுத்த நாள் துமிச்ச மாதிரி இருந்தது  அதுதான் போலை பிந்தியிட்டுது." கொஞ்சம் யோசினையோடை "இருக்கும்,இருக்கும்" எண்டு தலையாட்டுறா.

பொன்னுவின் விதி எப்படி விழையாடுகிறது எண்டு பாருங்கள்.  முத்துபேய்ச்சி சொல்லுறா " சின்ன நாச்சியார் நான் தலைக்கட்டு கலியாணத்துக்கூட நிக்காமல் முல்லைத்தீவுக்கு ஒரு நடை போகவேண்டி இருக்கு. அண்ணன்றை கடைசி மகளுக்கு தாலிகட்டு, நாளைக்கு பயணப்பட்டால் மூண்டு மாசம் கழிச்சுதான் வருவன். எண்ட மகள் சின்னபேய்ச்சிதான் மாறு சீலை கொண்டு வருவாள், அவளுக்கு எல்லாம் நண்டும், சிண்டுமா சின்ன பிள்ளையள், அடிக்கடி வர ஏலாது, தேவையெண்டால் சொல்லி அனுப்பவாக்கும் , சரி நான் வரனாக்கும்". இப்பிடி சொன்னவ மற்றவைக்கும் தன் முல்லைத்தீவு பயணம் பற்றி சொல்ல போறா.

அடுத்த ஒரு மாசமும் தலைக்கட்டு மகள் கலியாணத்து , பொன்னுருக்கு, பால் தப்பிறது, பந்தக்கால் போடுறது. காலியாண வீடு, விருந்து எண்டு ஓடிப்போச்சு. புரட்டாசி மாசம் பதினைஞ்சாம் நாள் பொன்னுவுக்கு நாள் தள்ளிபோய் இரண்டு மாசம் ஆச்சு. இப்ப பொன்னுவுக்கு நிச்சயமா தெரிஞ்சுபோச்சு வயித்திலை பிள்ளை எண்டு. பொன்னு யோசிக்கிறா "இதை எப்பிடி ஆத்தா, அப்புவுக்கு சொல்லுவன் , ஆத்தா கொண்டே போட்டிடும், இந்த அத்தானை எப்பிடி தொடர்பு கொள்ள, மாமிக்கு சொல்லவோ, ஐயோ!!  எப்பிடி அவ முகம் பாத்து சொல்லுவன்" எண்டு யோசிச்சு யோசிச்சு, தலையை பிய்ச்சுக்கிரா.

புரட்டாசி  பதினைஞ்சு, காலமை செல்லாச்சன் பொன்னுவை பாத்து இதென்னடி உன்ரை முகம் இப்பிடி பாண்டு வருத்தம் வந்தது மாதிரி வெளுத்து போய்  இருக்கு. தட்டிலை போடுற கீரை கரி சாப்பிடறினியோ அல்லது வழிச்சு எறியினறியோ , என்னென்டுதான் கட்டி பூட்டி , குழந்தை குட்டி பெறப்போறியோ. பொன்னுவுக்கு மூண்டு மாசம்.

கெட்ட விதியிலையும், கொஞ்சம் நல்ல காலம். முத்துபேய்ச்சி அரக்க பறக்க ஓடி வாறா, செல்லாச்சன் முத்தத்திலை காயவைச்ச புளுக்கொடியலை அள்ளி கடகத்துக்குள்ளை போட்டு கொண்டு இருக்கிறா. ஓடி வந்த முத்துபேய்ச்சி "வெள்ளாடிச்சியார், ஒருக்கால் உள்ளை  வாங்கோ தலை போகிற விஷயம் கதைக்க வேணும்" எண்டுறா. "என்னடி இது, இந்த நேரத்திலை "
எண்டு சொன்னவ கூட உள்ளை போறா. செல்லாச்சன் காதிலை முத்துபேய்ச்சி சொல்லுறா "சின்ன நாச்சியாருக்கு மூண்டு மாசமா வீட்டுக்கு தூரம் வரயில்லையாக்கும்" எண்டு ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி அவ தலையிலை போடுறா.

"எடியே பொன்னாச்சன் இங்கை வாடி" என்றா செல்லாச்சன். தயங்கி,தயங்கி பொன்னு வாரா. "என்னடி உனக்கு மூண்டு மாசமா வீட்டுக்கு தூரம் வரயில்லையாமே, உண்மையேடி ". ம்ம்ம்!! என்றா பொன்னு. "ஏண்டி நாசமா போறவளே எனக்கு சொல்லி துலைக்கிறதுக்கென்ன" எண்டு ஆதங்கபடுறா பொன்னுவோடை ஆத்தா. "இஞ்சை கிட்ட வரவாக்கும் நாச்சியார், இப்பிடி பக்கத்திலை இருக்கவாகும்" எண்டவ, பொன்னுவிண்டை இடது கையிலை நாடி பிடிச்சு பாத்தவ முகம் வெளிறிப்போறா.  "ஐயோ, மூண்டு மாசக்கரு கை கால் முழைச்சு கெற்ப பையிலை வேரூண்டி நிக்குது, நாடியிண்டை வேகத்தை பார்த்தல் ஆம்பிளை பிள்ளை போலை இருக்கு".

"எடியே மூதேவி யாருக்கடி  உண்டாகினனி? " கேக்கிறா ஆத்தாக்காரி. "அத்தானுக்கு" எண்டு ஒத்தை வார்த்தையில்லை பதில் சொல்லுறா. "ஆருக்கு கணவதிக்கோ, அவனை என்கை எடி கண்டனி". நடந்ததையெல்லாம் விளாவாரியாக சொல்லி முடிக்கிறா பொன்னு. "நான் இப்ப என்னடி செய்ய " எண்டு தலையிலை அடிச்சு அழுறா செல்லாச்சன், மூக்கை சிந்தி சீலை தொங்கலிலை  துடைக்கிறா.

"நாச்சியார் நாலாம் மாசம் எண்டால் வயிறு மேடு தட்டியிடும், ஊருக்கே தெரிஞ்சு போயிடும் , முதலாம் மாசம் எண்டால் ஏதும் மருந்து கிருந்து போட்டு அழிச்சிடாலாம் , இது மூண்டு மாசம், மருந்து போட்டால் தாய்க்கும் பிள்ளைக்கும் .." எண்டு முத்துபேய்ச்சி சொல்லி முடிக்கயில்லை, செல்லாச்சன் அவளை மறிச்சு "எடியே, கொலைகாற வண்ணாத்தி, ஆரும் வயித்திலை தங்கின கருவை அழிப்பினமே, முத்துமாரி காலத்துக்கும் எங்கடை குடியை மன்னிக்காது" எண்டு அழுது புலம்பிறா .

"என்ன செய்ய நாச்சியார் , நிலைமை அப்பிடி, ஒண்டில் பிள்ளை குடுத்தவரை கூப்பிட்டு தாலி கட்ட பண்ணவேணும் அல்லது எங்கையாவது தூரப்போய் பெத்துப்போட்டு, தத்து எடுத்த பிள்ளை எண்டோ அல்லது வழியிலை கண்டெடுத்த பிள்ளை எண்டு சொல்ல வேணும்"என்றா கைநாடி பார்தவ. "சரி அவர்  வரட்டும் பேசி ஒரு முடிவுக்கு வருவம்"என்றா செல்லாச்சன். சொல்லிமுடிச்சவ உள்ளை போய் ஒரு கட்டு பணமும், தங்க சந்கிலியுமா வாறா. "இந்தா முத்துபேய்ச்சி இதை பிடி, விஷயம் காதும்,காதும் வைச்சமாதிரி இருக்கட்டும், ஒருவருக்கும் தெரிய வேண்டாம், எங்கடை குடும்பமானத்தை காப்பாத்து, உன்ரை கையை காலா பிடிச்சு கேக்கிறன் " என்றா வெள்ளாடிச்சி.

பதறிப்போறா முத்துபேய்ச்சி " சின்னநாச்சியாருக்கு இதை நான் செய்வனே, அவ முகம் வாடிப்போனால் என்ட மனம் தாங்காது , நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன், இது எங்கடை குலசாமி மாடசாமி மேலை சத்தியம், ஆனால் இந்த நகை பணம் எல்லாம் வேண்டாம்" என்றா வெகு வெகுளியாக. "பரவாயில்லை வைச்சிரு , பிள்ளையளுக்கு ஏதாவது செய்யலாம், மடிக்குள்ளை வைச்சு கவனமா கட்டு என்றா.  பிறகு செல்லாச்சன் சொல்லுறா "நாளைக்கு பின்னேரமா வா, என்ன முடிவு எடுத்திருக்கு சொல்லுறன், மறந்து போகாதை "

"வாறனாக்கும்" எண்டு வெளியிலை வந்தவ கணக்கு பாக்கிறா , சின்னவளுக்கு இந்த சங்கிலியை காட்டியே ஒரு  நல்ல கட்டாடியா பிடிச்சு போடவேணும். காசிலை ஒரு கல் வீடு கட்ட வேணும். ஒரு அறை இருந்தால் காணும். ஆனால் இந்த மூப்பனை எப்பிடி சமாளிக்க, வெள்ளாடிச்சிமார் தாற காசை கொஞ்சம், கொஞ்சமா அங்கனை இங்கனை சேர்த்துவைச்சது எண்டு சொல்லுவம், ஆனால் சின்ன நாச்சியார் கதை மட்டும் வெளியிலை வரப்படாது எண்டு கங்கணம் காட்டுறா.

பொன்னாச்சன் சாமி விளக்கேத்தி முறை இட்டுக்கொண்டு இருக்கிறா. முகம் கை கால் கழுவி சாமி கும்பிட வந்த ஐயாக்கண்டு மகள் இருந்த நிலையை கண்டு "என்ன மோனை அப்பிடி யோசனை எந்த கோட்டையை பிடிக்க திட்டம்" எண்டு கொண்டு திருநீறு பூசிக்கொண்டு திரும்ப இருந்தவரை, முன்வாசல் கதவை பூட்டி உள்ள வந்த செல்லாச்சன் "இஞ்சருங்கோ இப்பிடி இருங்கோ, ஒரு விஷயம் பேச வேணும் " என்றா. கண்ணை சுருக்கி என்னவா இருக்கும் எண்டு யோசிச்சவர், "சரி ஒரு செம்பு தண்ணி கொண்டு வா" எண்டவர் சாமி அறையிலையே தரையிலை சப்பணம் கொட்டி இருந்து அமர்ந்துகொள்ளுறார் .

தண்ணியோட வந்தமர்ந்த செல்லாச்சன் தணிஞ்ச குரலிலை நடந்தது எல்லாத்தையும் சொல்லி முடிக்கிறா. "மூண்டு மாசத்துக்கு மேலை எண்டால் ஐயர்மார் தாலி கட்ட விடாயினம். தாய்க்கும் பிள்ளைக்கும் சேர்த்து கட்டினதாகும் எண்டுவினம்" எண்டு பெருமூச்சு விடுறா.  முகம் வாடி மகளை பாக்கிறார், முறையா பேசி தாலி கட்டி  இதுதெரிய வந்தால் என்ன ஒரு சந்தோஷமான செய்தி. இது முழுக்குடும்பமும் அழுற செய்தியா போச்சே! எண்டு நினைச்சவர் மகளை பார்த்து கண்ணீர் வடிக்கிறார். பொன்னுவை ஏசக்கூட இல்லை. மிகவும் ஏமாற்றம் அடைந்தவர் மாதிரி அமைதியாக சாமியை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

பொன்னுவுக்கு அழுகை அழுகையாக வருகிறது, அப்புவுக்கு நான் வேண்டாதவளா வந்திடனே எண்டு நினைச்சவ " அப்பு, உங்களுக்கு என்னிலை கோவம் வரயில்லையே, என்ட செவிட்டிலை இரண்டு அடி போட்டு நாலு திட்டாவது திட்டுங்கோ, இப்பிடி அமைதியா இருகாதையுங்கோ" எண்டு அவ அப்புவின்ரை காலை கட்டி பிடிச்சு அழுறா. மகளை தோளிலை பிடிச்சு எழுப்பிறார் "என்னவோ கை பிழைபாடா நடந்து போச்சு, பொறு பாப்பம், கடவுள் ஏதோவது வழிகாட்டுவான்" எண்டவர் "பிள்ளை சாப்பாட்டை எடு , பசிக்கிறது "என்கிறார்.

மத்தியானம் செய்த சோத்தையும் கறிகளையும் பினைஞ்சு உருண்டையாக்கி செல்லாச்சன் குடுக்க எல்லாரும் சாப்பிட கொஞ்ச நேரம் யோசிச்ச ஐயாக்கண்டு சொல்லுறார் "முந்தி என்ரை அப்பு சொல்லும் ஒரு பிரச்சினைக்கு முடிவு தெரியாட்டி தலையாணிக்கு கீழை பிரச்சினையை வைச்சுப்போட்டு நித்திரை கொண்டால், விடியக்காலையிலை ஏதோ ஒரு முடிவு கிடைக்குமெண்டு , நாங்களும் அதை  நம்புவம், விடியும் வரை பொறுப்பம்" எண்டவர் படுத்து கொள்ளுறார், தாயும் மேளும் சமையலறை துப்புரவாக்கி படுக்க போகினம்.

பொன்னு நெஞ்சு பாரத்தை இறக்கி வைச்ச நிம்மதியிலை கெதியாக உறங்கி போறா, அவ ஆத்தாவும், அப்புவும் புரண்டு, புரண்டு படுக்கினமே அல்லாமல் நித்திரை வர வெகு நேரமாச்சு. விடியிற நேரமா இரண்டுபேரும் உறங்கி போயிடுகினம். விடிஞ்சு கன நேரமாச்சு, ஒருவரும் எழும்பயில்லை. மாடுகள் மடிபாரம் தாங்காமல் கத்துதுகள், கண்டு குட்டியள் பசியிலை கட்டறுக்கிறன் எண்டு நிக்குதுகள். வீட்டு நாய் வைரவன் பசிதாங்காமல் முன்கதவை பிராண்டுது, கோழியள்  கொக்கரிச்சு களைச்சுப்போய் பழையபடி கூட்டுக்குள்ளை  போட்டிருந்த உமியை கிண்டி கிண்டி சாப்பாடு தேடுதுகள்.

செல்லாச்சன் திடுக்கிட்டு எழும்பிறா, உடனை அவவிண்டை புத்தியிலை ஒன்று உறைக்கின்றது, "இஞ்சருங்கோ இஞ்சருங்கோ!!"  எண்டு உறக்கமா இருந்த அவ புருஷனை எழுப்பிறா. "என்ன செல்லம் சொல்லு" எண்டுறார். நான் முதலே சொன்னனே பெரிய வெள்ளான் குடி பெண்டுகள் பலே  கில்லாடிகள் எண்டு. "உங்கடை ஒன்றுவிட்ட அண்ணன் மரியாம்பிள்ளை இண்டை மூத்தவன் யாரோ அதிரியானோ, ஜோசேப்பனோ முல்லைத்தீவிலை ஒரு பாதிரி பள்ளி நடத்திறாராம், அங்கை ஏழை பாளையள் தங்கி படிக்க ஒரு விடுதியும் இருக்காம். அவற்றை உதவியை நாடினால் என்ன. வேதக்காரர் இப்பிடி விஷயம் எண்டால் மனம் கோணாமல் உதவி பண்ணுவினம்".

எல்லா விஷயமும் சட்டு பிட்டு எண்டு நடக்கிறது, ஐயாக்கண்டு நாளை மறுநாள் நானும், என் மனைவியும், மகளும் முல்லைத்தீவு வருகிறோம் எண்டு அதிரியானுக்கு தந்தி குடுக்கிறார்.
தலைக்கட்டுவை கலந்தாலோசிக்க அவர்களுக்கு தோன்றவில்லை, அல்லது முத்துமாரியம்மன் தான் சொன்ன சொல்லை காப்பாத்த அவையின்ரை மூளையை மழுங்க பண்ணினாவோ, அல்லது அதுதான் பிரம்மலிபியோ, அவர்கள் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. தலைகட்டுவிடம் சொல்லியிருந்தால், யாழ்ப்பான கச்சேரியிலை பதிவு திருமணம் செய்து, வீட்டிலையே சாமி படத்துக்கு பூசை பண்ணி தாலிகட்டி இருக்கலாம்.

கணவதிக்கு அப்புவுக்கு வருத்தம் கடுமை உடனை வா எண்டால், அவன் உடனை வந்திருப்பான். நிலைமையை எடுத்து சொல்லி தாலிகட்டியிருக்கலாம். அதை ஒண்டுமே யோசிக்காமல் தான் தோன்றி  தனமாக முடிவெடுத்து மட மடவெண்டு எல்லா காரியமும் நடக்கிறது. யாரும் கேட்டால் முல்லைத்தீவிலை இருக்கிற நில புலம் விஷயமா அங்கை போகினம் எண்டும், திரும்பி வர கனகாலம் எடுக்கும் எண்டும், வரும் வரை பக்கத்து வீட்டு அம்புசமக்கா மாடு கண்டுகளுக்கும், கோழிகளுக்கும் தீவனம் போட்டு, பால் விக்கிற காசையும், முட்டை, விடைக்கோழி விக்கிற காசையும் எடுத்து கொள்ளலாம் எண்டும், ஒவ்வொரு  வெள்ளி பின்னேரம் முத்தாச்சன் வீட்டு கதவுகளையும், யன்னல்களையும் திறந்து வைக்க, அம்புசமும் அவ மகளும் வீட்டை துபுரவாக்க்கி, காமாட்சி விளக்கேத்தி, இரண்டு தேவாரம் பாடி, விளக்கை நிறைக்க முத்தாச்சன் யன்னல்கள், கதவுகளையெல்லாம் மூடி, முன் படலைக்கு பூட்டு போடவேணும் எண்டு முடிவேடுக்கினம்.

தலைக்கட்டு வீடுக்கு போய் விவரம் சொல்லுகினம். "போறனியள் ஏன் பொன்னுவை கூட்டிக்கொண்டு போறியள், அவ எங்கடை வீட்டை தங்கலாமே" எண்டு அங்கலாய்கிறா தலைக்கட்டு பெண்டில். அதுக்கு ஐயாக்கண்டு  "அவள் ஊர் பாத்ததாகவும் இருக்கும், இனி வர எத்தனை நாள் ஆகுமோ தெரியயில்லை, எங்கடை கையுக்கை வளந்தவ, பிரிஞ்சு கனகாலம் இருக்கேலாது " எண்டு சொல்லுறார். "அதுவும் சரிதான்" எண்டவ பின்னேரமா வீடுக்குவாறன் எண்டுறா. பின்னேரம் முத்துபேச்சி  வாறா, சட்ட திட்டமா நடகப்போறதை சொல்லி, அடுத்த வருஷம் சித்திரை முதலாம் திகதியே முல்லைதீவுக்கு பிள்ளைபெத்து பாக்க வா என்றா செல்லாச்சான்.

"யாருக்கு பிள்ளை பெத்து எண்டால் நான் என்ன சொல்ல" எண்டுறா விவரம் தெரிஞ்ச வண்ணாத்தி, "பயப்படாதை, நான் பிள்ளை உண்டாகி இருப்பதாய் செய்தி அனுப்பிறன்"எண்டுறா செலாச்சன். அட இந்த வெள்ளடிச்சிமார் பலே கைகாறியள் தான் எண்டு மனதுக்கை நினைக்கிறா முத்துபேய்ச்சி. தவிச்சு போறா பொன்னு , இந்த ஆத்தா என்ன சொல்லுறா, ம்ம்!! எதுக்கும் முல்லைத்தீவு போனபிறகு கதைப்பம் எண்டவ தண்டை அடிவயித்தை தடவி பாக்கிறா, கழுத்தில் தாலி இல்லை எனினும் தாய்மை பொங்கி வழிகிறது, கண்ணீர் வடிக்கிறா.


இதுக்கிடையிலை, முத்தாச்சன் சந்தோசமா ஓடி வாறா "பொன்னு உண்டை அத்தான் கணவதி நாளைக்கு காலையிலை வாறானாம், அவன் வந்த பிறகு பேச வேண்டியதை பேசிப்போட்டு போகலாமே " எண்டுறா. பொன்னு முகம் மாத்திரம் பிரகாசமாகுது, மற்றவை முகத்திலை ஈயாடவில்லை. இவ்வளவு வெளிப்படையா முத்தாச்சன் சொல்லியும் ஒரு வார்த்தை செல்லாச்சன் பேசவில்லை. ஐயாக்கண்டுதான் சொல்லுறார் "என்ன அக்கை கிணத்து நீரை ஆத்துநீர் அள்ளபோகுதே, தீவாளிக்கு கணவதி வருவான் தானே அப்ப பாக்கலாம்".

இப்பிடியா பட்டும் படாமல், நகம் நனையாமல்  நத்தை பிடிக்கினம், இவைக்கு என்ன வந்தது எண்டு நினைச்ச முத்தாச்சன், வலியப்போனால் இப்பிடித்தான் பிகு பண்ணுவினமாக்கும் எண்டு நினைச்சவ ,"சரி வாறன் " எண்டு  திரும்பி பாக்காமல் அவ வீட்டுக்கு போறா. இது  வழக்கமான தம்பி வீடில்லையே, என்னவோ பிரச்சினை போலை இருக்கு , மலிஞ்சால் கடைக்கு வருந்தானே எண்டு தனக்குள்ளையே நினைச்சு கொண்டு யோசனையாக நடந்து போறா.

வந்த அக்கையை சரியா பேசாமல் தவிக்க வைச்சு அனுப்பியிட்டன் எண்டு மனவருத்தபட்டவர், கதவை பூட்டி உள்ளை வந்தார். "பிள்ளை சாப்பாட்டை எடு, வெள்ளன சாபிட்டு படுக்க வேணும். காலமை அஞ்சரை மணிக்கு கோச்சு இளையவன் வந்திடுவான். எல்லாரும் கனத்த மனத்தோடை படுக்க போகினம்.


தொடரும் ...............














கருத்துகள் இல்லை: