பக்கங்கள்

அப்பத்தா காவியம்-பகுதி 7-செண்பக புராணம்

அப்பத்தா காவியம் - பகுதி 7

செண்பக புராணம்

சப்பென்று போய்விட்டது டாப்பர் மாமாவுக்கு. வந்த வேகத்திலேயே கனகாம்பாளிடம் போகிறார்.  "கனகு ஒண்டும் தேறாது, அந்த முத்துப்பிச்சை போட்ட குடியாம், ஒரு ஆம்பிளையும் இரண்டு பெம்பிளையள், தாயும் மேளும் போலை இருக்கு. பாதிரி அதிரியானை பாக்க போகினமாம்" எண்டு முடிக்கிறார். அதிரியான் எண்ட பெயரை கேட்டவுடன், சிலுவையை கண்ட சைத்தான் ஆனாள் கனகு என்கிற கனகாம்பாள். நாங்கள் செய்யிற தொழிலை கடவுள் மன்னிக்க மாட்டாரம், செத்த பிறகு சாத்தான் உலகுத்தான் போவம் எண்டு திருச்சபையிலை பிரசங்கிக்கிறாராம்".

"அவருக்கு ஒண்டும் ஏலாது எண்டால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதானே" எண்டு அடிவயித்துக்கு கீழை பொத்திப்பிடிக்கிறா.  சில இளம் விபச்சாரிகள் வாயை பொத்தி சிரிக்க அவையளுக்கு முகத்திலை இடிச்சவ",இங்கை தினமும் முப்பது பேருக்கு மூண்டு வேளை  சாப்பாடும், படுக்க இடமும் குடுக்கிறன், அவருக்கு ஏலுமே" எண்டவ வெத்திலை சாத்தை பெரிய அருவிபோல் உமிழ்ந்து துப்பிறா. தெறிச்ச எச்சில் துமி டாப்பர் மாமாவின் முகத்திலும் விழுகிறது. அவருக்கு அது பழக்கப்பட்ட விஷயம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் அடுத்த வாடிக்கையாளரை வரவேற்க முன்னுக்கு போகிறார்.

உள்ள வந்த கனகு மனசுக்குள்ளை மறுகிறா " அந்த அதிரியான் பாதிரி ஒரு நாளைக்கு நூறு பேருக்கு மேலை மூண்டு வேளை சாப்பாடும், தங்க இடமும் குடுக்கிறார், அதிலை அரைவாசி நொண்டி, குருடு, அல்லது வயது போனதுகள். மற்றவையும் ஏலுமான வேலையை செய்யுங்கோ எண்டுதான் சொல்லுவாராம். என்ரை நாறல் பிழைப்பெங்கை, அவற்றை பெரிய குணம் எங்கை. எனக்கும் இந்த தொழிலை விட்டால், வேறை என்ன வேலை தெரியும், சொகுசா இருந்து பழகிப் போச்சு, இனி உடம்பை வளைச்சு வேலை செய்யவும் ஏலாது."

"ஊரிலை எனக்கு என்ன மரியாதை, குடி கெடுக்க வந்தவ, தேவடியா, விபச்சாரி, இங்கை என்னை கண்டு  பல்லிளிச்சு நிக்கிற ஆம்பிளையள் தெருவிலை கண்டால் தெரியாத மாதிரி போவினம். இந்த வடிவும், அழகும் போய் வயசு போக எண்டை கதியென்ன" கண்கலங்கி நிக்கிறா கனகு.  சட்டென்று  ஒரு முரட்டு கரம் அவ இடுப்பை வளைச்சிறுக்கி, வெளிநாட்டு வாசனை திரவியம் மணக்க, கனகு எண்டு மந்தகாசமாக அவ பெயர் சொல்லி அழைக்கிறது.

என்னதிது பழக்கப்பட்ட குரலா இருக்கே எண்டு நினைச்சவ நிமிர்ந்து பாக்கிறா. "அட ராமசாமி, சிங்கப்பூராலை எப்ப வந்தனியள்! வாங்க, வாங்கோ எப்பிடி வியாபாரம் எல்லாம்" எண்டு குசலம் விசாரிக்கிறா. "எல்லாம் நல்லா போகுது, இந்தமுறை மனிசி, பிள்ளையளை கூட்டிக்கொண்டு வரயில்லை, இண்டைக்கு காலமைதான் வந்தனான். வந்தநேரம் தொடக்கம் உன்ரை நினைப்புத்தான். அதுதான் மதியம் சாப்பிடாமலேயே வந்திட்டன்." என்றார் ராமசாமி.

"ஆட்டிறைச்சி கறியும், முட்டைக்குழம்பும், சோறும் இருக்கு கொண்டுவரவே" எண்டு தழுக்கிறா கனகு. "முதல் உடம்பு சுகம் பிறகு வயித்துப்பசி" எண்டுறார் சிவந்த கண்களுடன். "இந்தியாவிலை இருந்து மூண்டு புதிசா வந்திருக்கு, செண்பகம் காட்டியிருப்பாரே, எது பிடிச்சிருக்கு" எண்டு கிளுகிளுக்கிறா. "சும்மா போ கனகு, எனக்கு நீதான் வேணும், ஒரு இருவது வருஷம் இருக்குமே முதல் முதலா என்ரை கன்னித்தன்மையை உன்னட்டை இழந்தனான். புது மாடுகள் திமிறும், பழகின மாடென்றால் வண்டிலை ஒழுங்கா இழுக்கும். எனக்கு புது மாடுகளை பழக்க படுத்த பொறுமையில்லை" எண்டுறார் ராமசாமி. கனகு கன்னங்கள் வெட்கத்தால் கொவ்வை சிவப்பாயின.

கனகுவுக்கு கனகாபிசேகம் செய்த மாதிரி ஒரு நல்ல உணர்வு, உற்சாகமா ராமசாமியை தன்னுடைய அறைக்கு அழைச்சுப்போறா. கண்ணாடியிலை தன்னுடைய உடம்பை பாக்கிறா "நாப்பது வயசாகிறது, இன்னும் உடம்பு  சிக்கெண்டுதான் இருக்கு" எண்டு பெருமை படறா. வெளியிலை இதையெல்லாம் பாத்துகொண்டிருந்த டாப்பர் மாமா "கனகு இந்த வியாபாரம் தொடங்கினது 1896ம்  ஆண்டு, அவவுக்கு பதினாறு வயசிருக்கும். முதலிலை வெள்ளைகாரருக்குதான் வியாபாரம் பண்ணினவ பிறகு வயசு போக எல்லாரையும் சேர்த்துக்கொண்டா, ஆனால் இன்னும் அவவுக்கு மவுசு இருக்கு" எண்டு தன் இயலாமையை எண்ணி பெருமூச்சு விடுறார்.

டாப்பர் மாமா இளவயதில் வாட்ட சாட்டமான ஆம்பிளை, களையான  முகம், துரு துரு என்று எதையோ தேடும் கண்கள். முகத்திலை என்தநேரமும் ஒரு சிரிப்பு இருக்கும். செண்பகத்தின் பெரியாத்தா தினமும் "என்னடா எப்பவும் தேவடியா மாதிரி முகத்திலை ஒரு சிரிப்பு" எண்டு இவர் முகத்திலை இடிப்பாவம்.ஆனால் சிறுவதில்  இருந்தே அவருக்கு பெண்களின் சீலைகளையும், ஆபாரணங்களையும் அணிந்து பார்ப்பதில் விருப்பம் உடையவராக இருந்தார். தான் பெண்ணாக பிறக்காமல் ஒரு ஆண்  உடம்பில் பிழையாக புகுந்து விட்டதாக நினைப்பார். அவருடைய பன்னிரண்டாவது வயதிலேயே தான் பூப்படைந்து விட்டதாகவும் தான் திருமணம் செய்ய ஆயத்தம் என்றும் எண்ண  தொடங்கினார்.

அவர் குடும்பம் ஆதியில் இந்தியாவில் திருப்பதி என்ற ஊரில் இருந்து வந்து குடியேறியவர்கள் ஆகையால், வெங்கடாசலபதி பக்தர்களாக இருந்தனர். வீட்டில் அரை ஆள் உயர குழலூதும் கண்ணனை வைத்து வழிபட்டனர். சென்பகமோ ஒரு படி மேல் போய், அந்த மாயக்கண்ணனையே தன்  உளம் கவர்ந்த மணாளன் ஆக்கிவிட்டார். வானத்தை பொத்துக்கொண்டு கருட வாகனத்தில் வந்து தன்னை மனைவியாக்கி,தனக்கு தாலி கட்டி, அன்று இரவே பிருந்தாவனத்தில் முதலிரவு நடக்கும் என்றும் கனவுகண்டு, அவர் தன்னை "என் கண்ணே, என் இனியவளே" என்று கட்டிப்பிடித்து, அவர் இதழில் முத்த மழை பொழிவார் என மயங்கி,  காம வேட்கையினால் கருகி, உறக்கம் இன்றி தவித்தார்.

அந்தவருடமே நாகர் கோவில் திருவிழாவுக்கு முழு குடும்பமும் வண்டில் கட்டி அதிகாலையிலேயே வெளிக்கிட்டுவிட்டார்கள். செண்பகமோ தான் திருக்குறள் மனப்பாடம் செய்யவேண்டும் என போக மறுத்துவிட்டார். அந்த ஊரில் கிழடு, கட்டைகள் தவிர மற்ற எல்லோரும் வண்டில் கட்டி திருவிழாவுக்கு போய்விட்டார்கள். அன்றுதான் தனக்கும், தன உளம்கவர்ந்த கண்ணனுக்கும் திருமணம் என நினைத்து மளமளவென்று  காரியத்தில் இறங்கிவிட்டார்.

வண்டில் கண் பார்வையிலுருந்து மறைந்தவுடன் அவர்  முழுக்க முழுக்க ஒரு கன்னி பெண்ணாகவே மாறிவிட்டார். தன்  உடைகளை களைந்து அவர் தன் ஆத்தாவின் உள் பாவாடையை குறுக்கு கட்டாக கட்டி, கண்ணன் சிலையை ஓரக்கண்ணால் வெட்கமாக பார்த்து, ம்க்ம்! என உடலை நெளித்து, துள்ளி குதித்து கிணத்தடிக்கு ஓடினார். அரைத்த மஞ்சளை முகம், உடலெல்லாம் பூசி, தலைக்கு,குளித்து. தன்னுடைய தமக்கையின் சீலை, சட்டைகளை அணிந்து. நான் கல்யாண பெண்ணாயிற்றே நல்ல நகைகள் தான் அணியவேண்டும் என் நினைத்தவர், நல்ல நகைகளா தேர்ந்தெடுத்தார்.

நகைகளை அணிந்தவர், அவர் சாதி ஆண்கள் வைக்கின்ற முன் குடுமியை வைக்காமல்  நடு உச்சி பிரிச்சு பின்னி, நீளம் காணாது என்று தன் சகோதரியின் சவுரியை வைச்சு நீளமா பின்னலிட்டு , நுனியில் குஞ்சம் கட்டினார். கண்களுக்கு மையிட்டு, குங்குமம பொட்டிட்டு, தலையில் மல்லிகை பூச்சூடி, தன்னழகை கண்ணாடியில் பார்த்து மிக மகிழ்ந்து, என் நாதர் எனைக்கண்டால் எனை கட்டி இழுத்து முத்தமாரி பொழிந்து எனக்கு உணர்ச்சி குடுத்து எனை ஆளுவார் என நினைத்தார்.

தனதலனங்காரம் காரம் முடிந்ததும் அடுக்களைக்கு போய் தன்  சுவாமிக்கு தன்னுடன் திருமணம் முடிந்தவுடன் உணவளித்து பணிவிடைகள் செய்யவேணும்  என நினைத்தவர், அடுக்களையில் பவ்வியமாய் தேங்காய்ப்பாலும், சர்கரையுமிட்டு, சர்க்கரை சாதம் செய்து, வாழைப்பழமும் ஒருதட்டில் வைத்து வெளிவந்தவர், கண்ணனை குளிப்பாட்டி, புத்தாடை உடுத்து, வாசனை திரவியங்கள் பூசி, பூ வைத்து, ஐந்து முக நெய் விளக்கேற்றி அவர் தாள் பணிந்து நமஸ்கரித்தார்.

தான் செய்த துளசி மாலைகளில் ஒன்டை  கண்ணன் கைகளில் குடுத்து, தான்  ஒண்டை கையில் தன் இரு கரங்களிலும் ஏந்தி நின்றார். முதலிலேயே, ஒரு தட்டில், பூக்கள், மஞ்சள், கும்குமத்துக்கு மேல், மஞ்சள் கயித்தில், மஞ்சள் நிற மணி ஒன்றை கோத்து தன் சுவாமி தரப்போகும் தாலியாக பாவித்து கண்ணன் முன்னாக பவ்வியமாக வைத்தார். இப்பொழுது, கையில் துளசி மாலை ஏந்திய வண்ணம் "கண்ணா வாரும் சுவாமி, என்னை மணந்துகொள்ளும், என்னை ஆட்கொள்ளும் சுவாமி" என வாய்விட்டு கதறி நின்றார்.

வினாடிகள், மணித்தியாலங்கள் ஆகி, இரண்டு நாட்கள் கூட கடந்து விட்டது கண்ணன் வரேவேயில்லை. ஆனால் செண்பகத்தின் கதறல் மட்டும் ஓயவில்லை. நெய்யிட்டேத்திய விளக்குகள் கூட நெய் முடிந்து திரிகளும் கருகி அணைந்து விட்டன, சர்க்கரை சாதம்  கூட இரண்டு நாள் ஆகியதால் பழுதாகி, நெடி பரவ ஆரம்பித்தது. மூன்றாம் நாள், பசி மயக்கம், தண்ணீர் தாகம், இரண்டு இரவுகள் அவர் தூங்காத களைப்பு எல்லாம் சேர்ந்து அவருக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. இந்த மாயக்கண்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்தார்.

ஒருவேளை செண்பகம் கண்ணன் மேல் காம இச்சை கொள்ளாது காதல் மட்டும் கொண்டிருந்தால், செண்பகம், இரண்டு நாட்கள், அன்ன ஆகாரம், நீர்,நித்திரை எல்லாவற்றையும் தியாகித்த தவத்திற்கு, அந்த பன்னிரண்டு வயதே ஆகிய அந்த பாலகனுக்கு காட்சியளித்து, அருள் பாலித்திருப்பாரோ என்னவோ. அல்லது இது என்ன திரேதாயுகமா, இது கலியுகமேச்சே என வாளாவிருந்தாரோ, அந்த கண்ணனுக்குத்தான் வெளிச்சம்.

இப்பொழுது, செண்பகத்தின் இரத்தில் நீர் வற்றி போக, மூக்கின் உள்துவார மென் படலங்கள் உடைந்து இரத்தம் வழிய ஆரம்பித்திருந்தது. இனியும் கண்ணன் தனக்கு தாலி தருவான் என்ற நம்பிக்கையை இழந்தவர் தானே அந்த பாசி மணி தாலியை தனக்கு கட்டிக்கொள்ளுறார். கண்ணன் கையிலிருந்த துளசி மாலையை எடுத்து தான் அணிந்து, தன் கைகளில் இருந்த மாலையை எடுத்து கண்ணனுக்கு அணிவிக்கிறார்.

பின்பு மிகவும் சினம் கொண்டு கண்ணனை சபிக்கிறார். நீர் நிறைந்த செம்பை இடக்கையில் ஏந்தி, வலக்கரத்தில் நீரை ஊற்றி கண்ணனை சபிக்கிறார். "நான் உம்மை மட்டும் என் மனதில் கொண்டு வாழ்ந்த பத்தினி பெண் என்பது உண்மையானால், பிடி சாபம் " என்கிறார்.

"நீர் காத்தல் கடவுள் என்ற பதவியை இன்றிலிருந்து இழக்க கடவது" என கூறி நீரை கண்ணன் சிலை மீது  வீசுகின்றார் .

"இந்தா பிடி சாபம்" என வலக்கரத்தில் இரண்டாம் தரம் நீரை ஊற்றி

"உன் நாமத்தை இன்றிலுருந்து எவன் உச்சரித்து  வணங்குவானோ அவன் ஆண்  குறி செயல் இழந்து போகக்கடவது." என சபித்து கண்ணன் மீது நீரை வீசுகின்றார்.

மூன்றாம் தடவையாக நீரை வலது கரத்தில் எடுத்து ,

"என்னை எப்படி விரக தாபத்தில் தவிக்க விட்டு, என் காமத்தீயை அணைக்காது விட்டீரோ, அத்தீயை விட கொடூரமான தீ உம்முடம்பில் இருந்து பரவி நீர் காலடி வைக்கும் இடம் எல்லாம் எரிந்து சாம்பலாக கடவது" என சபித்து கண்ணன் மீது வீசிநார்.

"நீர் என்னுடைய கணவனாகி விட்டாலும், இனி நாம் உம்மை பூசிக்க போவதில்லை, நீர் கடவுளே இல்லை" என்றவர் ஒரு அகோரமான சபதமும் எடுக்கிறார். நீர் எனக்கு செய்த பாவத்திற்கு நான் உமக்கு தரப்போகும் தண்டனையும் ஒன்று உண்டு. நீர் எனக்கு செய்த துரோகத்திற்கு நானும் பதில் துரோகம் செய்வேன். என் பத்தினி தர்மத்திலிருந்து விலகி என்னை எந்த ஆண் இச்சிக்கின்றானோ அவனுக்கு நான் உம்மனைவி எண்டு கூறி அவனுடன்  உடலுறவு கொள்வேன்" என்று சூளுரைத்தவர் மூர்ச்சையாகி  விழுந்துவிட்டார்.

மனமகிழ்ந்து மண்மகளும், திருமகளும், நப்பினையும் தம் ரோஜா பூகரங்களினால் கண்ணனின் கால்களை நீவிவிட அவர் கரத்து திருச்சிவப்பு இவர் கால்களுக்கு தொற்றியதோ என  நினைக்கும் வண்ணம்  சிவந்த  கால்களை  நீட்டி வெண்கடாசலாபதி திருப்பால் கடலில் பள்ளி கொண்டு அமைதியாக, நடப்பவையை உணர்ந்து புன்னகை பூத்து, தூங்குகின்றான். மூண்டு தேவியரும் இது என்ன கலியுகத்தில் இப்படி ஒரு அனர்த்தம், ஒன்றும் அறியா சிறு பாலகன் இப்படி சாபங்களை சுவாமிக்கு கொடுத்துவிட்டானே என கலங்கு கின்றனர்.

தேவிகாள்! கலியுகம் முடிந்நது சத்திய யுகம் ஆரம்பிற்பதற்கு இன்னும் நாற்பத்தி மூவாயிரம் மனித வருடங்களாக வேண்டும்.  கலியுகத்து மாந்தரின் சாபங்களும், சூளுரையும் வானத்து தேவரை அடையாது என்பது பிரம்ம லிபியின் நிபந்தனை, அதுவரை இந்த மானிட சாபங்கள் நிலைத்து நிற்குமா என்பது சத்தியமாக தெரிய வில்லை. எனவே மனம் தளராது உம்முடைய பணிவிடைகளை தொடர்வீர்களாக என பணித்து மீண்டும் திருமால் தன்  திரு கண்களை மூடி உறங்கிவிட்டார்.

காத்தல் கடவுள் விஷ்ணு பலதடவை சபிக்கப்பட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் இராவணனும் அவன் தாய்  கைகேஷியும் விஷ்ணுவை அளித்து விடுவதாக சபதம் எடுத்து தம் சந்ததியே அற்று போகின்றனர், முன்பொருநாள்  நாரதர் விஷ்ணுவை சபித்தார். நாரதர் ஒரு முறை ஒரு  மானிட இளவரசி மீது காதல் கொண்டு அவளை மணக்க தீர்மானித்தார். விஷ்ணுவிடம் தனுக்கு ஒரு அழகிய அரச குமாரனின் தோற்றத்தை தரும்படி வேண்டினார். நாரதர் மானுட வாழ்வெனும் மாயையில் விளவிட விரும்பாத விஷ்ணு, நாரதருக்கு மாத்திரம் அவர் தோற்றம் அழகிய ராசகுமாரனாக தோற்ற, மற்றவர்களுக்கு மந்தியாக தோற்றும் உருவத்தை வழங்கினார்.

மறுநாள் சுயம்வரத்துக்கு சென்ற நாரதரை அந்த இளவரசி அவரை  தன் கணவனாக வரிக்கவில்லை. இதனால் விசனமுற்ற நாரதர் கடும் கோபம்கொண்டு, தன்னை ஏன் அவள் தன் கணவனாக ஏற்கவில்லை என்று கேட்டார். அதற்கு அவள் அவரை தூண்களில் மாட்டி இருந்த கண்ணாடியில் அவர் உருவை பார்க்கும் படி கூறினாள். தன்  மந்தி உருவை கண்ட நாரதர் மிகுந்த கோபத்துடன் வைகுண்டம் ஏகினார்.

விஷ்ணுவின்மேல் மிகுந்த கோபமாய், "பிடி சாபம், நீர் பூலோகத்தில் பிறந்து உம்  மனைவியை இழந்து, ஏங்கி தவித்து, மந்திகளின் உதவியால் உம்  மனைவியை அடைவீராக" என சபித்து, "நாராயண நாராயண" என்றவர் தன் கோபத்தால் வந்த அனர்த்தத்தை நினைத்து வருந்தி நின்றார். ஆனால் விஷ்ணுவோ அந்த சாபத்தை தன்  ராம அவதாரத்துக்கு சாதகமாக பாவித்துக்கொண்டார்.

மகாபாரதத்தில் குருசேத்திர யுத்தம் முடிய, தன்  சந்ததியே அழிந்துபோய், வயது முதிர்ந்த தன்  கண் பார்வை அற்ற கணவன் திரிதராஷரனும் தானும் மட்டும் எஞ்சியதை பொறுக்காத, கவுரவர்களின் தாய் காந்தாரி தவித்து நின்றாள் .  கண்ணனின் மாய வேலைகளினால்தான் தன் குலம் நாசமடைந்ததை அறிந்த காந்தாரி கண்ணனை "உன் யதுகுலம் அழிந்து போகக்கடவது" என சபிக்கிறாள். தன கணவன் குருடன் என்பதால் தன் கண்களை துணியினால் கட்டி வாழ்நாள் முழுவதும் குருடியாக வாழ்ந்த அந்த பத்தினியின் சாபம் பலிக்கிறது.

அந்த யது குல மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எல்லாம் சரிந்து கடலில் மூழ்கி கண்ணனின் இடையர் குலமே கடலில் அமிழ்ந்து, அற்று போகிறது. இப்பொழுது இந்த பட்டியலில் செண்பகம் சேர்ந்து கொள்ளுகிறார். இவர் சாபம் விஷ்ணுவை எவ்வளவுக்கு பாதிக்கும், ஏதாவது அவரது வருங்கால அவதாரத்துக்கு சாதகமாக அமையுமா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வீட்டுக்கு வந்த செண்பகத்தின் தாய், தந்தையர் அவர் இருந்த நிலை கண்டு கதிகலங்கி போயினர். இது என்ன இவன் பெண்கள் போல் உடையுடுத்தி, கல்யாண பெண்போல் வேடமிட்டு, மயங்கிப்போய் இருக்கிறான், வீடுமுழுவதும் புளிச்ச சோறு மணம், எதாவது பேய், பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ என பயந்து  போயினர், உடனே பரியாரியாரை அழைத்து வந்தனர்.

சென்பகத்தின் நாடியை பார்த்தவர், அன்ன ஆகாரம் , நீர் இன்றி இருந்ததால் வந்த மயக்கம் இது. சிறிது, சிறிதாக நீர் பருக்க செண்பகத்தின் நினைவு மீண்டது. செண்பகம் ஏன்  கல்யாண பெண்போல் வெளிக்கிட்டு நிக்கிறான் என பரியாரியை கேட்க, அவரும் சில சிறுவர்கள் பருவமடையும் போது சிறிது குழம்பிப்போய் இப்படி சேட்டைகள் செய்வதுண்டு, கொஞ்ச காலம் போக எல்லாம் மாறிவிடும் என்றார்.

செண்பகத்தின் களுத்தில் தொங்கிய தாலி சரடு போன்ற மஞ்சள் கயித்தை கண்ட செண்பகத்தின் தாய் அது என்ன எண்டு வினாவ, அது ஒண்டும் இல்லை எண்டு மழுப்பி , தனக்கு பசிக்கிறது என்கிறார். "சரி, உந்த இழவெல்லாம் கழட்டிப்போட்டு ஆம்பிளையா வேட்டி கட்டி, முன் குடுமி வைச்சு வா" எண்டவ சமையல் கட்டுக்கு போறா. எந்த பொருளும் இருக்க வேண்டிய  இடத்தில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. பெண்களின் மங்கல பொருட்கள் ஒரு ஆண்  அணிந்ததால் அது "இழவு" என அழைக்கப்பட்டது. உடைமாற்றிய  செண்பகம், தன தாலி சரட்டை மட்டும் கழட்டவே இல்லை. இன்றும் அவர் தன்னை கண்ணனின் மனைவியாக நினைத்து அதை அணிந்திருக்கிறார்.

வயதேறி விடலையாக அவர் பாடு பெரும் திண்டாட்டம் ஆகிவிட்டது. ஆண்களை வியர்வை மனம் அவரை காந்தமாக இழுத்தது. நெஞ்சில் புசு புசு எண்டு வளர்ந்த மயிருடன், எழுந்த மார்புடன் , அழகான ஆண்களை கண்டால் அவர்களை கட்டி பிடிச்சு அவர் மார்பில் முகம் புதைச்சு, அவர்கள் மயிரை  கோதி  விழையாட   ஆசைப்படுவார்.  பச்சைக்  கருவாட்டை கண்ட இலையான் மாதிரி அவர்கள் துரத்த துரத்த அவர்களையே மொய்த்துக்கொண்டிருப்பார்.

விரகதாபம் தாளாமல் தன்  வயதொத்த சில ஆண்களை வளைத்து பிடித்திருக்கிறார். சிலர் குடுக்க வேண்டியதை குடுத்து எடுக்க வேண்டியதை எடுத்து சென்றார்கள், சிலர் எடுக்க வேண்டியதை எடுத்துவிட்டு, காறித்துப்பி, அவரை மிகுந்த விரக தாபத்தில் விட்டு சென்றனர். அச்சமயங்களில்  அவருக்கு அவரிலையே வெறுப்பாக இருக்கும். தற்கொலை செய்யலாமா என்று கூட அவர் நினைத்ததுண்டு.

இப்படியாக இவருடைய காமச்சேட்டைகள் ஊரில் அதிகரிக்க, செய்தி ஊரெல்லாம் பரவி பெரியவர்கள் ஊர் பஞ்சாயத்தை கூட்டினார்கள்.  இறுதியில் வாலை அம்மனோ, சூரனாட்டப்பேயோ, காமவல்லியோ  செண்பகம் மேல் ஏறிவிட்டதாகவும், அடுத்தநாள் குறி பார்த்தால்தான் எது விவகாரம் தெரியுமெண்டும், பத்து சவுக்கடிகள் குடுத்து , ஊர்சசனம் எல்லாம்  வேப்பங்குழையாலை வெளுத்து விளாசினால் அவரை பிடிச்ச பேய் ஓடிவிடும் எண்டும், பேய் ஓட்டி முடிய செண்பகம் அப்பு, ஆத்தா சர்க்கரை பொங்கல் பொங்கி ஊர் சனத்துக்கு சாப்பாடு போடவேணும் எண்டும், காளியம்மன் பூசாரி புழுகு மூட்டையா அவிட்டுவிட்டான்.

அதை நம்பின ஊர் தலையாரியும் சந்தோசமாக, பேயை ஓட்டிவிட்டால் ஊர்சனமெல்லாம் காசுபோட்டு மூண்டு கருப்பு கிடாய்களை காளி அம்மனுக்கு பலியிடுவதாக முடிவு செய்தார். இது கேள்விப்பட்ட செண்பகம் உசார் ஆனார். மூண்டு மல்லர்களை சமாளிக்கும் பலம் அவரிடம் இருந்த போதும் , மரத்தில் கட்டிவைச்சு அடிச்சால், எப்பிடி சமாளிக்க ஏலும். இரவோடிரவாக குடத்தனையிலிருந்து கால் நடையாக கடற்கரையோரமாக நடந்து முனை கடற்கரையை வந்தடைந்தார்.

அவருடைய நல்லகாலம், இரவெல்லாம் நடந்து  களைத்தவர், இளைப்பாற மரநிழலில் அமர்ந்தவர் உறக்கமாகி விட்டார். கண் முழித்து அவர் முதலில் கண்டது ஆங்கில சிப்பாய்களைத்தான். நடுங்கிப் போனவர், அவர்கள் பார்வையிலேயே அவர்கள் காமப்பசியை உணர்ந்து கொண்டார். உணர்ந்துகொண்டவர் தாரளமாக விருந்து படைத்தார். மனம் மகிழ்ந்த சிப்பாய்கள் இவரை தங்கள் முகாமுக்கு அழைத்துச்சென்று, அவர்கள் படைத்தளபதியிடம் சென்பகத்தை சேவகனாக முகாமில் வைத்திருக்க அனுமதி கோரினர். படைத்தளபதியும் அவர்களின் நோக்கமறிந்து, மூன்று வேளை  சாப்பாடும், ஆங்கில சிப்ப்பாய்களின் சீருடையும், மாதத்திற்கு முப்பது ரூபாய் சம்பளம் என்றும் நிபந்தனை இன்றி அனுமதி அழித்தார்.

இது நடந்தது ஒரு 1895ம் ஆண்டளவில் இருக்கும்.அவருடைய பொற்காலம் அவர் ஆங்கில சிப்பாய்களுடன் வசித்த காலம். இவரோடோத்த உணர்வுகளை கொண்ட ஆங்கில சிப்பாய்கள் இவரை சேவகன் என்ற பெபெயரில் பகலில் மடப்பள்ளி உதவியாளனாகவும், இரவில் தங்களுடைய தாசனாகவும்  தங்கள் முகாமில் அவர்களுடன் வைத்துகொண்டார்கள்.  நல்ல உணவளித்து இரவில் காம களியாட்டங்களுக்கு பயன்படுத்தினர். இவரது காம லீலைகளில் மனம் திளைத்த, உபதளபதி  Philip Cornwall  ஒரு யானை தந்ததில் செய்த வேலைப்பாடமைந்த கைப்பிடி கொண்ட கைத்துப்பாக்கியை இவருக்கு பரிசாக கொடுத்திருந்தான்.

அவரும் வந்த வாய்ப்பை விடாமல் துப்பாக்கி குறிபார்த்து சுடுதல், மல்யுத்தம், வாழ்ப்பயிற்ச்சி என்று ஆண்களுக்குரிய சகல போர் கலைகளிலும் தேர்ச்சி பெற்று, இன்னும் பெரிய பயில்வானாகவும், திறமை உள்ள சிப்பாயாகவும் மாறி இருந்தார். இங்கிலாந்து வெள்ளைக்காரர் மாதிரியே கொன்னி கொன்னி ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார். அவர் அந்த மகிமை பொருந்திய பதவியில் சேர்ந்த நாளில் இருந்து ஆங்கில சிப்பாய்கள் மாதிரியே வெள்ளை நிற கால்சட்டையும், வெள்ளை நிற மேலங்கியும், மினுங்குகின்ற பித்தளை பொத்தான்கள்   போட்ட வெளி அங்கியும் அணிய ஆரம்பித்தார்.

அதோடு ஆங்கிலேயரின் உணவுவகைகள் தயாரிக்கவும் பயின்றிருந்தார். சிக்கன் சூப், மட்டன் stew, பட்டர் கேக், பால் புட்டிங், என்று வகை வகையாக சமைக்கவும், உணவினை முள்ளுக்கரண்டி, கத்தி  பாவித்து உண்ணவும் பழகி இருந்தார். ஆனால் பொழுது பட்டதுமே அவரது பெண்மை அவரை ஆட்கொள்ளும், அனலிலிட்ட மெழுகாய் உருகி , காம வேட்கை உந்தி, உருக்குலைந்து போய் ஆண்களைத்தேடி உன்மத்தம் பிடித்தலைவார். ஆனால் எந்த ஆணுடன் உடல் உறவு கொண்டாலும் தான் கண்ணனின் மனைவி செண்பகம் என்று சொல்ல மட்டும் தவறியதே இல்லை.

ஒரு நாள் செண்பகம் மடப்பள்ளியில் சமையலுக்கு உதவி செய்யப்போனார். உதவி சமையல்காரர்கள் மாமிச துண்டுகளை, சிறு துண்டுகளாக வெட்ட போராடிக்கொண்டிருந்தனர். செண்பகம் அடுக்களை உள்ளே வர, பிரதம சமையல்காரர் "இந்தா செண்பகம், இந்த இறைச்சியை வெட்ட உதவி பண்ணு " எண்டு சொல்ல அவரும் புன்னகையுடன் ஒரு பெரிய மாமிச துண்டை இடக்கையால் பிடித்தபடி, வலக்கரத்தில் சிறு துண்டுகளாக வெட்ட ஆரம்பித்தார்.

வெட்டிய குறையில் "இது என்ன இந்த இறைச்சி இவ்வாளவு சிவப்பா இருக்கு, இது என்ன இவ்வளவு பெரிய துண்டுகளாக இருக்கே?, ஆட்டிலை இவ்வளவு தசை பிடிப்பு இருக்காது " எண்டு நினைசச்சார் செண்பகம். "ஜான் இது என்ன இறைச்சி?" என சமைல்காரடம் வினாவினார். ஜான் வலும் சாதரணமாக "இது மாட் டிறைச்சி" என்றான். அவளவுதான், செண்பகம் காமுகன் கை பட்ட குலஸ்திரீ ஆனார்.

செண்பகம் "ஐயோ, ஐயோ என்ரை இரண்டு கையும் எரியுதே, நாசமாப்போன வெள்ளைக்கார கூட்டம், என்னை கொண்டு மாட்டிறைச்சி வெட்ட பண்ணியிட்டான்கள்" என்று கத்தி கூப்பாடு போட்டவர், அடுப்பில் இருந்த சாம்பலில் இரண்டு கரங்களையும் வைத்து, தேய்த்து, முனைக்கடலில் பாய்ந்து  ஒன்பது முறை முக்கி முழுகி எழுந்தார். இன்னும் மனம் ஓயாது "சிவ,சிவா, பார்வதி நாயகனே, பரம்பொருளே, பெருந்தேவரே, என்னவரின் மச்சினரே என்னை மன்னித்து காத்தருளும்" என கதறி நின்றார்.

இவருக்கு மறை கழண்டு விட்டதாக எண்ணிய ஆங்கில சிப்பாய்கள், தம் உப தளபதி பிலிப்பிடம் முறையிட்டார்கள். வெளியே வந்த உபதளபதி சென்பகத்தை கடலில் இருந்து வெளியே வரும்படி வேண்டினார். வெளியே வந்த செண்பகம் சிறுது வினாடிகளுக்கு முன்புதான் கற்பழிக்கப்பட்ட கன்னி  பெண்போல் கால் இரண்டையும் பரப்பி தலயில்  கைவைத்து, "என்னை பெத்தவன் சரியில்லை, என்னை கொண்டவன் சரியில்லை, என்னை வைச்சுக்கொண்ட நீங்களும் சரியில்லை" , என கதறினார், "ஐயோ இது என்ன பாவப்பட்ட பெண்பிறப்பு, இந்த பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்" என பசப்பி நிண்டார்.

ஒருமுறை அவர் இருந்த படை முகாம் பாதுகாப்பு விடயமாக பருத்தித்துறை செல்ல வேண்டியிருந்தது. படை மேல் அதிகாரியிடம் தன் தாயை பார்க்க தான் விரும்புவதாகவும், பருத்தித்துறை செல்லும் வழியில் தன்னுடைய கிராமத்து வழியாக செல்ல அனுமதி தரும் படி வேண்டிநின்றார். அவர்மேல் காதல் கொண்ட உபதளபதி பரிந்துரைத்தார். அனுமதி பெற்றவர் அன்றிரவு முழுவதும் உபதளபதி உடன் தங்கி இருந்து, தான் அறிந்த காம சூத்திரங்களை எல்லாம் பிரயோகித்து உபதளபதியை சாறு பிழிந்த தோடம்பழ சக்கை ஆக்கினார்.

இவர் வரும் செய்தியறிந்து ஊர்சனம் எல்லாம் அவர் வீட்டு வாசலில் கூடி நின்றனர். அவர்களை பொறுத்தவரை அவர் ஆங்கில படைவீரர்களில் ஒருவர் என்றே நினைத்தனர். செண்பகம் ஆங்கில படையில் பெரும் பதவி வகிப்பதாகவும் ஒரு ஆங்கில மாதினை மணந்து கொள்வார் என்றும் பெருமையாக பேசிக்கொண்டனர். மற்ற ஆங்கில சிப்பாய்களுடன் வந்த சென்பகத்தை கண்ட அவர் உறவினர் வாய் பிளந்து, இதுவல்லவோ வாழ்க்கை என திணறிப்போயினர்.

வெற்றிவீரனாக வந்த Napoleon Bonaparteயை வரவேற்ற அவன் தாய் Letizia Ramolino போல் செண்பகத்தின் தாயும் தன்  மகன் சென்பகத்தை உச்சி முகர்ந்து வர வேற்றாள். தன்  தாய்க்கு ஐயாயிரம் ரூபாய்களும், ஐந்து காஞ்சிபுர பட்டு சீலைகளும், தங்க நகைகள் எல்லாம் குடுத்து தாள் பணிந்து நின்டவனை பார்த்து, பெற்றால் இவனைப்போல் ஒரு மகன் அல்லவோ பெறவேண்டும் என மெய்சிலிர்த்து நின்றனர் அவன் உறவினர்.

வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய்களும், சிறுவர்களுக்கு ஆங்கில இனிப்புகளும் வழங்கி எல்லோரையும் திக்கு முக்காட பண்ணினார். கடைசியில் நிண்ட, செண்பகத்திற்கு,  பேய் பிடித்ததாக கூறிய காளி கோவில் பூசாரியை  கண்டுவிட்டார். கண்ட செண்பகம் வெறிபிடித்த நாயானார். நாலு தாவல்களில் பூசாரியை அடைந்தவர் அவர் குடுமியை பற்றி நடு முத்தத்திற்கு இழுத்துவந்தார்.

பூசாரியின் வேட்டியை உருவி கோவணத்துடன் நிக்க விட்டு, தன்  சப்பாத்து காலால் அவர் முதுகில் உதைத்து கீழே வீழ்த்தினார் . பூசாரியின் கையிலிருந்த சவுக்கை பறித்து பூசாரி கதற கதற,எண்ணி பத்து சவுக்கடி கொடுத்தார். இன்னமும் கோபம் தணியாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து, வேப்பிலை கட்டு செய்து தன் கை சோரும் வரை அடித்து பூசாரி உடம்பெல்லாம் புண்ணாக்கினார்.

இன்னும் கோபம் அடங்காது கீழே கிடந்த பூசாரியை குடுமியில் பிடித்தெளுப்பி, அவர் குடுமியை தன் துப்பாக்கி கத்தியினால் அரிந்து பூசாரி கையிலேயே குடுத்து "இந்தாரும் இதுதான் உமக்கு நான் கொண்டுவந்த பரிசு, சவுக்கடியும், வேப்பிலை கொத்தடியும் எப்படி இருக்கும் என்பதை அறிந்தாயா" எனக் அவர் முகத்தில் காறி உமிழ்ந்து வேகமாக இராணுவ வாகனத்தில் ஏறி, தன்  தாய்க்கு இரு கை கூப்பி வணக்கம் சொல்லி சிரித்த முகத்துடன் பயணமானார்.

ஆங்கில சிப்பாய்கள்  செல்லும் இடமெல்லாம் இவரும்  சென்றார் , திரிகோணமலை, கந்தளாய், காலி, கொழும்பு என்று கடைசியில் முல்லைத்தீவுக்கு சிப்பாய்களுடன் வந்து சேர்ந்தார். அங்குதான் அவருக்கு கனகாம்பாள் பரிச்சயம் ஆனாள். 1918ல், முதலாம் உலகமாக யுத்தம் முடிந்து  சிப்பாய்கள் இங்கிலாந்து பயணமாக செண்பகம் துணையின்றி மீண்டும் தனித்து விடப்பட்டார்.   இந்த சமயம்தான் கனகு தன் வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டிருந்தாள். பாலுக்கு பூனையை காவல் வைப்பதை விட, பாலே குடிக்காத அந்த பூனை,  டாப்பர் மாமா வேலைக்கு உசிதமானவர் என உணர்ந்தாள். அதுமுதல் செண்பகம் கனகுவின் வியாபாரத்துக்கு அச்சாணியாக இருந்தார்.

செண்பகத்தின் ஆங்கில சிப்பாய்கள் உடை, டாப்பர் மாமா பதவிக்கு உசிதமானதல்ல என உணர்ந்த சென்பகம் , இந்தியாவிலுருந்து ஐந்து பட்டு  வேட்டி சால்வைகள், பட்டு ஜிப்பா என வரவழைத்தார். அவருக்கு வெத்திலை பாக்கு போடும் பழக்கம் இல்லையெனினும், இனி அவர் வகிக்கப்போகும் பதவிக்கு வெள்ளியில் செய்த வெத்திலைப்பெட்டி மகிமை அளிக்கும் என எண்ணிய கனகு ஒரு வெள்ளி வெத்திலை பெட்டியை அவருக்கு பரிசாக அளித்து, அவரை கவுரவப்படுத்தினாள்.

மிகவும் கெட்டிக்காரனான செண்பகம் கனகுவின் வியாபார நெளிவு சுளிவுகளை விரைவில் கற்று தேன்று பிரபலமான டாப்பர் மாமா ஆகிவிட்டார். கனகு வருடத்துக்கு ஒருமுறை இராமேஸ்வரம் போய், இளம் பெண்களை ஏலத்தில் விலை குடுத்து வாங்கி வருவாள். போகின்ற போது யாராவது ஒரு விபரம் தெரிஞ்ச, இந்த வியாபாரத்தில் இருந்த கிழவியை துணைக்கு அழைத்து செல்வாள். டாப்பர் மாமா வந்தபின் அவரே கனகுவுடன் துணைக்கு செல்வார்.

நால்வகை பெண்களான பத்மினி, சித்ரிணி,ஷன்க்கினி, ஹஸ்ரினி ஆகியோரை அவர்கள் உருவத்தை வைத்தே கண்டு பிடித்து விடுவார். அவரை பொறுத்த வரை ஷன்க்கினி பெண்கள் இந்த வியாபாரத்துக்கு உசிதமானவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் கோபக்காரர்கள், மரிதையாக நடக்கவும் மாட்டார்கள். பத்மினி பெண்கள் இந்த வியாபாரத்தில் இருந்து தள்ளி வைக்கபட வேண்டியவர்கள். அவர்களுக்கு கும்ப வாழ்க்கைதான் சரி.

சித்ரிணி பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், ஆணுக்கு சுகம் குடுப்பதில் திறமையானவர்கள். ஆனால் கலை ஆர்வம் கொண்டவர்கள் அத்துடன் வளர்ப்பு மிருகங்களில் விருப்பம்  கொண்டவர்கள். கிளி,மைனா போன்ற பறவைகளை வீட்டில் வளர்க ஆசை படுவார்கள். அதற்கே புறம்பாக பணம் வேண்டும்.

எல்லாரிலும் இந்த வியாபாரத்து உசிதமானவர்கள் ஹஸ்ரினி பெண்கள்தான். இவர்கள் தான் நீண்ட நேரத்துக்கு வரிசையில் வரும் ஆண்களை தாக்கு பிடிப்பார்கள். இவருடைய தெரிவில் மூண்டுக்கு இரண்டு வீதமாக ஹஸ்ரினி பெண்களும், சித்ரிணி பெண்களும் இருப்பார்கள்.

இனி இந்த நால்வகை பெண்களில் உப பிரிவான மிரிகி, வடவ அல்லது அஸ்வினி, காரிணி பிரிவுகளை கண்பார்வையால் கணிப்பது இயலாத காரியம். எனவே கனகுவை கொண்டுவித்து அளந்து வர சொல்லுவார். அது ஒண்டும் அடிமட்டம் வைத்து அளக்கிற விடயமல்ல. கைவிரலை உள்ளை விட்டு பாக்க ஒன்பது விரல் அளவு இருந்தால் அஸ்வினி பிரிவு அவ்வாளவுதான்.

இந்த உப பிரிவில் காரணி பெண்கள் எந்த பாவத்தையும் செய்ய தயங்காதவர்கள் அனால் மிகவும் அசுத்தமானவர்கள். அவரை பொறுத்தவரை அஸ்வினி பெண்கள் தான் இந்த வியாபாரத்துக்கு பொருத்தமானவர்கள். எனவே உபபிரிவான அஸ்வினி பெண்கள்தான் அவர் தெரிவில் நூறு வீதமாக இருக்கும்.

சுருக்கமாக சொன்னால் கனகு ஐந்து பெண்களை வாங்கினால் , மூன்று ஹஸ்ரினி அஸ்வினி பெண்களும், இரண்டு சித்ரிணி அஸ்வினி பெண்களும் இருப்பார்கள்.  அவர்கள் ஒன்றும் பெண்கள் அல்ல பதின்னாலு வசுக்கும் பதிஆறு  வயசுக்கும் இடைப்பட்ட மடந்தைகளாக இருப்பார்கள். செண்பகத்தின் தெரிவு ஒருபோதும் சோடை போனதில்லை.  டாப்பர் மாமா வந்த பின் வியாபாரம் இரண்டு மடங்காகி விட்டது.

பெண்களை வாங்கி படகேறியதுமே புது பெண்களை அவர்கள் தொழிலுக்கு பழக்க ஆரம்பித்து விடுவார். "என்னடி பொண்ணுகளா , தொழில் ஆரம்பிக்க ஆயத்தமோ, உடம்பு  சுகத்துக்கு சுகமும் ஆச்சு, காசுக்கு காசும் ஆச்சு. படுத்த படி இருக்க காசு சேருற ஒரே தொழில் இந்த தொழில்தான். ஒருத்தனுக்கு வாழ்கைபட்டால் தினமும் ஒரு வகை பழம்தானே சாப்பிடலாம், இந்தத்தொழில் எண்டால் எத்தனை வகை பழங்கள் சாப்பிடலாம். சில வேளைகளிலை பஞ்சாமிர்தமே சாப்பிடலாம்" என்பார்.

தொண்ணூத்தி ஒன்பது சத வீதமான கனகுவின் வாடிக்கையாளர்கள், பணம் குடுப்பார்கள், "பட் " என கதவு மூடும், "சட்" என விடயம் முடிந்துவிடும், வேட்டியை கட்டியபடி வெளியே போவார்கள். ஒரு சில வெளி நாட்டில் படிச்சவர்கள் அல்லது வெள்ளை காரர்கள் மாத்திரம் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் என காசு குடுத்து அனுபவித்து போவார்கள்.

ஒரு சில விரக்தி அடைஞ்ச ஆண்கள் மாத்திரம், பல ஆண்கள், பல பெண்களை ஒரு அறைக்கு அழைத்து போய் முழு இரவும், மது, மாது என அனுபவித்து போவார்கள். அதைத்தான் பஞ்சாமிர்தம் என செண்பகம் கூறினாரோ? "என்னடி பெண்டுகளா, செத்த பிறவு, மண் தின்னுற உடம்பை மனுஷன் சாப்பிடட்டுமே"எண்டு பசப்பு வார்த்தைகள் பேசி அவர்களுடைய தொடக்கூடாத
உறு ப்புகளை எல்லாம் தொட்டு தடவிக்கொடுத்து அவர்களை தொழிலுக்கு தயார் பண்ணிவிடுவார். பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்த தொழிலில் பல ஆண்களுடன் உடலுறவு கொண்டதால் நோய் வாய்ப்பட்டு, பெண் குறி அழுகி புழு வைத்து இறந்த பல பெண்கள் உண்டு. நோய்ப்பட்ட பெண்கள் தங்கி கடைசி காலத்தை கழிக்க என கடற்கரை ஓரமாக மூண்டு அறைகள் கொண்ட விடுதி கட்டி இருந்தா கனகு. அதில் வேலை செய்ய துரும்பர் சாதி பெண்கள் மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். துரும்பர் சாதி என்பவர்கள் ராசாமார் ஆண்டகாலத்தில் வீதியில் உள்ள மலம், சலம் குப்பை கூளங்கள் எல்லாம் அள்ளி கழுவி துப்பரவு செய்வார்கள். அவர்கள் இரவில் மாத்திரம் நெருப்பு பந்தமேந்தி, காவோலை சர சரக்க இரவு பத்துமணிக்கு மேல் ஊருக்குள் வருவார்கள்.

அவர்கள் வரும் சத்தம் கேட்டவுடனேயே சாதிக்கார் எல்லாம்  கதவடைத்து உள்ளே போய் விடுவார்கள்.  பிற் காலத்தில் அவர்கள் சாதி இல்லாமல் போய் விட்டதாக கூறுவார்கள். இந்த நோய் பிடித்த விபச்சார பெண்கள் அவரிடம் உடலுறவு கொண்ட சில ஆண்களுக்கு அந்த நோய் தொற்றி, அவர்கள் ஆண் குறி அழுகி, வடிகின்ற  ஊனத்தை மறைக்க தங்கள்  கோவணத்துள் பஞ்சு வைச்சு கட்டி திரிந்து, உத்தரித்து இறந்து போயிருக்கிறார்கள்.

செண்பகம் அங்கு வந்ததிலிருந்து இறந்து போகின்ற விடுத்தி பெண்களின் ஈமைச்சடங்குகளை அவர்தான் செய்வார். எட்டுக்கு படையல் போட்டு கழிப்பு கழிப்பார். முப்பத்தி ஓரம் நாள் ஐயரை கூப்பிட்டு அந்திரட்டி செய்வார். பல தட்டுகளில் தானங்களிட்டு ஐயருக்கு குடுத்து  , பிண்டம் வைத்து, எள்ளும் தண்ணியும்  இறைப்பார். ஒவ்வொரு முறையும் கொள்ளி  வைக்கையில் தன் ஆத்தாவை நினைத்து அழுவார். பாவம்  கிழவி, தனி பிணமா போச்சோ அல்லது இன்னமும் இருக்கோ என்றறியாமல் கண்ணீர் விட்டு கதறி நிப்பார்.

கனகுவின் விடுதிக்கு வந்த பெண்களில் ஒருத்தி மட்டும், புத்தூர் ஜமீந்தாரினால் வந்த அன்றே இரண்டு மடங்கு விலைகுடுத்து கன்னியாக வாங்கப்படாளாம் . அந்த ஜமீந்தார் மூன்று தடவைகள் திருமனம் செய்தும் பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லையாம். தன்னுடைய ஐம்பது வயசில் பதினான்கே வயசான இவளை நான்காவது மனைவியாக மணந்தார். அடுத்தடுத்து ஒற்ரையாகவும், இரட்டையாகவும் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தாள்.  இதனால் அந்த ஜமீனில் மிகுந்த செல்வாக்கு  பெற்று, ஜமீந்தாரின் உளம்கவர் நாயகியாக வலம் வந்தாள்.

இந்த கொடுப்பினை மற்றவைக்கு கிடைக்கவில்லை. கருத்தரியாமல் இருப்பதற்கு எதோ ஒரு லேகியம் ஒன்றை மருத்துவிச்சியிடம் வாங்கி விடுதியில் வைத்திருந்தாள் கனகு . தினமும் காலையில் ஏதோ வேண்டுதல் மாதிரி அவளே நின்று எல்லோரையும் குடிக்க பண்ணுவாள்.  மாதவிடாய் முடிந்து  மூண்டாம் நாள் விபச்சார பெண்களை வியாபாரம் செய்ய அந்தபக்கமே வர விடாள். அவளுக்கு காரணம் தெரியாவிட்டாலும், அது என்னவோ அந்த விடுதியில் எழுதப்படாத சட்டமாக இருந்தது.

இவற்றையும் மீறி சில பெண்கள் தகப்பன் யார் என்றறியாமல் கருத்தரித்திருக்கிரார்கள். செண் பகம் வரும் வரை கருக்கள் ஒரு மாசத்திலேயே சிதைக்க பட்டிருக்கின்றன. இவர் வந்த பின், நாங்கள் செய்யிறது  பாவத் தொழில், அதற்கு மேலை இதையும் செய்து ஏன் இன்னும் பாவம் செய்வான் எண்டு அந்த கரு சிதைக்கும் மருந்தை கனகுவிடமிருந்து பறித்தெடுத்து தலையை சுற்றி வீசி எறிந்துவிட்டார்.

விடுதியின் பின்பக்கம் ஒரு அறை ஒதுக்கி குழந்தை பிறக்கும் வரை கவனமாக உணவூட்டி தயிரியம் சொல்லி ஒரு தாய்போல் கவனித்து கொள்வர். குழந்தை பிறந்து மூண்டு நாள் தாய்ப்பால் குடிக்க விட்டு நாலாம் நாள் அதிகாலையில், ஒரு பட்டு துணியினால் குழந்தையை சுற்றி பாதிரி பள்ளி முன் வாசலில் இருக்கும் தொட்டிலில் கவனமாக கிடத்தி விடுவார். அத்துடன் ஒரு கட்டு பணமும், இரண்டு தங்க நாணயம், பிறந்த திகதி, சிரசுதைய நேரம் தாயின் பெயர், எல்லாம் ஒரு கடதாசியில் எழுதி கூடவே வைத்துவிடுவார்.

குழந்தையை தொட்டிலில் இட்டவர், சிறிது தூரம் போய் அவ்விடம் இருந்த ஆல மரத்தில் ஏறி குழந்தையை தேவாலய ஊழியர்கள் எடுத்து போகும் வரை பட படத்த மனத்துடன் சிவ, சிவ என்று கும்பிட்டுக் கொண்டிருப்பார். குழந்தை உள்ளே போனதும், அப்பாடா  பாதுகாப்பான இடத்தில சேர்த்துவிட்டோம் என்ற திருப்தியில் விடுதி சென்றடைவார். இதுவரை இரண்டு குழந்தைகள்தான் அந்த விடுதியில் பிறந்திருக்கின்றன. அவை இரண்டும் பாதிரி அதிரியான் பாதுகாப்பிலேயே வளர்கின்றன.

அவர்களுக்கு, பாதிரி  அதிரியான் என்ன பெயர் வைத்து ஞானஸ்நானம் செய்தாரெண்டு அங்கு வேலை செய்பவர்கள் மூலம் அறிந்து, குழந்தை பெற்றவளுக்கு பெயரை சொல்லி தானும் மகிழ்வார். பிறந்த நாளை மறக்காமல், பிறந்த நாள் பரிசாக குழந்தையின் பெயரை எழுதி புது துணியும், இனிப்பு வகைகளும், ஒரு கட்டு பணமும்  அந்த தொட்டிலில் வைத்துவிட்டு வருவார். அவ்வப்போது குழந்தையின் வளர்ச்சி எப்படி எண்டு விசாரித்து கொள்வார்.

செண்பகம் அவள் வியாபாரத்தில் சேர முதல் சில ஊர் காவலிகளினால் கனகுவுக்கு பிரச்சனை இருந்தது. ஒன்றுக்கு மூன்று பெண்களை அறைக்கு அழைத்து செல்வார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து வெளியே வருவார்கள். பணம் கேட்டால் கணக்கில் வைத்து கொள் அக்கா என்று கன்னத்தில் கிள்ளி  விட்டு போய்விடுவார்கள். இது ஒவ்வொரு கிழமையும் நடக்கும். செண்பகம் வந்த அன்றே அதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

சவுடாலாக உள்ளே நுழைந்த காவாலி ஒருத்தன் செபகத்தை  கண்டவுடன், "என்ன மாமோய்!" எண்டு இவர் கன்னத்தை கிள்ளினான். பதிலுக்கு இவரும் "என்ன மருமகனே" என்று அவனுடைய தொடக்கூடாத உறுப்பை கெட்டியாக பிடித்துகொண்டார். "ஐயோ விடு பொட்டை பயலே" எண்டவன், அவர் கைப்பிடி தளர  "திறமான மூண்டு உள்ளே அனுப்பு" எண்டபடி வழக்கமான அறைக்குள் புக முனைந்தான்.

இங்கை வா மருமகனே, "மூண்டு பேருக்கு கால் மணிக்கு பத்து ரூபா ஐம்பது சதம். எவ்வளவு நேர கணக்கு" என்கிறார் செண்பகம். "வழக்கம் போலைதான் ஒரு மணித்தியாலம்" என்கிறான். "அப்படியா, இருவத்தி ஒரு ரூபா எண்ணி வைச்சுபோட்டு உள்ளை போ" என்கிறார் செண்பகம். "அக்கா வழக்கமாக கணக்கிலைதான் வைப்பா, அப்பிடியே நீயும் செய்" என்றான் அந்த காவாலி. "அப்பிடியா கணக்கிலை நிலுவை இருக்கே, எல்லாமாக ஆயிரத்தி இருந்நூறு ரூப ஐம்பது சதம் எண்ணிவை என்கிறார்" செண்பகம்.

வேட்டியை மடித்துக்கட்டிய காவாலி , செண்பகத்தின் வலிமை தெரியாது, வலது கையை முட்டி கட்டி இவர் முகத்தில் குத்த வந்தான். அவர் அவன் கையை கெட்டியாக பிடித்து காவாலியின் பின்புறம் மடித்து,  அவன் கழுத்தை இடக்கையினால் இறுக்கி பிடித்துக்கொண்டார். ஐயோ என்னை விடு எண்டு மூச்சு திணறிய காவாலியின் கழுத்தை விடுத்து அவன்  இடக்கையையும் பின்புறமாக மடித்து  அவனுடைய சால்வையாலேயே கட்டினார்.

கையைகட்டியவர் காவாலியின் கழுத்தில் இருந்த தங்க அச்சர கூடு தொங்கும் ஏழு பவுன் சங்கிலியை கண்டுவிட்டார். "இது கடன் நிலுவையில் அரைவாசிக்குத்தான் தேறும்" என சொன்னவர், அவன் வேட்டியை உருவி அவன் அரையில் கண்ட தங்க அரைஞாண்  கொடியையும் எடுத்தவர், "இது கடனை அடைக்க போதும்" எண்டிறார். இப்பொழுது காவாலி அம்மணமாக நிற்கிறான்.

அவனுடைய வேட்டியிலையே ஒரு துண்டு கிழித்து அவன் அரையில் கட்டி, தரையில் கிடந்த கோவணத்தை அவனுக்கு கட்டி விடுகிறார். அவனுடைய கழுத்தில் பிடித்து தள்ளி வெளிக்கதவை திறந்து  தள்ளி விடுகிறார் . "ஓடு, திரும்பி பார்க்காமல் ஓடு " என்கிறார். இது நடந்த பொழுது பிற்பகல் எழு மணி இருக்கும். தெருவில் சன நடமாட்டம் அதிகமாக இருந்தது. வருவோர் போவோர் எல்லாரும் அந்த காவாலியை பார்த்து நகைக்கிறார்கள். "ஆராவது இவனுக்கு உதவி செய்தால் அவைக்கும் இதே கெதிதான்" என்று கொக்கரிக்கிறார் செண்பகம்.

செண்பகம் மிகுந்த திறமை சாலி. அடுத்தது என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும். அவருடைய திறமைக்கு அவர் கூட, இருந்த ஆங்கில படை தளபதியின் சிபாரிசுடன் ஏதாவது ஒரு அரசாங்க பதவியில் அமர்ந்திருக்கலாம். அவருடைய ஆங்கில அறிவுக்கு ஆக குறைந்தது ஒரு குமாஸ்தாகவோ அல்லது மேசைக்கு மேசை காகித கட்டுகளை விநியோக்கும் பணியாளரகவோ அமர்ந்திருக்கலாம். அதுவும் இல்லை என்றால் யாராவது ஆங்கில துரை வீட்டில் சமையல் காரராகவோ, பணியாளராகவோ சேர்ந்திருக்கலாம்.

அவருடைய பெரியாத்தா, தேவடியா மாதிரி முகத்திலை எந்தநேரமும் ஒரு சிரிப்பு என்று தினமும் அவர் முகத்தில் இடித்து வாலாயம் பண்ணியதோ என்னவவோ அவர் வாழ்நாள் முழுவதும் இந்த அநியாயப்பட்ட, சமூகத்தில் தேள்வைப்பட்ட, ஆனால் அத்தியாவசியம் இல்லாத, எல்லா  வேத ஆகமங்களிலும்  ஒதுக்கப்பட்ட ஒரு தொழிலை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார். இதுதான் அவருக்கு எழுதப்பட்ட பிரம்ம லிபியோ? அவர் பிறந்த பொழுது கோட்சாரம் எப்படி இருந்திருக்கும்.

வரப்போவதை உணர்ந்த செண்பகம் தன் அறைக்கு போய், தன்  டாப்பர் மாமா உடைகளை களைந்து ஆங்கில சிப்பாய் உடை உடுத்து, அரையில் கைத்துப்பாக்கி அணிந்து, இங்கிலாந்து வாசனை திரவியத்தை அளவுக்கதிகமாக தெளித்து, சன்னத்தம் கொண்டவராய் தன்  சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ஒரு சில வினாடிகளும் இல்லை, விடுதி கூரை மீது கல்லுகள் சரமாரியாக விழுந்தன. அதை தொடர்ந்து , யாரோ ஒருவன் உரத்த குரலில் "யாரடா அந்த பொட்டை  பயல், எங்கடை ஊர் காரனுக்கு அடிச்சுப்போட்டு இந்த ஊரிலையே பெம்பிளை வியாபாரம் செய்யிறது,  பல தண்ணிக்கு பிறந்தவனே, தயிரியம் இருந்தால் வெளியிலை வாடா " என்கிறான்.

செண்பகமும் ராஜ நடை போட்டு கெம்பீரமாக, அந்த விடுதியை காக்கின்ற கருப்பு சாமியா விடுதியின் கதவை திறந்தார். ஆங்கில சிப்பாயை கண்ட காவாலிகள் கசாப்பு கடைக்காரன் கையில் அகப்பட்ட கறுத்த கிடாய்கள் மாதிரி கலங்கி நின்றனர். துப்பாக்கியை வெளியில் எடுத்து ஒரு காவாலியின் காலில்  சுட்டார். குண்டு  பட்ட நோ தங்காமல் காவாலி பெரும் குரலெடுத்து ஓலமிட்டான். மற்றவர்கள் அவனை தூக்கி கொண்டு ஓட எத்தனித்தனர்.

"நில்லுங்கோடா ஒரு தண்ணிக்கு பிறந்தவன்களே. செய்த வேலைக்கு காசெண்ணி  வைச்சுப்போட்டு நீங்கள் போகலாம்" எண்டவர், கனகுவை பார்த்து "கனகு ஒரு பத்து ஓடுகள் உடைஞ்சிருக்குமே" எண்டவர் " நீங்கள் எறிஞ்ச கல்லுகளாலை சிவர் காரையும் பெயர்ந்து விட்டது, அரை மணித்தியாலமா வியாபாரமும் இல்லை, குத்து மதிப்பாக ஒரு நூற்றைம்பது  ரூபாய் ஆவது ஆகும், எடுங்கோடா காசை" எண்டுறார்.

வந்திருந்த பதினைந்து காவாலிகளும் மடியில் இருந்த காசுகளை போட முன்னூறு ரூபாய்கள் சேர்ந்து விட்டது. அதை அள்ளி கனகுவிடம் குடுத்தவர் "கனகு  அந்த கணக்கு புத்தகத்தை எடுத்து வா என்கிறார்" .  புத்தகத்தை புரட்டியவர் "யாரடா அவன் வைத்தி என்கிற வைத்தியலிங்கம்" என்கிறார். "நான்தான் சாமி" என்று முன் வருகிறான் வைத்தி. "உன்னுடைய நிலுவை இரண்டாயிரம் ரூபா, இருக்கிறதை  கழட்டிப்போடு" என்கிறார் செண்பகம். அவனும் தன் வைர கடுக்கன், சங்கிலி  கைக்காப்புகள் எண்டு கழட்டி வைச்சான்.

இப்படியாக  ஒவ்வொரு பெயராக வாசிச்சு கடன் வசூலித்தவர். "யாரடா அது அந்தோனி என்கிற அந்தோனிமுத்து" என்கிறார். அவர்களில் ஒருத்தன் "அவனுக்கு கலியாணம் நடந்து மூண்டு நாள்தான் ஆகிறது, இவனை இப்ப விட்டிடு  சாமி, நானே பேசி நாளைக்கு கடனை கட்டச்  சொல்லுறன்" என்றான். சன்னத்தம் கொண்ட செண்பகமோ மசிவதாயில்லை " ம்ஹ்ம்! அது சரிப்பட்டுவராது, இண்டைக்கே இந்த இரண்டாயிரத்து பத்து ரூபா ஐம்பது சதம் கட்டி முடிய வேணும்" என்கிறார்.

"ஏய் வைத்தி, இங்கை வா, அந்தோணி வீட்டுக்கு போய் நான் சொன்ன காசை அல்லது அதுக்கு பெறுமதியான தங்கம் வாங்கியா, உனக்கு பத்து நிமிஷ அவகாசம் தான், நீ பத்து நிமிஷத்திலை
காசோடை இங்கை இல்லை எண்டால், இந்தகூட்டம் முழுவதும், காயப்பட்டவனை தூக்கிவர ஊர்வலமாக அந்தோனிக்கு பெண் குடுத்தானே சம்மாட்டி  சூசையப்பன் அவன் வீட்டுக்கு கூட்டி வருவன், ஆன படியால் தப்பியோடலாம் எண்டு மட்டும் நினைக்காதை, சுறுக்கென போ" என்கிறார் மாமா செண்பகம்.

"சரி" எண்டு ஓடத்தொடங்கிய வைத்தி மனதுக்குள் வந்துஒரு மாதம் கூட இல்லை, அதுக்குள்ளை ஊர் தோம்பு துரவு எல்லாம் அறிஞ்சு வைச்சிருக்கிறான் இந்த நாசமாப்போன செண்பகம், இவனோடை இனி சங்காத்தமே வைக்கப்படாது, என தீர்மானிக்கிறான். அதற்கிடையில் ஊர் பரியாரி வந்து காயம் பட்டவனுக்கு வைத்தியம் பார்க்க, மிகுதியாய் இருந்தவர்களிடம் மிகுதி கடன்களை எல்லாம் வசூலித்துவிட்டார்.

ஐஞ்சு நிமிசமும் இல்லை வைத்தி திரும்பி ஓடி,  ஒரு தங்க சங்கிலியும், இரண்டு தங்க மோதிரமும் கொண்டுவாறான். "சாமி இந்த சங்கிலி காணுமே, காணாதெண்டால் இரண்டு மோதிரத்தையும் வைச்சு கொள்ளட்டாம் " எண்டுறான். மனதுக்குள் குத்துமதிப்பாக கணக்கு பாத்தவர், இரண்டு மடங்கு தேறியபோதும், "வட்டியோடை  கையும் கணக்கும் சரி" எண்டவர், கனகுவிடம் "இதையெல்லாம் எடுத்து பெட்டகத்துக்குள்ளை வை" என்றார்.

பிறகு கவாலிகளை பாத்து, "நீங்கள் எல்லாம் இனி எண்ட மருமக்கள், அடிக்கடி வந்து போறது என்ன, ஆனால் காசோடை மாத்திரம் தான் என்னடா கண்ணுகளா. சரி சரி, இருட்டிப்போச்சு, காத்து கருப்பு , கன்னிகழியாத காளையளிலை பட்டிடப் போகுது, கவனமா வீடு போய் சேருங்கோ"
எண்டு நெடிலமாக சொன்னவர், சுத்தியிருந்த கூட்டத்தை பார்த்து "கூத்து முடிஞ்சுது, எல்லாரும் வீட்டுக்கு போங்கோ" எண்டவர் மிகவும் களைப்படைந்தவராக விடுதியுள் நுழைந்தார்.

இரவு சாப்பாடு முடிய கனகு, அண்டு சேர்ந்த கடன் நிலுவை வசூலிப்பை இரண்டாக பிரித்து ஒரு பங்கை செண்பகத்திடம் நீட்டினாள். "இது என்ன கனகு" எண்டு வினாவுகிறார். "இது இண்டைக்கு வந்த வசூலிப்பு , இரண்டாக பிரிச்சுருக்கிறன்" எண்டுறா கனகு. "இல்லை கனகு, இதை பவுத்திரமா வை, எங்கடை கடைசி காலத்துக்கு உதவும்" எண்டுறார் செண்பகம்.

திடுக்கிட்ட, கனகு யோசிக்கிறா, நான் நினைக்கிறதைதான் இவரும் நினைக்கிறாரோ. அவளுக்கு அவரில் ஒரு கண்,  அவரை கண்ட நாள் தொடக்கம் இருந்தது. அவருடைய அழகை  விட அவருடைய சகல கலா வல்லபத்தனத்தில் மிகுந்த ஆசை கொண்டிருந்தாள். அவருடைய திறமையுடன் ஒரு குழந்தை பெற வேண்டும் என்று பலதடவை கேட்க போய், இயலாமல் தவித்துப்போய் இருக்கிறாள். அவரோ காது குடையும் சுகத்தில் இவ்வுலகையே மறந்திருந்தார்.

ராமசாமியிடம் தனக்கும்  அவருக்கும்  ஒரு குழந்தை பிறக்க வேண்டும் எண்டு கேட்டாள் . அவரோ அவர் மாமனார் பெண் குடுக்கும் பொழுது இவ்வளவு சொத்தையும் உனக்கு எழுதி வைக்கிறன், எத்தினை வைப்பு வேணுமானாலும் வை ஆனால், என்ரை மகளுக்குத்தான் உன் குழந்தைகள் பிறக்கவேணும். வைப்பாடிச்சிக்கு ஏதாவது பெத்தியோ, குழந்தையை வெட்டி சுறாவுக்கு இரையாக்கி போடுவன் என்கிறார்.

இடிஞ்சுபோனாள் கனகு, பிள்ளையை பெத்து சுறாவுக்கு இரை  ஆக்கவோ, எண்டு நடு நடுங்கி போனாள். இதைவிட செண்பகத்திற்கு, ராமசாமியில் ஒரு கண் இருந்தது. என்ன ஒரு ஆம்பிளைத் தனம், என்ன ஒரு திமிர் பிடிச்ச நடை, செம்மண் சிவப்பு நிறம், உடம்பெல்லாம் புசு புசு எண்டு மயிர்,எண்டு உருகிப்போய்விடுவார். ராமசாமி வரும்போதெல்லாம் தற்செயலாக இடிப்பது போல் இடித்து , காசு வாங்கும் போது அவர் கைவிரலை  தடவி, மீசையிலை என்னவோ ஒட்டி இருக்கு எண்டு அவர் உதட்டை ஸ்பரிசித்து கள்ளுண்ட வண்டாக மதி மயங்கி போவார் செண்பகம்.

ஆனால் ராமசாமியோ பொட்டைப்பயலே எண்டு ஒரு பார்வையை வீசி விட்டு போய்விடுவார். சென்பகமோ, இந்த பொட்டை பயலின் மனசை அறிஞ்சு ஒருக்கால் என்னோடை படுக்கிறது. ஒருக்கால் என்னோடை படுத்தால் எப்ப, எப்ப எண்டு என்னைத்தான் தேடி வருவியள் என மறுகி நிக்கிறார்.

ராமசாமியும், இந்த செண்பகம் ஏன் என்னை இவ்வளவு ஈர்க்கிறான், இவனுடைய அழகோ அல்லது இவனது வார்த்தை சாதுரியமோ, அல்லது இவனது சகலகலா வல்லமையோ என தடுமாறி இருக்கிறார். சென்பகத்துடன் நண்பனாக இருக்க ஆசைப்படுவார். சிலவேலைகளை இவனைக்கொண்டு என் உடம்பை தைலம் பூசி பிடித்து விட சொல்லவா என்று கூட நினைத்ததுண்டு. சென்பகத்தின் ஸ்பரிசத்தை இரகசியமாக அனுபவித்தார். இவனை நான் காதலிக்கிறேனா என்று ராமசாமி குழம்பி போனதும் உண்டு.

தைலம் பூசி பிடித்துவிடும் சந்தர்பம் மட்டும் செண்பகத்துக்கு கிடைத்திருந்தால், ராமசாமியை முழுதாக ஆளுமை கொண்டிருப்பார், ஆனால் அது எப்பொழுதும் நடந்ததில்லை, நடக்கப்போவதும் இல்லை. ஏனெனின், ராமசாமியின் போலி கவுரவம், போலி ஆம்பிளைத்தனம் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை. இப்படியாக அந்த முக்கோண நாற்பது வயசு மனிதர்களின் காம வேட்கை தணியாமலே நீறு பூத்த நெருப்பாக தகித்துக்கொண்டிருந்தது.

இப்பொழுதெல்லாம் முல்லைத்தீவு காவாலிகள் அவரைகண்டால் தொடை நடுங்கி காலில் மூத்திரம் வடித்து நின்றார்கள். ஆங்கில சிப்பாய்களின் தாசனாக இருந்து, பின்பு அந்த விடுதியின் கருப்பு சாமியாய் அங்கிருந்தவர்களை காப்பாற்றி, அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து, முத்தி முறுகின ஆம்பிளை ராமசாமியையே சித்தம் கலங்கப்பண்ணி வெற்றி வீரனாக நெஞ்சு நிமிர்த்தி நின்றார்.

அவர் ஊரில் இப்பவும் அவர் உறவினர்  தம்மை, ஆங்கில படையில் தலைமை அதிகாரியாக இருந்த செண்பகத்தின் பூட்டனோ அல்லது பூட்டியோ  என்றோ சொல்வதில் பெருமிதம் அடைந்தனர். இந்த அவிசாரி, நாதாரி செண்பகம் வெள்ளைக்காற சிப்பாய்களுடன் அடிச்ச கூத்தை அறிஞ்சால் , ஓட்டை சிரட்டையிலை தண்ணி நிரப்பி  நாண்டு கொண்டு செத்துருப்பினம்.

அது எப்பிடி ஓட்டை சிரட்டையிலை தண்ணி நிறப்புறது, இது  காரைக்கலட்டியிலை சொல்லுற ஒரு  பொதுவான பேச்சு வழக்கு . அம்மாச்சியைதான் கேக்கவேணும். எப்பிடி கேக்க, அவ செத்து இப்ப முப்பது வருசமாச்சே.


தொடரும் ....

கருத்துரையிடுக