பக்கங்கள்

அப்பத்தா காவியம்-பகுதி 5-உதிச்ச பூமி விலகின புராணம்


அப்பத்தா காவியம் பகுதி 5


உதிச்ச பூமி விலகின புராணம் 

காலமை நாலு மணிக்கே முழு குடும்பமும் எழும்பியிட்டுது. முதல் நாளே குதிரை வண்டிலை வளவுக்குள்ளை  விட்டு தேவையான சாமான் எல்லாம் வைச்சாச்சு. சாப்பாடும், பணமும் நகைகளும் தான் உள்ளை இருக்கு. எல்லாரும் வெளிக்கிட்டாச்சு, கோச்சு இளையவன் கூட குதிரைகளோடை  வந்திட்டான், ஆனால் பொன்னுவுக்குதான் இருப்பு கொள்ளவில்லை. வாசலுக்கும் உள்ளுக்குமா அலையிறா. பாக்க பொறுக்காத இளையவன் கூட கேட்டுப்போட்டான் "என்ன நாச்சியார் யாரும் முக்கியமான ஆள் வரவேணுமே?" ம்ம்! என்ட பொன்னு உள்ளை போறா.

வண்டிலிலை எல்லா சாமானும், தேவையான சாப்பாடு  எல்லாம் எடுத்தாச்சு, "ஆத்தா' எண்டு தயங்கிறா. பிறகு சொல்லுறா "அத்தான் இப்ப வந்திடும், நடந்ததை சொல்லிப்போட்டு போவம், அவருக்கே இன்னும் தெரியாது, எங்களுக்கு கொழுப்பெடுத்து போறம் எண்டு நினைச்சு வேறை யாரையும் நாங்கள் வர முதல் கட்டியிட்டால் என்ன செய்ய."  " அதை கேட்டுக்கொண்டு வந்த ஐயாக்கண்டுவும் "சரி இன்னும் ஒரு அரை மணித்தியாலம் பொறுத்துப்பாபம்" எண்டுறார்.

வெளியிலை வந்து இளையவனட்டை சொல்லுறார் "புறப்பட இன்னும் ஒரு அரை மணித்தியாலம் ஆகும், இந்தா இந்த வெத்திலை பாக்கை போடு " எண்டுறார். "எனக்கு பறவாயில்லையாக்கும் ஆனால் எழுவது கட்டை பிரயாணிக்க வேணும். பெண்புரசுகள் வாறது இரவுபட முன்னம் போயிட்டால் நல்லது. புதுக்குடியிருப்பு தாண்டினால் காட்டுப்  பாதை, புலி, சிறுத்தை உலாவிற பாதை. பறவாயில்லை பாத்து செய்வம் என்டிறார் கோச்சு சாரதி.

ஐஞ்சு நிமிஷம் பத்தாகி, அரை மணித்தியாலம் போய் ஒரு மணித்தியாலம் ஆச்சு கணவதி வாறமாதிரி இல்லை. ஐயாக்கண்டு சொல்லுறார் "இனி பொறுக்கேலாது, கணவதியிண்டை கொழும்பு விலாசம் அக்கையட்டை எடுத்து வைச்சிருக்கிறன், கடதாசி எழுதி போடலாம்" எண்டவர் வெளி படலையை பூட்டி, செல்லாச்சன் ஏற உதவி செய்யிறார், "இந்தா பொன்னு நீயும் ஏறு" எண்டுறார். பொன்னு குதிரை வண்டில் ஏற படியிலை கால்வைக்கவும் ஒரு குதிரை வண்டில் அவையை தாண்டி கணவதி வீட்டுக்கு முன்னாலை போய் நிக்குது.

பொன்னு தலை தெறிக்க  அத்தான் காறனிட்டை ஓடிப்போறா. வண்டில் காரனுக்கு கூலி குடுத்து நிமிர்ந்த கணவதி, பொன்னு உடுத்து படுத்து ஓடி வாறதை கண்டு யோசினையோடை உள்ளை போகாமல்  நிக்கிறார். அவள் கணவதிக்கு கிட்டவர அவர் வந்த குதிரை வண்டிலும் வெளிக்கிட சரியாக இருந்தது. "என்ன பொன்னு, இவ்வளவு வேகமா ஓடி வாறாய், விழுந்து கை கால் முறியப்போகுது" என்கிறார் மிகுந்த கரிசனையுடன்.

பொன்னு மட மட வெண்டு நடந்தது நடக்கப்போறது எல்லாம் சொல்லிப்போட்டு திரும்பி வந்தவழியே அவ வண்டிலுக்கு ஓடிப்போறா. ஒரு சில வினாடிகள் திகைச்சு போய் நிண்ட கணவதி சுதாகரிச்சு "பொன்னு,  பொன்னு !! நில்லு பொன்னு " எண்டு பிறத்தாலை ஓடி போறார் கணவதி. அவர் திகைச்சு நிண்ட நேரம் கூடிப்போச்சு, குதிரை வண்டில் "டொக் டொக் !! எண்டு ஆரம்பிச்சு "டொகடக் டொகடக்" எண்டு வேகமாக போக ஆரம்பிச்சுது." பொன்னுதான் அழுத கண்ணோடை கை அசைக்கிறாள், மாமனும், மாமியும் திரும்பி பாக்காவே இல்லை.

வண்டி மறையும் வரை கணவதி  நடு வீதியிலை என்ன செய்ய எண்டு தெரியாமல், அந்த அறப்படிச்ச மூஞ்சூறு காடிப்பானைக்கை தவறி விழுந்து தவிச்ச மாதிரி, இந்த அறப்படிச்ச கணவதி என்கிற கணவதிப்பிள்ளையும்  நடுத் தெருவிலை செய்வதறியாது தவிச்சு அலமந்து நிக்கிறார். மெதுவாக திரும்பி வீட்டுக்கு போறார், அப்பு, ஆத்தைக்கு சொல்லி என்ன செய்யலாம் எண்டு கேப்பம் எண்டு நினைச்சவர் பெட்டி படுக்கைகளை தூக்கி கொண்டு வீடுக்குள்ளை  போக காலை உள்ளை வைக்கிறார்.

 இவ்வளவு நேரமும் பொன்னு  சொன்னது, அங்கை நடந்தது எல்லாத்தையும் வெளியிலை குதிரை வண்டில் நிக்கவே, முன் கதவுக்கு கிட்ட வந்த கணவதியிண்டை அப்பு செல்லக்கண்டு கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் நின்டதறியாது கணவதி "ஆத்தா, அப்பு எண்டு கூப்பிட்டு கொண்டு" உள்ளை காலடி வைச்சதுதான் தாமதம் ருத்திர மூர்த்தியாக செல்லக்கண்டு பாய்ஞ்சு கணவதியின் குடுமியை பிடிச்சபடி, முன் கதவை சாத்தி, அவர் களட்டி வைச்ச சப்பாத்தாலையே மடார், மடார்  எண்டு கணவதியிண்டை முதுகிலை அடிக்கிறார், திரும்பி பார்த்த கணவதிக்கு முகத்திலையும் அடி விழுகிறது.

"ஐயோ அப்பு சரியா நோகுது, இப்ப ஏன் அடிக்கிறியள்",  என்கிறார் கணவதி, "நாயே" எண்டு காலாலை  எட்டி உதைக்கிறார் கணவதியை , உருண்டு விழுந்த கணவதி கதவு திறப்பு நெத்தியிலை சிராய்க்க இரத்தம் முகத்திலை வடியுது. மூச்சிரைக்க செல்லக்கண்டு "நான் எண்டை  மருமகள் பொன்னு உனக்கு சொன்னதெல்லாம் கேட்டுக்கொண்டு நிண்டனான், நான் ஒரு பாவி எனக்கு அந்தநேரமே உயிர் போயிருக்க வேணும், பாவி உனக்கு அவள் அப்பு, ஆத்தா இரண்டு வழியிலையும் சொந்த மச்சாள், அவளை போய் இப்பிடி பண்ணி போட்டியே , ஐயோ ஐயோ" எண்டவர் கையிலை இருந்த சப்பாத்தாலை தன்ரை முகத்திலையே அடிச்சு கொள்ளுறார்.

பால் கறந்து கொண்டிருந்த முத்தாச்சன் சத்தம் கேட்டு முன்னுக்கு வாறா, தகப்பனும், மகனும் நிண்ட கோலத்தை பாத்து திகைச்சு போறா. கணவதி ஓடி வந்து "உங்களை அடியாதயுங்கோ என்னை அடியுங்கோ அப்பு, என்னை அடியுங்கோ" எண்டு அவர் கையை பிடிக்கிறார். "உன்னை பெத்ததுக்கு எனக்கு இந்த செருப்பை பீயிலை தோய்ச்சு அடிக்கவேணும். ஐயோ, நான்  என்ன செய்வேன், முத்துமாரி தாயே அந்த பெண்பிறப்பை காப்பாத்து, ஐயோ இந்த குடியை காப்பாத்து எண்டுறார்".

முத்தாச்சன் ஓடி வந்து "ஐயோ முகம் எல்லாம் வீங்கி போய்ச்சு" எண்டவ மகனை பாக்கிறா , "ஏன்டா மோனை இரத்தம் வழியுது" எண்டு பதை பதைச்சு ஒரு அடி எடுத்து வைக்க, செல்லகண்டு அகோரியாகிப்போறார் "நில்லு, அந்த நாறிக்கு கிட்ட போகாதை, உவன், உந்த படுபாவி எங்கடை பொன்னுவை கெடுத்துப்போட்டான், ஐயோ அவள் இப்ப மூண்டு மாசம். பாவி பூவை கிள்ளி கசக்கி போட்டுட்டான்."

முத்தாச்சன் அதிர்ந்து போறா, ஓடிப்போய் மகனை உலுக்கிறா, "ஏன்டா அப்பு சொல்லுறது உண்மையே?". "ஆத்தா நான் கெடுக்க இல்லை, அதை காந்தர்வ மணம் எண்டு சொல்லுவினம், இது வழக்கமான..." எண்டு கணவதி சொல்லி முடிக்கயில்லை, முத்தாச்சன் பத்திரகாளி ஆகிறா  "உனக்கென்ன ராச குமாரன் அல்லது காந்தர்வன் என்ட நினைப்போ காந்தர்வ மணம் செய்ய , பொன்னு  எண்டை மருமகள் குலவது, குலம் தழைக்க வந்தவள், ஏன் இராட்சத கலியாணம் எண்டு  சொல்லி இராவணன் மாதிரி கதற கதற தூக்கி கொண்டு போய் தாலி கட்டன், நரகத்து முள்ளு ".

முத்தாச்சனுக்கு மனம் ஆறவில்லை, "என்ன மூண்டு மாசமோ, இவன் கொழும்புக்கு போய் மூண்டு மாசமாகுதே" இது எப்பிடி.'  "உன்ரை மோன் வேலை கிடைச்சு போக முதலே இந்த வேலையை முடிச்சுப்போட்டு தான் போயிருக்கிறார், நீ எங்கை எண்டு கேக்க இல்லை, ஆடி பூர திருவிழாவிலை, கருவேலங் காட்டுக்குள்ளை ஒண்டுக்கு போக வந்தவளை அலங்கோலப்படுத்தி அனுப்பியிருக்கிறான்".

முத்தாச்சனுக்கு நெஞ்சை பிளப்பது  போலை இருந்தது, கதறி அழவேணும் போலை இருந்தது. "ஐயோ தம்பியையும், மச்சாளையும் எப்பிடி இனி முகம் குடுத்து கதைப்பன். இளங்குருத்தை கிள்ளி அநியாயம் பண்ணியிட்டியே பாவி. இப்பிடி செய்வாய்   எண்டு தெரிஞ்சிருந்தால் பிறந்த உடனையே கள்ளி பால் ஊத்தி உன்னை கொண்டிருப்பன், இப்ப நச்சு பாம்பா வளந்து, நஞ்சை கக்கி நிக்கிறியே."

முத்தாச்சனுக்கு  ஊமை காயமா நெஞ்சு கனத்து வெடிச்சு போகும் போலை இருக்கு. மகன் செத்தா ஆத்தா பாடுற ஒப்பாரி ஒண்டை பாடுறா "ஐயோ, எண்ணிய எண்ணமெங்கே, லட்சண குமாரன் எங்கே , கர்ணனும் தேரும் எங்கே, குடையும் குறு வாழுமெங்கே,  கொற்றமும் சுற்றமுமெங்கே, நால்வகை வாத்தியங்கள் எங்கே நாற்படைகளும் எங்கே, ஐயோ எல்லாம் எங்கே, எல்லாம் எங்கே!! எண்டு கதறினவ, மூர்ச்சையாகி மயங்கி சாயறா. செல்லக்கண்டு பாய்ஞ்சு பிடிச்சு கிடத்திவிடுறார்.அந்த நேரம் பார்த்து வீட்டு வேலை செய்யிற ஆரியமாலா  உள்ளை வாறா.

"ஆரியம், ஆத்தா மயங்கிப்போட்டா ஒரு செம்பு தண்ணி கொண்டுவா" எண்டு செல்லக்கண்டர் சொல்லி, ஆரியமாலா கொண்டுவந்த தண்ணியை முகத்திலை தெளிக்க, முத்தாச்சன் கண்விளிச்சு எழும்பிறா. மனம் ரணமாக வலித்தாலும், பாரம் கொஞ்சம் இறங்கின மாதிரி இருக்கு. "ஆரியம், பால் கறந்த குறை, பால் கறந்து, கண்ணு குட்டியை அவிட்டு விடு, பால் கோப்பி போட்டு கோச்சியிலை வந்த இந்த இராவணனுக்கும், ஐயாவுக்கும் குடு" என்றா. "என்னாத்தா இராவணனோ! இவ்வளவு காலம் போயும் உங்களுக்கு இத்திக்கண்டல்காற நெடிலம் போகயில்லை" எனடவளை  பாத்து "க்கும் ! இந்தவீட்டிலை இது ஒண்டுதான் குறைச்சல்" என்ட  செல்லாச்சன் மற்ற பக்கம் திரும்பி படுக்கிறா.

இவ்வளவுக்கும் கணவதி பிடிச்ச வைச்ச கணவதியா, பிடிச்சு வைச்ச பிள்ளையாரா  முகட்டு வளையை பார்த்துக்கொண்டு இருக்கிறார். "பொன்னுவை தவிர எல்லாருக்கும் என்னிலை கோவம். எண்டை ராசாத்தி பொன்னுவை தவிர வேறை ஒருவருக்கும், நான் அவளிலை வைச்சிருக்கிற பாசம், பட்சம்  தெரியாது", ஐயோ எண்டை  பொன்னு, பொன்னு எண்டு மனம் அடிச்சு கொள்ளுகிறது. இவளவுக்கு கொடிகாமம் போயிருப்பாளோ, காலமை சாபிட்டிருப்பாளோ, வயித்து பிள்ளைக்காறி! நாசமா போய்ச்சு, கழுத்திலை தாலி இல்லை ஆனால் வயித்திலை பிள்ளை. ஒரு ஐஞ்சு நிமிஷ உடல்சுகத்துக்காக ஒரு உத்தமியை நாசமாக்கி போட்டன். மனம் சாம்பல் பூத்த நெருப்பா தகிக்கிறது, நான் இப்ப என்ன செய்ய எண்டு மயிரை பிய்ச்சுகொள்ளுறார்.

அவர் படிச்ச புத்தகத்திலை இதைப்பற்றி ஒண்டும் சொல்லயில்லையே, மனுநீதியிலை ஏதாவது சொல்லியிருக்குமோ..ம்ஹ்ம்!!! படிச்ச ஞாபகம் இல்லையே!! தலைக்கட்டுவை கேட்டு பாப்பமோ, ம்ம்ஹ்ம்! வேலைக்கு உதவாது, மனிசன் என்னை கொண்டே போட்டிடும், தலைக்கட்டு பெரியம்மா, ஐயோ, பொன்னு எண்டால் அவவுக்கு உயிர், என்னை உரிச்சு உப்பு கண்டமே போட்டிடுவா. முத்துமாரிக்கு முறை சொல்லுவமோ, ஐயோ மாரி என்னிலை சரியான கோவமா இருப்பா , நான் கருவேலங்காட்டிலை மனிசர் செய்யிற காரியமே செய்தனான், அரக்க பிறப்பு மாதிரி எல்லோ நடந்து கொண்டன்.

கொடிகாமத்திலை வண்டிலை நிப்பாட்டி கொண்டுபோன இட்டிலியும் , சம்பலும் சாபிடுகினம்.
கோச்சிளையவனும் வயிறு புடைக்க சாப்பிடுறான். குதிரைக்கு தண்ணி காட்டி, சாப்பாடு போட்டு, எல்லாரும் காலாற நடந்து மறுபடி பயணத்தை தொடருகினம். கொடிகாமம் எல்லையை தாண்ட எல்லை பெயர் எழுதின பெயர் பலகை தாண்டுகினம்.

பொன்னு தமிழிலிலை எழுதி இருந்ததை வேகமாக வாசிச்சுப்போட்டா, இப்ப இங்கிலிசிலை எழுதி இருக்கிறதை எழுத்து கூட்டி வாசிக்கிறா, Ko....கொ....di...டி, ka....கா....mam ...மம் , கொடிகாமம். சரியா வருகுதே எண்டு நினைச்சவ கிளுக் எண்டு சிரிக்கிறா. "ஏன்ரி சிரிக்கிறாய்" என்றா ஆத்தா, கொடிகாமம் எண்டு இங்கிலிசிலை எழுதி இருந்ததை எழுத்து கூட்டி வாசிச்சனான்என்றா பெருமையா. செல்லாச்சன் மகளின்ரை முகத்தை பாக்கிறா 'வயசு பதினாறு, நேற்று பிறந்தவ, இப்ப வயித்திலை பிள்ளை , கழுத்திலை தாலி இல்லை, இந்த குழந்தைக்கேன் இப்பிடி விதி" எண்டு மனதுக்கையே புலம்பிறா.

கோச்சு இளையவன் சொல்லுறார், "கனக்க சாப்பிட்டது நித்திரை, நித்திரையாய் வருகுது, ஒரு பாட்டுபாடவே நயினார்" எண்டுறார். "சரி பாடு, நேரம் போறது தெரியாது" என்றார் ஐயாகண்டு. தொண்டையை கனைச்ச இளையவன் பாடுகிறார்.

ஆனை கொம்பெடுத்து முகட்டு வளை ஏத்தி, முகட்டு வளை ஏத்தி,

தங்க தகட்டாலை ஓடு செஞ்சு, கூரை தனை மேஞ்சு , கூரைதனை மேய்ஞ்சு,

தேக்கு மரத்தாலை கட்டிலொண்டு செய்து, கட்டிலொண்டு  செய்து,

செப்பு தகட்டாலை கட்டில் கால் பூண் செய்து, கட்டில் கால் பூண் செய்து

வெள்ளை வாத்து சிறகடைச்சு மெத்தை ஒண்டு செய்து, மெத்தை ஒண்டு செய்து

இலவம் பஞ்சடைச்சு தலைகாணிகள் செய்து, தலைகாணிகள் செய்து

பாரசீக பட்டாலை மெத்தைதனை மூடி, மெத்தைதனை மூடி

கவரி மான் மயிர் புடுங்கி சாமரங்கள் செய்து, சாமரங்கள் செய்து

தேர்ந்தெடுத்த முத்தாலை முத்துச்சரம் கோத்து, முத்துச்சரம் கோத்து

செவ்வந்தி பூ இதழ் புடுங்கி படுக்கையிலை போட்டு, படுக்கையிலை போட்டு

துலக்கி வைச்ச குவளையிலை பசும்பால் எடுத்து வைச்சு, பசும்பால் எடுத்து வைச்சு

காத்திருக்கேன் என்னவளே!! காத்திருக்கேன் என்னவளே !!

பொன்னுவுக்கு எனவோ அவவிண்டை அத்தான் அவவை நினைச்சு பாடுற மாதிரி இருக்கு. தூரத்திலை குதிரையிலை ராசகுமாரன் மாதிரி, அவவை தேடி ஓடி வாற மாதிரி, குதிரை வண்டில் கிளப்பின புழுதிக்கு பின்னாலை சம்பூர் மகாராசன் மாதிரி, அவர் பாடுறதுகூட கேட்குது

போறா போறா பொன்னாச்சன், தன்னந்தனியா தவிச்சு போறா,!!
தலைச்சன் பிள்ளையை வயத்திலை தாங்கி, தன்னந் தனியா தவிச்சு போறா !!

போறா போறா என்னட பொன்னு, என்னை விட்டு தனியா போறா,!!
போகாதை என்னை விட்டு, ஐயோ எங்கை போறாய் என்னட பொன்னு ,!!

குதிரை வண்டில் போட்ட "டொக் டொக்! டொகு டொக்! டொக் டொக்! எண்ட சத்தம் அவர் பாடுற  பாட்டுக்கு தாளம் போடுற மாதிரி இருக்கு எண்டு நினைச்சவ கண் கலங்கி போறா. கண்ணை சீலை தலைப்பாலை துடைச்சவ, நிமிர்ந்து புழுதியை கடந்து பாக்கிறா, குதிரையுமில்லை அவ அத்தானும் இல்லை. எல்லாம் பிரமை எண்டு நினைச்சவ நினைப்பை மாத்த எண்ணி "ஏன் இளையவரே, நீங்கள் பாடின பாட்டு அவ்வளவு சோகமா இருந்துதே, அப்பிடி என்ன சோகம் உங்கடை வாழ்கையிலை" எண்டு  கேக்கிறா பொன்னு, தன மனது சோகத்தை மறந்து.

"அட போங்கோ நாச்சியா, எண்டை இளையதாரத்தை நினைச்சு பாடினனான். எண்டை மூத்ததாரம் மார்கிரட் எலிசபெத். நல்ல சிவப்பா மூக்கும் முழியுமா இருந்தா எண்டு ஆசைப்பட்டு, ஆத்தா, அவையள்  நடத்தை சரியில்லாதவகள் எண்டு சொல்லியும், அடம் பிடிச்சு, வெள்ளை சீலை உடுத்து வெள்ளைக்காரி மாதிரி சிலுப்பி வந்தவளை கர்த்தருக்கு முன்னாலை சத்தியம் சொல்லி கை பிடிச்சன். மூண்டு மாச கலியாணம், யாரோ வெள்ளைக்கார துரை இவளை கண்டு, ஆசைப்பட்டு , அண்டைக்கு பின்னேரம் தண்டை கடற்கரை வீட்டுக்கு வா, எண்டாராம். அண்டைக்கு போனவள்தான் பிறகு ஒருத்தரும் காணயில்லை.

சிலபேர் அவளை கொழும்பு விபச்சார விடுதியிலை கண்டதாக சொல்லிச்சினம். ஆனால் அவள் இன்னும் ஊர் திரும்பயில்லை. அவடை குடும்ப பெண்டுகள் வெள்ளைக்கார துரைமாருக்கும், சிப்பாய்களுக்கும் சந்ததி சந்ததியா முந்தி விரிச்சே பழக்க பட்டவையாம். பிறகு ஒரு மூண்டு வருஷம் கழிச்சு இரண்டாம் தாரமா கறுப்பியை கைப்பிடிச்சன்.  அவள் பெயருக்கு ஏத்த நிறம், நாவல்பழ கறுப்பு, முன்னுக்கு துருத்திக்கொண்டு பாசி பட்ட முன் பல்லுகள் இரண்டும். ஆனால் அவள் குணத்திலை தங்க பவுண்.

அப்புவையும், ஆத்தாவையும் கவனமா பாத்தா, ஐஞ்சு பிள்ளைகளை பெத்தவ, ஆறாம் பிள்ளையை பெறாம, வயத்திலை பிள்ளை சாக, நஞ்சு ஊறி செத்துபோனா. அதுக்கு பிறவு அவ நினைவாகவே காலத்தை கடத்தியிட்டன், இதுதான் தாயி எண்ட சோகம். யாருக்கு என்ன எண்டு அந்த கர்த்தரை தவிர யாருக்கு தெரியும். திடீரென வானம் கறுத்து மழை துமிச்சு பெரு மழையாக பெய்கிறது. இளையவன் கதை கேட்டு இயற்கை தாயே அழுதது போல் இருந்தது.

"பளை கூடதாண்டயில்லை இதுஎன்ன தடையா போச்சே" எண்ட  இளையவன் முதல் வந்த அரச மரத்துக்கு கீழ் வண்டிலை நிப்பாட்டி, "என்னவாக்கும் நயினார் மழை வலும் பெரிசாய் இருக்கு, பாதை கூட தெரியயில்லை, மழை நிக்க தொடருவம்" என்றார் இளையவன். மழை நிக்க மதியம் ஒரு மணியாச்சு. அதுக்கிடையிலை  கொண்டு வந்த புழிச்சாதமும், நெய்யிலை பொரிச்ச உருண்டை கிழங்கும், பொன்முறுவலா பொரிச்ச அப்பளமும் சாப்பிட்டு முடிய மழை நிக்க சரியாக இருந்தது .

பரந்தன் எல்லைக்கு வர பின்னேரம் ஆறு மணியாச்சு. இளையவன் சொல்லுறார் "பொழுது பட்டு போச்சு, இனி கண்டி வீதியிலை இருந்து வலப்பக்கம் திரும்பி முல்லைதீவு வழியிலை போக வேணும், காட்டு பாதை, காட்டு மிருகங்கள் இரை தேடி வரும் , இண்டைக்கு எங்கையாவது சத்திரம் சாவடி எண்டு தங்கி நாளைக்கு காலமை தான் பயணம் தொடரலாம், என்னவாக்கும் நயினார்" எண்டு வினாவுகிறார் இளையவர். "சரி, முதலிலை எம்பிடுற சத்திரத்திலை நிப்பாட்டு "எண்டுறார் செல்லக்கண்டு. அரை மணித்தியாலம் பிரயாணம் செய்ய ஒரு புளிய மரத்துக்கு கீழை சத்திரம் ஒண்டு தென்படுகிறது.

குதிரை வண்டிலை சத்திர பக்கமாக ஓரம் கட்டி நிப்பாட்டி, தொப்பெண்டு கீழை குதிக்கிறார் இளையவன். பொன்னு வண்டில் திரையை விலக்கி பாக்கிறா, எங்கை பாத்தாலும் ஒரே மாட்டு வண்டில்களும், குதிரை வண்டில்களுமா ஒரே கூட்ட மாக தெரிகிறது. இதென்ன முழு யாழ்ப்பான சனமும் ஊரை விட்டு போகினமோ எண்டு நினைக்கிறா. செல்லகண்டு கீழை இறங்க படியிலை கால் வைக்க. பூண் போட்ட தடியை நிலத்திலை தட்டி, கொடுவாள் மீசையும், தலைப்பாகையுமா வந்து நிக்கிறான் சத்திரம் வாடகைக்கு விடுறவன்.

"யாரது, எங்கையிருந்து வாறியள், யார் பகுதி" எண்டுறான் கனத்த குரலில். இளையவன் "நான் கோச்சு இளையவனாகும், காரைக்கலட்டி பெரிய வெள்ளான் குடி ஒண்டை முல்லைத்தீவு பாதிரி பள்ளிக்கு... " எண்டு முடிக்க முன் செல்லக்கண்டு பின் குடுமியும், வெள்ளை வேட்டியும், பவுணில் செய்த உருத்திராட்ச மாலையும், உத்தூளன மாக திரு நீறு அணிந்து முன்னிக்க, பட்டு சேலையும், பவுண்  நகைகளும், வைர தோடும், எட்டுக்கல் பேசரியும், கணுக்காலில் வெள்ளி கால் சங்கிலியும், மெட்டிகளும் அணிந்து செல்லாச்சன் நிக்க,  தேர்ந்தெடுத்த தங்கத்திலை சோழகாலத்து தலைமை சிற்பி சிரமமெடுத்து செதுக்கிய தங்க சிலையாக, வைர அட்டியலும், முத்து கம்மல்களும் அணிந்து, அவள் எடையை விட அவள் அணிந்த நகைகள் எடை கூடவோ என வியந்து நிக்க பொன்னு அவ பின் நிக்கிறா.

அந்த மூண்டு பேரது தோரணைகளை கண்டவுடனேயே சத்திரக்காரனுக்கு யார் பகுதி எண்டு விளங்கி விட்டத்து. தலைப்பாகையை கழட்டி கக்கத்துக்குள் வைத்து கைகட்டி வாய் பொத்தி நிக்கிறான். "வரவேணும், மன்னிக்க வேணும், வாங்கோ, வாங்கோ உள்ளை வாங்கோ. இந்த சத்திரம் செய்த புண்ணியம், உள்ளை வாங்கோ" எண்டவன்  அவர்களை, சத்திர நடுக்கூடம் தாண்டி , ஓரமாக இருந்த ஒரு பகுதிக்கு கூட்டிபோகிறான், ஒரு பெரிய அறையும், தேக்கு மர கட்டில்களும், பட்டு  திரையிட்ட யன்னல்க்களுமாக அமர்களமாய் இருக்கின்றது, அவனுடைய மனைவி வந்து தூண்டாமணி விளக்குகளுக்கு எண்ணை  இட்டு விழக்கேற்றி பவ்வியமாக நிக்கிறாள்.

சத்திரக்காரன் மனைவி சொல்லுறா, "உங்கடை பகுதி குளிக்க எண்டு அந்தப்பக்கம் மறைவு கட்டியிருக்கு, குளிச்சு முழுகி வாங்கோ. சிவத்த மா புட்டும், நண்டுக்கறியும் இருக்கு, பொரிச்ச கத்தரிக்காய் இருக்கு, வேறை ஏதும் வேணுமோ? "எண்டு மூச்சு விடாமல் பேசி முடிக்கிறா. அது போதும், உடனை நாலு குவளை பால் கோப்பி நிறைய, சீனி போட்டு கொண்டுவா. கோச்சு இளையவனுக்கும் இதேமாதிரி கோப்பி, சாப்பாடு செய் " எண்டுறார்.

பிறகு சத்திரக்காரனை பார்த்து "இளையவன் இரவிலை கள்ளு குடிப்பான் எண்டு நினைக்கிறன், அவனை கேட்டுப்போட்டு கொஞ்சம் கள்ளு வாங்கி குடு, கனக்க குடுத்திடாதை , நாளைக்கு காலமை பிரயாணம் செய்யவேணும். கணக்கெல்லாம் கலையிலை பாத்து கொள்ளுவம்" எண்டவரை பாத்து "நான் பாத்து கொள்ளுறன்" என்கிறார் சத்திரக்காரர். பத்து நிமிஷமுமில்லை பால் கோப்பியுடன் நிக்கிறா சாத்திரக்காரன் மனைவி.

கோப்பி குடிச்சு கொஞ்சம் இழைப்பாறி, எல்லாரும் குளிச்சு முழுகி வர, சூடாக அரிசி மா புட்டு, நிறைய மிளகாய் தூள் போட்டு, முருங்கை இலையும் போட்டு காய்சின நண்டு கறியும், பொரிச்ச வன்னியில் கத்தரிக்காயும், உறைப்பாக இருந்தாலும் எண்டு நினைச்சு, கருப்பட்டி போட்டவிச்ச  புட்டு பிறம்பான  ஒரு சட்டியிலை வைக்கிறா. பரிமாற எண்டு தேங்காய் சிறட்டையிலை செய்த அகப்பைகளை வைச்சு பவ்வியமா ஓரம் கட்டி நிக்கிறா சத்திரக்காரன் பெண்டில். வாழை இலைகளை போட்டு மூவரும் இருந்து சாப்பிட  மான் தோல் விரிச்சவ, வேறை ஏதும் வேணுமோ எண்டு வினாவுகிறா. " கக்கண்டு போட்டு காச்சின பசும்பாலும் மூண்டு குவளையும் கொண்டு வா, அது போதும், காலமை எழும்பின உடனை வெறும் தேத்தண்ணி வேணும் அவ்வளவுதான்" எண்டுறா செல்லாச்சன்.

சத்திரக்காரன் பெண்டில் அறையை விட்டு வெளியே போனதும் மூவரும் உணவுண்ண ஆரம்பிக்கிறார்கள். ஒருகவளம் நண்டு கறியிலை பினைஞ்ச புட்டை உண்ட பொன்னு "ஐயோ ஆத்தா சரியான உறைப்பு " என்றா பொன்னு. "வன்னியிலை உறைப்பு சாப்பிடிறது கொஞ்சம் கூடத்தான், இப்பிடித்தான் இருக்கும் முல்லை தீவிலையும், சாப்பிட்டு பழகு" என்றா ஆத்தாகாறி.
இரண்டாவது கவளம் வைச்ச பொன்னு வாசலிலை நிழல் ஆட நிமிர்ந்து பாக்கிறா.

ஒரு மூண்டு வயசிருக்கும், ஒரு சிறு பெண் குழந்தை நிக்கிறது, வெத்து உடம்பாக அரையிலை மட்டும் ஒரு பழைய பாவாடை. காது குத்தி செப்பிலை செய்த கம்ம்பி வளையம் போட்டிருக்கு, கழுத்திலை கருப்பு நூலிலை சிப்பியை கோத்து சங்கிலியாக கட்டியிருக்கு, கையிலை  பாசி மணியிலை செய்த காப்பு. சிரித்த படியே சாப்பாட்டை பார்த்தபடி நிக்கிறது குழந்தை.

கசிஞ்சு போறா பொன்னு. குழந்தையை பார்த்து "இங்கை வா தாயி" என்கிறா பொன்னு. குழந்தை தயங்கி தயங்கி உள்ளை வாறா, செல்லாச்சனும், ஐயா கண்டுவும் "உள்ளை வா கண்ணு" எண்டவுடன் குழந்தை பயப்படாமல் உள்ளே நுழைகிறது. பொன்னுவுக்கு அருகே சாப்பாடிலிருந்து கண்ணை எடுக்காமல் குழந்தை வந்து நிக்கிறது.  "இந்தா இப்பிடி மான் தோலிலை இரு" எண்டவ "சாப்பிட்டியா கண்ணு?" என்டுகேக்கிறா. குழந்தை "ம்ஹ்ம் இல்லையே" என்கிறது.

"சரி உனக்கு குழம்பு உறைக்கும் நான் கருப்பட்டி புட்டு தீத்தி விடுறன் என்ன" எண்டவ , கை கழுவி இலையின் மற்ற பக்கமாக கருப்பட்டி புட்டை பிசைஞ்சு கொண்டு, "உனக்கு பெயரென்ன என்கிறா"
குழந்தை "பொன்னு" என்கிறது, "எட எண்டை பேரும் பொன்னுதான்' முதல் கவளத்தை தீத்தி விட்டவ, "உன் முழு பெயரென்ன " என்றா, குழந்தை முதல்  கவளத்தை விழுங்கியபின் "பொன்னலரி" என்கிறது. "எட பூவின்ரை பெயர் நல்ல இருக்கே" என்றா பொன்னு. மூண்டு நாலு கவளங்கள் குழந்தை சாப்பிட்டிருக்கும், சத்திரகாரன் மனைவி பால் செம்பும் குவளையுமா உள்ளை  வாறா.

குழந்தை உள்ளை இருந்து சாப்பிடுறதை  கண்டவ, பண்டியை கண்ட துலுக்கன் ஆனா," ஐயையோ இதென்ன கருமம், இது எப்பிடி உள்ளை வந்தது, உதாலை எழும்பு" எண்டு குழந்தையை அதட்டுறா. விம்முகின்ற குழந்தையை வாரி எடுத்து மடியில் இருத்தி, பொன்னு  சொல்லுறா "நாங்கள்தான் உள்ளை வா எண்டு கூபிட்டனான்கள், இப்ப ஏன் இப்பிடி கத்துறியள், அங்காலை போங்கோ , குழந்தை பயப்படுகுது." அதுக்கு சத்திரக்காரன் மனைவி சொல்லுறா"இதுகளை எல்லாம் நீங்கள் தொடப்படாது, அதுகள் எளியன் சா..." எண்டு முடிக்க முன் ஐயாக்கண்டு சொல்லுறார் "இஞ்சை இந்த குழந்தையிண்டை தோம்பு, துரவு சாதி வழமை எண்டு பட்டயம் வாசிக்காதை, நாங்கள் ஒண்டும் சாதி சனம் இல்லாத ஊரிலை இருந்து வரயில்லை, எங்களுக்கு பாடம் படிப்பிக்காமை ஒரு ஓரமா நில்லு".

செல்லக்கண்டு சொல்லுறா "குழந்தையும் கடவுளும் ஒண்டு, சாமிக்கு நைவேத்தியம் படைக்கிறா
என்ட மகள், இடையிலை குழப்பி சாமி குத்தம் ஆக போகுது, உனக்கு அது பெரிய விஷயமெண்டால் நாளைக்கு நாங்கள் போக சாணியும், மஞ்சளும் போட்டு அறையை பெருக்கி , கழுவிவிட்டிடு, வேணுமெண்டால் வழக்கமான சத்திர வாடகையை விட ஒரு மடங்கு கூட தாறம், அந்த குழந்தையை சாப்பிட விடு , வெளியிலை நில், தேவை எண்டால் கூப்பிடுறம், தங்கிறது சத்திரம் அதிலை என்ன சாதியையும், சமயமும், போ அங்காலை".

இதை எல்லாம் கேட்டுக்கொண்டு வந்த சத்திரக்காரன், " அவையள்  குழைகொண்டு கோழி எறியும் காசுக்காறரிலும் பெரிய காசுக்காரர் , இவயளிலை ஒரு வெள்ளாடிச்சியார் ஒல்லாந்தர் காலத்திலை முத்து பிச்சை போட்டவ. குடுத்து சாப்பிட இவைக்கு பாடம் படிப்பிக்கிறாய், போ அங்காலை, அவைக்கு சாதி சனம் படிப்பிக்கிறியோ, போடி அங்காலை!" எண்டு மனைவியை தன தடியால் தள்ளி வெளியே போக பண்ணுறார்.

இதுக்கிடையிலை குழந்தை சாப்பிட்டு முடித்து, அரை குவளை பாலும் குடித்து முடித்து விட்டது. "சாப்பாடு காணுமே கண்ணு " எண்ட பொன்னு சத்திரக்காரனை பார்த்து " இந்த குழந்தையுடைய ஆத்தாவை கூட்டிவா" என்கிறா. வந்து நிக்கிறது ஒரு நலிந்த உருவம், சாயம் போன சீலையை குறுக்கு கட்டாக கட்டி, கழுத்திலை ஒரு மஞ்சள் கயித்தோடை, தலை மயிர் எண்ணை கண்டு ஒரு யுகம் ஆகியிருக்கும். கையில் கண்ணாடி வளையல்.

செல்லக்கண்டு கேக்கிறா "நீயே இந்த குழந்தைக்கு ஆத்தா?". "நான் தானாக்கும்,  கோவிச்சு கொள்ள வேண்டாம் , நான் பயண களைப்பிலை அசந்து நித்திரையாய் போயிட்டன், இவ தன் பாடில்லை இங்கை வந்திட்டா, பெரிய மனசு பண்ணி எங்களை மன்னியுங்கோ" என்றா அந்த ஏழை பெண். "நீ ஒரு பிழையும் விடையில்லை, நாங்கள்தான் குழந்தையை உள்ளை வா எண்டு
கூப்பிட்டனான்கள், அதுசரி உன்னை பார்த்தல் சாப்பிட்ட ஆள் மாதிரி தெரியயில்லை, போய் உண்டை சாப்பாட்டு தட்டையும், குவளையையும் எடுத்துவா." என்கிறா செல்லாச்சன்.

மிஞ்சின புட்டு, நண்டுக்கறி, கத்தரிக்காய் பொரியல் எல்லாம் போட்டு, சாப்பிடு எண்டவ, மிஞ்சின பாலை குவளைக்குள்ளை விடுறா. அந்த ஏழை பெண் கண்கலங்கி சொல்லுறா அப்பு, ஆத்தா, அண்ணைமாரோடை இருக்கைக்கை சாப்பிட்ட நண்டு கறி , இரண்டு வருஷம் கழிச்சு இண்டைக்கு சாப்பிடுறன் சாபிடுறன்" என்றா. "சரி,சரி கண்ணை துடை இப்பிடி இருந்து சாப்பிடு, அங்கை போனால் எல்லாரும் பங்கு கேப்பினம், இரு இருந்து சாப்பிடு தாயி"என்றார்  ஐயாக்கண்டு.

"தாயி" எண்ட  சொல்லை கேட்டவுடன் பொன்னலரியின் ஆத்தா விக்கி, விக்கி அழுவுரா. "எண்ட  அப்பு இப்பிடித்தான் தாயி எண்டு ஆசை,ஆசையாக கூப்பிடும். அவயளை தவிக்கவிட்டு, வீட்டு வேலை செய்ய வந்த இந்த மனிசனை நம்பி ஓடி வந்து..". "சரி, சரி அழுறதை விட்டிட்டு சாப்பிடு, பிறகு பேசுவம்" என்றா செல்லாச்சன். அவ சாப்பிட்டு, பால் குடிச்ச பிறகு "இப்ப சொல்லு, உன்ரை புரியன் எங்கை?" என்றா. "கள்ளு கொட்டிலே கெதியெண்டு இருக்கிறார், கெட்ட கேடுக்கு அந்த குடியிலை வைப்பு வேற" எண்டு மூக்கை சிந்தி போடுறா.

"சரி, சரி அவரிட்டை சொல்லி ஒரு இருநூறு ரூபா வாங்கி தாறன், உன்பாட்டிலை ஊரை பார்த்து போ, ஏதாவது, கடை கண்ணி எண்டு வைச்சு பிளைச்சுப்போ. நான் சொல்லுறது சரிதானே. போய் படு காலமை, போகமுதல் என்னை கண்டுட்டு போ, சரியே." எண்ட  செல்லாச்சன் அறை கதவை சாத்தி பூட்டுறா. தகப்பனும், மகளும் நல்ல நித்திரை, இடம் மாறினதாக்கும் எல்லாருக்கும் மனப்பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு, ம்ம்!! எண்டவ, அம்மாளாச்சி தாயே!! எண்டு உடம்பை கட்டிலிலை சரிச்சவ உடனேயே உறங்கிப்போரா.

தொடரும் ....































































கருத்துகள் இல்லை: