பக்கங்கள்

அப்பத்தா காவியம் பகுதி-6-அஞ்ஞாத வாச புராணம்

அப்பத்தா காவியம் பகுதி 6


அஞ்ஞாத வாச புராணம்

கணவதி ஊருக்கு வந்த அண்டு பின்னேரம் முத்தாச்சன்  ஓரளவுக்கு ஆறி  போயிருந்தா. பின்னேரமா, கணவதி நண்பர்களுடன் பந்து விழையாட போக வெளிக்கிட, முத்தாச்சன் முன்னுக்கு வந்து சொல்லுறா "பந்து விழையாட போறது சரி, ஆறு மணிக்கெல்லாம் வீட்டிலை நிக்கவேணும் , கள்ளுக்கொட்டில் பக்கம் போனது, தாசிமார் வீட்டுக்கு போனது எண்டு கேள்விப்பட்டன் காலை உடைச்சு கையிலை தருவன். பொன்னு  திரும்பி வந்து நீ அவளை கட்டிற வரைக்கும் பொம்பிளை மணமே உனக்கு தெரியப்படாது, ஓம் சொல்லிப்போட்டன்! இது முத்து மாரி  சொல்லுற வேத வாக்காக எடுத்துக்கொள், என்ன விளங்குதே".

"சரி ஆத்தா உங்கடை தலையிலை அடிச்சு சத்தியம் பண்ணிறன், கள்ளு கொட்டிலுக்கு போக மாட்டன், நான் பொன்னுவை தவிர இன்னொரு பெண்ணை ஏறு எடுத்தும் பாக்க மாட்டன், பொன்னு  எண்டை மச்சாள், அவளிலை எனக்கு எவ்வளவு பாசமெண்டு உங்களுக்கு தெரியாது,
ஆனால் பொன்னுவுக்கு தெரியும், நான் அவளை ஒருநாளும் கைவிட மாட்டன் எண்டு" கண்கலங்கி சொல்லுறார் கணவதி.

"சரி, சரி உண்டை காதல் வசனங்களை விட்டுப்போட்டு வீட்டுக்கு பொழுது பட முன்னமே வா. குளிச்சு, திருநீறு பூசி இரண்டு தேவாரம் பாடு . அதுக்கு பிறகு சாப்பிடலாம் என்ன" என்றா ஆத்தாக்காறி , "சரி,சரி" எண்டு தலையை ஆட்டுகிறது அந்த ஐஞ்சடி பதினொரு அங்குல, இருவது வயது குழந்தை. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போக வெளியே வந்த அரியம், "இதென்னதிது, ஒருகாலும் இல்லாதமாதிரி ஆத்தா மகனிட்டை இவ்வளவு கடுமையாக கதைக்கிறா. என்னவோ இருக்கு" எண்டு நினைச்சவ மிஞ்சிய மதிய சாப்பாடு, கொண்டு வந்த தூக்கு சட்டியிலை பசும்பாலும்  எடுத்துக்கொண்டு "ஆத்தா போயிட்டு, நாளைக்கு வாறன்" என்கிறா.

சொன்னபடி கணவதி பொழுது சாய முன்னமே வீட்டுக்கு வாறார், ஆத்தா சொன்ன மாதிரியே, குளிச்சு, திருநீறு பூசி, சாமி கும்பிட்டு, மூண்டு பேரும் சாப்பிடுகினம். வீடு மயான அமைதியாக இருந்தாலும், சுடச் சுட சிவப்பரிசி இடியப்பமும், பால் சொதியும், உருளை கிழங்கு பொரியலும், முட்டை வறுவலும், நாக்கிற்கு சுவையாக இருந்தது. மதியம் செய்த பால் பாயாசத்தில் இட்ட முந்தரி பருப்பும், திராட்சை வத்தலும், "என்னை சாப்பிடு, என்னை சாப்பிடு கணவதி " எண்டு அவரை தூண்டிக்கொண்டே இருந்தன. "கொஞ்சம் பொறு, கொஞ்சம் பொறு" எண்டு கணவதி இடியப்பத்தையும், கறிகளையும் குழைச்சு, ஆத்தாவின் கை பக்குவத்தை இரசித்து சாப்பிடுகிறார்.

சாப்பிட்ட அரை வழியிலை, முத்தாச்சன் "நாசமா போச்சு" எண்டு சாப்பிட்ட கையை உதறிக்கொண்டு எழும்பிறா. "ஏன், இப்ப என்ன ஆயிட்டுது, நீ சரியா சாப்பிடவுமில்லை, மதியமும் சரியா சாப்பிடயில்லை" எண்டுறார் பிரியன். "ஆடியிலை கூடி தமிழுக்கு சித்திரை நடுக்கூறிலை பிள்ளை பிறக்க போகுது, அதுவும் ஆம்பிளை பிள்ளை எண்டால் இந்தக்குடி அதோ  கதிதான், "சித்திரை மாதம் புத்திரன் பிறந்தால் அக்குடி நாசம் எண்டுவினம்"எண்டு வருந்தி நிக்கிறா முத்தாச்சன்.

"சரிதான் போ முத்தாச்சன், இப்பவே குடிப்பெருமை நாறிக்கிடக்கிது, இதுக்குமேலை கெட ஒன்டிருக்கே, பேசாமல் சாப்பிடு" எண்டு, அவற்றை குடிமட்டுமல்ல  அந்த பெரிய வெள்ளாளன் குடியே குலப்பெருமையே  அத்துப்போக பொன்னுவின் கருவில் அவர் பேரக்குழந்தை வழர்கிறது என்றறியாமல் சொல்கிறார். எல்லை அம்மன் முத்து மாரி மெதுவாக சிரித்து, எல்லை காவலுக்கு தன் பரிவாரத்ததோடை பக்குவமா நடந்து நாட்களை எண்ணிய படி "மூட மானிடர்" எண்டு சொல்லி கணவதி வீட்டை கடந்து போறா.

மறுநாள் விடிஞ்சும் விடியாத நேரமா கனசனம் சத்திரத்தை விட்டு போயிட்டினம். பொன்னு குடும்பம் காலை கடன்கள் முடிச்சு வெளியிலை வர பொன்னலரியின் தாய் தயங்கி,தயங்கி இவர்களை பாக்கிறா. செல்லாச்சன் அவளை பார்த்து மெல்லிய குரலில்,"இந்தா நான் சொன்ன இருநூறு ரூபா, இதிலை இரண்டு பழைய சீலை இருக்கு, இந்தா இதிலை இரண்டு ரூபா இருக்கு, நீயும் பிள்ளையும் சாப்பிட்டிட்டு ஊரை பார்த்து போய் , பிழைக்கிற வழியை பார்" என்றா. "மெத்தப்பெரிய உபகாரம் ஆத்தா " எண்டவ கும்பிட்டு நிக்கிறா. ம்ஹ்ம்! உதெல்லா பெரிய பிழை, சாமியைத்தான் கும்பிட வேணும் மனுசரை கும்பிடப்படாது" என்றா செல்லாச்சன், பொன்னு ஓடி வந்து பொன்னலரி கன்னத்தை கிள்ளி  "என்னை மறக்கமாட்டியே" என்றா, குழந்தை "ம்ஹ்ம் மாட்டன் " எண்டு சிரிக்கிறது.

சத்திரக்காரன் பெண்டில், ஒரு தாம்பாளம் நிறைய சுடச்சுட, வெள்ளை அப்பம் , கருப்பட்டியிட்ட பாலப்பம், முட்டை அப்பமும் கையாலை பினைஞ்ச தேங்காய் பூ சம்பலும், எல்லாருக்கும் பால் கோப்பியும்  வைக்கிறா. சாப்பிட்ட குறையிலை ஐயாக்கண்டு "வன்னியில் சமையல் தூக்கலாத்தான் இருக்கு" என்றார். அதுக்கு சாத்திரக்காரன் பெண்சாதி சொல்லுறா "நாங்கள் ஒண்டும்  வன்னியர் இல்லை, நாங்கள் வடமராட்சியிலை ஐயனார் கலட்டி, இவர் இந்த சத்திரத்தை குத்தகைக்கு எடுத்தபடியால் இங்கை வந்திருக்கிறம்." என்றா பெருமையாக. "சரி, சரி என்னவோ சமையல் நல்லாத்தான் இருக்கு, அது சரி இளையவன் சாப்பிட்டானோ ?" என்று வினாவுகிறார். "ஒ ,அவர் எப்பவோ சாபிட்டு குதிரை வண்டிலும் ஆயத்தம்" எண்டபடி வாரார் சத்திரக்காரர்.

"சரி, அவரை கூப்பிட்டு இந்த பெட்டியள், பேழைகள் எல்லாத்தையும் வண்டிலிலை ஏத்துங்கோ எண்டவர், பொன்னு வா மேனை நேரமாச்சு, சுருக்க போனால்தான் மதியமாவது, முல்லைத்தீவு போய்ச்சேரலாம், செல்லாச்சன் கெதியா வா" எண்டவர், சத்திரகாறரை பாத்து "கணக்கை பாரும்" எண்டுறார் தன்னுடைய சுருக்கு பையை திறந்த படி. "எல்லாமாக ஐஞ்சு ரூபா நாப்பத்தி மூண்டு சதம் வருகிது அதிலை பதின்மூண்டு சதம் இளையவனிண்டை கள்ளுக்காசு" என்றார் சத்திரக்காரர். ஒரு ஐம்பது ரூபா தாளை நீட்டுகிறார் ஐயாக்கண்டு. "என்னட்டை இவ்வளவுக்கு மாத்த காசில்லை" எண்டுறார் சத்திரக்காரர் . "பரவாயில்லை மிச்சத்தை வைச்சுக்கொள்" என்றார் ஐயாக்கண்டு. சத்திரக்கார  உடம்பை மூன்றாக மடிச்சு கும்பிடு போடுகிறார்.

அதைக்கண்ட சத்திரக்காரன் பெண்சாதி, சடார் எண்டு தாளை பறிச்சு சீலை தலைப்பிலை முடிஞ்சவ "மூத்தவளுக்கு செய்த அட்டியல் காசு நிலுவையிலை இருக்கு, இப்பத்தைக்கு இதை
பத்தரிட்டை குடுத்து சமாளிப்பம்" என்றா, "காசுப்பூதம், காசுப்பூதம்!! சத்திரத்து தேவைக்கு அரிசி, பருப்பு சாமான் சட்டு வாங்க எண்டிருக்க நீ எல்லாத்தையும் பறிச்சுப்போட்டாய்" எண்டவருக்கு, "ஹா அதுக்கு புறம்பா காசிருக்கெண்டு எனக்கு தெரியாதெண்டு நினைச்சியளாக்கும்" எண்டவ மத்தியான சமையலுக்கு எனென்ன செய்ய எண்டு உத்தரவு  போட்டடவ காலாற திண்ணையிலை இருந்து வெத்தலை, பாக்கு போடுறா.

குதிரை வண்டில் சத்திரவாசல் கடக்க, பொன்னு திரை சீலையை மெதுவாக விலக்கி பாக்கிறா,  , அவ தாயும் யாழ்பாணம் போற ஒரு குதிரை வண்டிலிலை ஏறுறதை கண்டவ, "ஆத்தா அங்கை பாருங்கோ, பொன்னலரியும்  தாயும் ஒரு வண்டிலிலை ஏறுகினம்" என்றா, எட்டிப்பாத்த செல்லாச்சன் "எங்கையாவது நல்லா இருந்தால் சரி" என்றா. குதிரை வண்டில் வேகமாக கண்டி வீதியில் போகிறது, உள்ளை இருதவர்கள் மனோவேகத்தை விட வேகமாக போகிறது. கோச்சு இளையவன் தன்னுடைய வழக்கமான சோக பாட்டை விடுத்து காத்தவராயன் கூத்து பாட்டை எடுத்து விடுகிறார். "பள்ளிக்கூடம் போவதென்றால் பெத்தவளே தாயே, எனக்கு பயம், பயம்மா இருக்குதெல்லோணை, பெத்தவளே தாயே " எண்டு பலமாக பாடுகிறார்.

மாங்குளம் தாண்டி, முல்லைத்தீவு வீதியிலை வண்டில் காட்டு பாதையிலை போகிறது. வெள்ளை துரைமார், வாயிலை சுருட்டு புகைக்க, நல்ல சாதி குதிரையிலை இருந்தபடி மரம் வெட்டுறவையை மேற்பார்வை செய்யினம்.பெரிய மரங்களை யானை வைச்சு இழுக்கினம். களைப்பு தெரியாமல் இருக்க கூலிக்காரர் "ஏலேலோ, ஏலய்யா, ஏலோலம்படி ஏலய்யா" எண்டு பாட்டு படிக்கினம். கொஞ்ச தூரம் போக சில துரைச்சாணிமார் கரப்பு கூடையை கவிட்டு, பட்டுத்துணியாலை  சோடிச்ச மாதிரி பாவடையும், இறுக்கமான ரவுக்கை போட்டு, மாராப்பு இல்லாமல், தலையிலை தொப்பியோடை, மர  நிழலிலை தேத்தண்ணியும், விசுக்கோத்தும், சீனா குவளையிலை குடிக்கினம்.

எதோ ஞாபகம் வந்த பொன்னு "அப்பு  நேற்று இரவு சத்திரக்கரர் எதோ எங்கடை பரம்பரையிலை யாரோ முத்து பிச்சை இட்டதாக சொன்னாரே. அது என்ன அப்பு?" என்கிறா. அதுவா ஒரு முன்னூறு, நானூறு வருசத்துக்கு முந்தி, ஒல்லாந்துகாரன் மன்னார் கடற்கரையிலை முத்து குளிப்பு வியாபாரம் செய்தவையாம். அப்ப எங்கடை பக்கத்து அந்தக்கால ஆக்கள் ஒரு பக்கத்தை ஏலத்திலை குத்தகைக்கு எடுப்பினமாம். முத்து குளிக்கிறவை கடலுக்கை குதிச்சு எந்த சிப்பிக்குள்ளை முத்து இருக்கோ இல்லையோ எண்டு தெரியாமல் சாக்கு நிறைய சிப்பியை அள்ளி மேலை வருவினமாம்.

"இதுக்குள்ளையும் ஒரு கதையிருக்கு, கடலுக்கை குதிக்க முதல் ஒரு நீட்டு கயித்து ஒரு முனையை அரையிலை கட்டிக்கொண்டு, மற்ற முனையை தன் மனவியிண்டை தம்பியிட்டைதான் குடுப்பினமாம். ஏனென்டால் மூச்சு பிடிச்சு உள்ளை குதிச்சவை , சிப்பி சேர்த்து மூச்சு முட்ட கயித்தை ஆட்டுவினமாம். பெஞ்சாதியிண்டை தம்பிஎண்டால் அக்கா விதவையாக கூடாது எண்ட நல்ல நினைப்பிலை கவனமாக வெளியிலை எடுத்து விடுவினமாம். எப்பிடி இருக்கு கதை". எண்டுறார் ஐயாகண்டு.

"அது சரி அப்பு! அது என்ன முத்து பிச்சை இட்ட கதை" எண்டு வினாவுகிறா பொன்னு. "சரி, சரி கதை மாறிப்போச்சு, எடுத்து வந்த சிப்பிகளை கடற்கரையிலையே கூர் கத்தியாலை திறந்து தசை ஒரு பக்கம், முத்து ஒருபக்கம் எண்டு போடுவினம். அந்த சிப்பி தசையை ஒல்லாந்தரும், மன்னார் வேதக்காரரும் என்னவோ செய்து சாப்பிடுவினமாம். இப்ப எடுத்த முத்தெல்லாம் ஈரமாக இருக்குமாம். சேர்த்த அவ்வளவு முத்தையும் பலத்த காவலோடை வீட்டுக்கு எடுத்துப்போய் காய வைப்பினமாம்." எண்டுறார் ஐயாக்கண்டு.

"இப்பிடித்தான் ஒருநாள் எங்கடடை பரம்பரையிலை, பல வருடங்களாக ஒரு பேரனுக்கு காத்திருந்தாவாம் ஒரு கிழவி. அண்டைக்கு காலமைதான் அவ மூத்த மருமகள் ஐஞ்சு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பெத்தாவாம். முத்து காய வைக்கிறவையை மேற்பார்வை செய்துகொண்டிருந்த கிழவியிடம், ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டானாம் . நல்ல சந்தோசமா இருந்த கிழவி காயக்கிடந்த தரம் பிரிக்காத முத்திலை ஒரு பிடி அள்ளி, இந்தா பிடி, இதை வித்து பிழைச்சுப்போ " எண்டு குடுத்தாவாம்.

"அவ குடுத்த முத்திலை ஒரு முத்து அதி, தரம் வாய்ந்தது எண்டு தரம் பிரிக்கிற வித்துவான்கள் தீர்மானிக்க, அதை பிச்சைக்காரன் பத்தாயிரம் ரூபாவுக்கு ஒல்லாந்தருக்கு வித்து.ஒரு கப்பல் வாங்கி வியாபாரம் பண்ணி பெரும் பணக்காரன் ஆகி, தன்ரை கப்பலுக்கு முத்து பிச்சையிட்ட கிழவியின்ரை  பெயரையே வைச்சானாம், இதுதான் முத்து பிச்சை இட்ட கதை" எண்டு முடிக்கிறார் ஐயாக்கண்டு.

"இது ஒண்டும் ஆத்தா என்னை சின்னவயசிலை நித்திரையாக்க சொன்ன "ஒரே ஒரு ஊரிலை ஒரே ஒரு ராசா கதையில்லையே, ஏதோ எடுத்து வைச்சு கட்டின கதை மாதிரி இருக்கு " என்றா பொன்னு. "இது எழுதிவைச்சு படிச்ச கதையில்லை ஆனால் வாய் வழியாக வந்தகதை, உனக்கு உன்ரை பரம்பரை பெருமை தெரியாது, உண்ரை காதிலை போட்டிருக்கிறாயே முத்துக்கம்மல் அது செய்து எவ்வளவு காலம் தெரியுமே. எப்பவோ செய்தது, சந்ததி சந்ததியா கைமாறி வருகுது, அதின்ரை பெறுமதி தெரியுமே, இப்பத்தை காசிலை ஒரு பத்தாயிரம் வரும்' எண்டுறா செல்லாச்சன். பொன்னு பெருமையாக தன கம்மல்களை தொட்டு பார்த்து கொள்ளுறா.

"எங்கடை பெட்டகத்துக்குள்ளை உள்ள பவுண் , முத்துகள், வைரங்களை எல்லாம் வித்தால் முழு யாழ்ப்பாணத்தையும் வாங்கிபோடலாம்" என்றார் ஐயாக்கண்டு மிக பெருமையாக. "அப்ப காவலுக்கு ஒருத்தரையும் போடாமல் வந்திட்டியள், கள்ளன் எடுத்துகொண்டு போக மாட்டானே" என்றா பொன்னு. "அதிலையும் பெரிய கதை ஒண்டு இருக்கு, எங்கடை குடியிலை வீடு கட்டி அத்திவாரம் போட்டபிறகு, பெட்டகத்தை ஈசான மூலையிலை வைச்சு ஒரு கொட்டில் மாதிரி கட்டி மழை ,வெய்யில் படாமல் பாதுகாப்பாக வைச்சிருப்பினம். பிறகு சுவர் எழுப்பி, கூரை போட்டு  வீட்டு கதவு நிலை  போடக்கை,  அது பெட்டகத்தை விட அரை பங்கு சின்னதாகதான் இருக்கும்".

"பெட்டகத்தை தூக்க ஒரு முப்பது பலசாலிகளாவது  வேணும், தூக்கி கொண்டு போறதெண்டாலும் சுவரை இடிச்சுத்தான் போகவேணும். சுவர் இடிக்கு மட்டும் ஊர்சனம் என்ன பாத்துக்கொண்டே இருக்கும்" எண்டுறார் ஐயாக்கண்டு. "மரப்பெட்டகம் தானே அப்பு, அதை அரிவாழ் போட்டு அறுக்க ஏலாதே? எண்டு வினவுகிறா பொன்னு. " "மரப்பலகையோ, ஒவ்வொண்டும் தடிப்பான, வயிரம் பாஞ்ச தேக்கு மர துண்டுகள், வெளியிலை வயிரம் பாஞ்ச இரும்பாலை வேலைப்பாடு செய்திருக்கும், உள்ளை இரண்டு பலகையுளுக்கிடையிலை செப்பு தகடுகள் இருக்கும். மரப்பொருத்துகள் எல்லாம் ஈயம்  உருக்கி ஒட்டி இருப்பினம். அதை விட உள்பக்கமும் வெளிப்பக்கமும் இரும்பு தட்டிலை செய்த இரும்பு  பிணைச்சல் போட்டிருக்கும்  மிக திறமையான கம்மாளரும், தச்சரும் கள்ளராக மாறி அரிஞ்சாலும், அரிஞ்சு முடிய  எத்தனை நாள் செல்லும்  எண்டு நினைச்சுப்பார்."

"அப்பிடி இல்லை எண்டு திறப்பு கிடைச்சாலும். கதவு பூட்டு  திறக்கிற மாதிரியில்லை. திறப்பிலை, வளையம் வளையமா புரிகள் வெட்டி இருக்கும். இத்தனை புரி வரை உள்ளை தள்ளி வலப்பக்கமா திறந்து பிறகு இத்தனை புரி வரை வெளியிலை இழுத்து இடது பக்கமா மூண்டுதரம் திறந்து, இப்பிடி ஒரு பத்து தரம் புரி பார்த்து பிழை விடாமல் திறந்தால் (எத்தனை தரம், எந்த புரி, எந்தப்பக்கம் திறக்க வேணும், எல்லாம் பெட்டகத்துக்கு பெட்டகம் வித்தியாசமா இருக்கும்)பெட்டககாரருக்கு தான் அது தெரியும், அதுவும் சத்தி சந்ததியா வாய் வழியா கேட்டுத்தான் தெரிய வரும், எழுதி வைக்கிறது கிடையாது."

"பெட்டகத்தை திறத்தாலும் பெட்டகம் வெறும் பெட்டகமாத் தான் இருக்கும், ஆனால்  எல்லா பக்கமும் கள்ள அறைகள் இருக்கும். அந்த அறைகளிண்டை பலகையளை ஒவ்வொரு பக்கமா இழுத்தால்தான் கதவு திறக்கும். எந்த பக்கம் தள்ள வேணும் எண்டு பெட்டக
சொந்தக்காரருக்குத்தான் தெரியும். அதுக்குள்ளை தான் பெறுமதியான நகையள்  இருக்கும்". எண்டுறார் ஐயாக்கண்டு,

"எட எங்கடை ஆக்கள் வலும்  கெட்டிகாரர்தான்" எண்டவ, "அப்ப எங்கடை குடி எல்லா வீட்டிலையும் பெட்டகம் இருக்கே" எண்டு வினாவுகிறா பொன்னு. ஓம், ஓம் எண்டுதான் நினைக்கிறன், யாருக்கு தெரியும் அவயளடை அறைக்குள்ளை என்ன இருக்கு எண்டு " எண்டுறா செல்லக்கண்டு. "அது என்ன அப்பு குழை கொண்டு கோழி எறியும் காசுக்காறர்" எண்டு நெத்தியை சுருக்கிறா பொன்னு. "நான் கேள்விப்பட்டிருக்கிறன், எனக்கு அதுக்கு என்ன அர்த்தம் எண்டு தெரியாது, செல்லகண்டு உனக்கு தெரியுமே?" எண்டு தன்  மனைவியை கேக்கிறார். "ம்ஹ்ம், எத்தினையோ பேரை கேட்டுப்போட்டன் ஒருத்தருக்கும் தெரியாது" என்றா செல்லக்கண்டு.

ஒருகாலமும், அந்த குடும்பம் இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்து கதைத்தது கிடையாது. எல்லாருக்கும் எதாவது வேலை இருக்கும் , அல்லது பக்கத்துக்கு வீட்டு காறருக்கு ஏதாவது உதவி தேவைப்படும். இப்பிடி கதைச்சதிலை பொழுது போனது தெரியவில்லை. திடீரென, கோச்சு இளையவர் "ஓ! ஓ !" எண்டு சொல்லி குதிரைகளை நிப்பாடுகிறார். முல்லைத்தீவு எல்லை வந்திட்டுது, ஆனால் பாதிரி பள்ளிக்கு போற வழி, யாரையும் கேக்க வேணும்" எண்டுறார். பொன்னு திரை சீலையை விலக்கிவெளியே எட்டிப்பாக்கிறா, முல்லைத்தீவு எண்ட  பெயர் பலகை தெரிகிறது.  குதிரைகள் வாயிலிருந்து கக்கிய நுரை, வேகமான காத்தில் பறந்து போகிறது.

தூரவாக ஒரு வயதான கிழவி வாறா. குதிரைகளை மெதுவாக நடத்தி அந்தகிழவி கிட்ட நிப்பாட்டுறார். "ஏய் தாயி, பாதிரி பள்ளிக்கு வழி  சொல்லு"  எண்டுறார் இளையவன். "யாரது, தூர இருந்து வாறியளோ, யார் பகுதி" எண்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வந்திருக்கிறது யார் எண்டு அறிய முயல்கிறாள் முல்லைத்தீவு கிழவி. நாசமா போச்சு, "உங்கடை ஊரிலை வழி கேட்டால் தோம்பு துரவு அறிஞ்சுதான் பதில் சொல்லுவியளோ" நெடிலமாக பதில் சொல்லுகிறார் இளையவன்.

"என்ன யாழ்ப்பாணமே, பேச்சும் நடவடிக்கையும், என்ன பெண்புரசு உள்ளை இருக்கிறமாதிரி இருக்கு, இஞ்சை உங்களுக்கு  என்ன அலுவல், வயித்திலை வாங்கின கள்ள பிள்ளையை இறக்கி வைக்க வந்திருக்கிறியளோ, பாதிரி பள்ளி தொடங்கினாலும் தொடங்கிச்சு, இதுவே பிழைப்பா போச்சு" என்றா கொஞ்சமும்  யோசிக்காமல். உள்ளே இருந்த மூண்டு பேரது முகங்களும்  சுணங்கி போகின்றது. "ஏய் நாறல் கிழவி இந்த குதிரைச்சாட்டையாலை ஒரு சொடுக்கு  விட்டன் எண்டால் உண்டை கூன் முதுகு நிமிரும், நாசமா போன கிழவி, வந்திருக்கிறது யார் தெரியுமே, காரைக்கலட்டி பெரிய வெள்ளாளன் குடியாக்கும், கொஞ்சம்  வார்த்தையை அளந்து பேசு" என்கிறார் இளையவன்.

"எட  முத்துப்பிச்சையிட்ட கூட்டமாச்சே, மன்னிக்க வேணும் ராசா கூட்டம், இப்பிடியே நேரை போனால் முல்லைத்தீவு சந்தை வரும், அது கடந்து மூண்டாவது வலப்பக்க ஒழுங்கையிலை திரும்பினால், அவிசாரியள்  வீதி வரும் ...." அதிசயப்பட்ட இளையவன் கேக்கிறார் "அது என்ன அவிசாரியள்  வீதி, பெயர் பலகை மாட்டி இருக்குமோ?" "என்ன நீ!  பச்சை மொக்கனாக இருக்கிறாய், விபச்சாரியள்  வீதிக்கு ஏன் பெயர் பலகை, அதுதான் ஆம்பிளையள் தலையிலை முக்காடு போட்டு அங்காலை, இங்காலை பார்த்துக்கொண்டு உள்ளை போறதும் , வெளியிலை வாறதுமா இருப்பினம். உனக்கு பாக்கவே தெரியும்."

"நாசமா போச்சு, கொடுமை, கொடுமை எண்டு கோவிலுக்கு வந்தால், கோவிலிலை கொடுமை சலங்கை கட்டி சிங்கு சிங்கு எண்டு ஆடிச்சாம், செய்யிற தொழிலுக்கு இலக்கண சுத்தமா ஒரு பெயர் வேறை, வழியை சொல்லி துலை கிழவி, உச்சி வெய்யில் மண்டையை பிளக்குது" எண்டு சலிக்கிறார் இளையவன். "பிறகு அவிசாரியள்  வீதி கடந்து இரண்டாவது  ஒழுங்கை வலப்பக்கமா  திரும்பினால் கொஞ்சதூரம் போக வேதக்காற சுடலை வரும், அது தான்டினால் பாதிரி பள்ளி எண்டு பெயர் பலகை வரும், வாசலிலை காவல் காறன் நிப்பான், யார் எது விபரம் எண்டு சொன்னால் உள்ளை விடுவான்." எண்டுறா அந்த விவகாரம் பிடிச்ச கிழவி.

"இந்தா இளையவன், இந்தக்காசை கிழவியிட்டை குடு, இவ்வளவு நேரமா அவ கதைச்ச கதைக்கு தங்க நாணயம் குடுக்க வேணும், இப்போதைக்கு அச்சாரமா இதை வைச்சிருக்க சொல்லு " எண்டு ஒரு ஐந்து ரூபா தாளை  நீட்டுகிறார். காசைக்கண்ட கிழவி தேன் குடிச்ச நரியானாள் "ராசா
கூட் டம் எண்டால் ராசாகூட்டம் தான், கும்பிடுறன் சாமி, ஒரு மாசத்துக்கு கொடிட்டிக்கொட்டி கள்ளு குடிச்சு, மூண்டு வேளை மூக்கு முட்ட சாப்பிடலாம்" எண்டவ ஆனந்த கூத்தாடி தன்பாட்டிலையே கதைச்சுக்கொண்டு போறா.

 "பேரீச்சம் பழமும், முந்திரி பருப்பும் போட்டு சக்கரை சோறு செய்ய வேணும், பேரப்பிள்ளையளோடை மான் இறைச்சி குழம்பும், வரகரிசி சோறும், வழுதுணன் காய் வாட்டும் சாப்பிட வேணும் , கோடை வெய்யிலுக்கு வேப்ப மர நிழலிலை தூக்கலா உப்பு, பிஞ்சு மிளகாய்,சின்ன வெண்காயம்  போட்டு தடிச்ச மோர் குடிக்க வேணும், மருமோளுக்கு பத்து சதம் குடுத்து மருத்தெண்ணை  பூசி,உடம்பெல்லாம் நீவி , ஒத்தடம் பிடிக்க வேணும் , பாரை மீன் குளம்போடை ..... இப்பிடியே பட்டியல் போட்டபடி கிழவி காட்டு பக்கமா போறா.

கிழவி சொன்னது என்னவோ உண்மைதான், அவிசாரியள் வீதி ஒரே அமர்களமாய் இருக்கிறது. 1920ம் ஆண்டு,  முதலாம் உலக மகாயுத்தம் முடிஞ்சு இரண்டு வருடங்கள் தான் முடிந்திருந்தது, யாழ்  மண்டல மக்கள் மன்னராட்சி முடிந்து, போத்துக்கீசர், ஒல்லாந்தர் கொடுங்கோலிருந்து  தப்பி பிழைச்சு இங்கிலாந்துகார ஆட்ச்சியில், அதீத வரிக்கொடுமையில் இருந்து விடுதலை அடைந்திருந்தனர். சமயம் மாறினார்கள்,  முதலில் போத்துக்கீசன் அடாவடியாக எல்லோரையும் கத்தோலிக்கராக மாத்தினான், பிறகு டச்சுக்காரன் அந்த சமயம் பிழை எண்டு சொல்லி புரட்டஸ்தாந்து சமயத்தை திணித்தான்.

சிலபேர் தாமாக விரும்பி சமயம் மாறிய போதும் பலர் இயலாக்கொடுமையில் சமயம் மாறினார்கள். இது காணாது எண்டு, மக்களையும், நாட்டையும் காக்க வேண்டிய சங்கிலி மன்னன் மன்னாரை போத்துக்கீசரிடம் இழந்து விட்டு, மன்னாரை மீட்கும் முயற்ச்சியை செய்யாமல் மன்னாரில் கத்தோலிக்கராக மாறிய அறுநூறு தமிழ் மக்களை ஒரு நாளில் கொன்று குவித்தான். பலர் அந்நிய பாசைகளில்  தேர்ச்சி பெற்று குலத் தொழிலை விடுத்து அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார்கள். ஆனால் ஆதி காலத்தில் இருந்து நடந்து வரும் விபச்சார தொழில் மட்டும் மாறவேயில்லை. 2016ம், ஆண்டு ஆகியும் மாறவில்லை  எண்டால் 1920ல் எப்படி மாறி இருக்கும், எள்ளளவும் வாய்ப்பில்லை.

பொன்னு குடும்பத்தை தாங்கி வந்த குதிரை வண்டில் வேகமாக போக முடிய வில்லை, வீதி ஒடுக்கமாய் இருந்ததுடன், ஒரே சனப்புளக்கமாக இருந்தது காணாது எண்டு, சிலர் சிறு கடைகளை பரப்பி இருந்தனர். உடன் வறுத்த கச்சான் கொட்டை, காரமிட்டவிச்ச கொண்டல் கடலை, இனிப்புக்கடை எண்டு கூவி வித்துக்கொண்டு இருந்தார்கள். இனிப்பு வித்த கடைக்காரி இனிப்புகளில் மொய்க்கும் இலையான்களை வேப்பங்குழை கொத்தினால் விசிறி  விரட்டிக்கொண்டிருந்தாள். அவள் வலப்பக்கமாக விசிற, இடப்பக்கமாக இலையான்கள் இனிப்பில் வந்தமர்ந்தன. அதை யாரும் சட்டை செய்வதாக இல்லை. அரை சதத்துக்கு மூண்டு துண்டு என  வாங்கிய படி இருந்தார்கள்.

குதிரை வண்டிலை கண்டதுமே, விபச்சாரவிடுதி நடத்திற கனகாம்பாள் விசை குடுத்த இயந்திரமானாள். தன்னுடைய கொண்டை மாலையை இரு கரங்களாலும் தொட்டு பார்தவ, மார்பு சீலையை சிறிது கீழே இழுத்து விட்டு என்ன வண்டில் வருகுது எப்பிடி தண்டை வியாபாரம் அண்டைக்கு இருக்கும் எண்டு யோசிச்சுக்கொண்டு, மினுக்கிய படி வெளிய வாறா, வாடிக்கையாளர்கள் இல்லாத சில விடுதி பெண்களும் வெளியே வருகிறார்கள். அத்தரை அதீதமாக உடம்பில் பூசியதால், வியர்வை மணத்துடன் கூடி எதோ ஒரு நெடியாக காற்றில் பரவுகின்றது.

திரை போட்டு மூடிய வண்டிலை கண்டதும் அவ முகம் கொஞ்சம் சுணங்கிவிட்டது. ஏதோ பெரிய குடி குடும்பம் போலை எண்டு நினைச்சவ, தன் முயற்ச்சியில் தளராமல் டாப்பர் மாமா செண்பகத்தை ஏவுகிறா. "ஓய் செண்பகம் அங்கை பராக்கு பாராமல் , என்ன வண்டில், பணப்புழக்கம் எப்பிடி, எத்தனை விடலைகள் , எத்தினை ஆம்பிளையள் எண்டு பாரும், வசதிப்பட்டால் இப்பவே அச்சாரம் வாங்கியாரும் ஓய்!".

செண்பகம் நாலு எட்டில் மெதுவாக போன குதிரை வண்டில் முன்னாலை நிக்கிறார். இளையவனோ வண்டிலை நிப்பாட்டவில்லை, அவருமோ விடாக்கண்டனா கேக்கிறார் "எங்கையிருந்து வாறியள், யார் உள்ளை , இங்கை என்ன சோலி ?'  எட்டி, எம்பி  பார்த்தவர் வாட்டசாட்டமாக இருந்த
ஐயாக்கண்டுவை கண்டு விடுகிறார். மற்றது இரண்டும் பெண்கள், நகை நட்டோடை இருக்க கண்டவர் பசை உள்ள இடம்தான் எண்டு நினைக்கிறார். இளையவன் முறைச்சு பார்த்தபடி, "காரைக்கலட்டி பெரிய வெள்ளாளன் குடி, பாதிரி அதிரியானை காண பாதிரி பள்ளிக்கு போகினம். இது காணுமோ அல்லது இன்னும் தெரிய வேணுமோ " எண்டு சலிச்சவர் இரண்டாவது ஒழுங்கைக்குள்ளை வண்டிலை திருப்பி துரிதமாக வண்டிலை விடுகிறார்.

கருத்துரையிடுக