பக்கங்கள்

அப்பத்தா காவியம்-பகுதி 8-புண்ணிய பூமி மிதிச்ச புராணம்

அப்பத்தா காவியம் - பகுதி 8

புண்ணிய பூமி மிதிச்ச புராணம் 

பொன்னு குடும்பம் வேதக்காற  சவக்காலை தாண்டி பாதிரி பள்ளியை அடைய மதியம் ஒரு மணியாச்சு. St MARY'S  CATHEDRAL and ORPHANAGE எண்டு ஆங்கிலத்தில் பெயர் இரும்பாலை செய்து வெள்ளை வர்ணம் பூசி முன்கதவு தூண்களை அரை வளையமா இணைச்சு  உயரமா நிக்கிறது. காவல் காரனிடம் வந்திருப்பது யார் எண்டு சொல்ல, பாதிரியார் நேற்று இரவு தொடக்கம் காத்துக்கொண்டு இருக்கிறார்" எண்டவன் இரும்பு கதவை அகலமா திறந்து விடுறான்.

கதவை திறந்தவுடன், பெரிய வட்ட வடிவில் பலவர்ண இலைகள் கொண்ட குரோட்டன் மரங்களை நட்டு. ஒரே உயர அகலத்துக்கு வெட்டி விட்டிருக்கு. அதுக்கு அடுத்த வளையத்திலை சாமந்தி பூவும், கனகாம்பர பூவும் பூத்து குலுங்குகின்றது. நடுவில் கன்னி மரியாள், இயேசு பாலகனை கையில் ஏந்தி சாந்தமாக வரும் விருந்தினரை ஆசீர்வதித்து நிக்கிறா. அந்த வளையம்  தாண்ட  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு ஆள் உயரத்துக்கு முள்ளுக்கம்பி வேலி அடித்திருக்கிறது.

நடுவிலை போட்டிருந்த மண் வீதி இரண்டு பக்கமும் மாமரங்களும், பிலா மரங்களும், கமுகு, தென்னை எண்டு வகை,வகையா எங்கும் பச்சை பசேல் எண்டு இருக்கு. வேலிக்கு மற்ற பக்கம் மான், மரை, கேப்பை மாடுகள், யமுனாபாரி ஆடுகள், மயில் கூட்டம், கோழிகள், வான் கோழிகள்  எல்லாம் தன்பாட்டுக்கு சாபிட்டும், மர  நிழலிலை இளைப்பாறியும் எந்த கவலையும் இல்லாமல், எங்களுடைய மேய்ப்பர் இருக்க எமக்கு என்ன கவலை எண்டமாதிரி இருக்கின்றன. சில வேலை ஆட்கள் சுறு சுறுப்பாக ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வானத்தில் சில கரு மேக கூட்டங்கள் குவிந்து நின்றன. ஆண் மயில் ஒன்று தன் அழகான சிறகை விரித்தாடியது. பெண் மயில்கள் கிறங்கிப்போய் நின்றன. ஆண் சேவல் ஒன்று தன் கழுத்தை நிமிர்த்தி அழகான சிவப்பு கொண்டையுடன் "கொக்கரோக்கோ" என கூவி தன் பேடுகளை அழைத்தது.  அதன் அருகே ஒரு மான் கூட்டம், ஆண் மான்கள் மட்டும் நீண்ட கொம்புகளுடன் நிமிர்ந்து நிண்டன.

பொன்னு யோசிக்கிறா, இதென்ன இது, பறவைகளிலை ஆண் பறவைகள் தான் வடிவு, மிருகங்களிலை ஆண் மிருகம்தான் வடிவு. காட்டு மிருகங்களிலை கூட பிடரி மயிர் கொண்ட ஆண் சிங்கம் வடிவு, பெண் சிங்கம் எடுப்பா இருக்காது. அப்பிடி எண்டால் மனிசரிலை ஆண் வடிவா அல்லது பெண் வடிவா? குழம்பிப்போறா பொன்னு. நானோ அல்லது எண்டை அத்தானோ வடிவு?

என்கடையூர் பெம்பிளையளை கேட்டால் அத்தான்தான் வடிவு என்பினம், ஆம்பிளையளை கேட்டால் என்னைத்தான் வடிவு என்பினம். யாரை கேட்க, மனிசரில்லாத ஒரு இனத்தைத்தான் கேட்கவேணும். யாரை கேட்க எண்டு சுற்றும் முற்றும் பாக்கிறா. கண்ணிலை எம்பிட்டது தன்  குழைந்தையை இடுப்பில் காவியபடி, மரத்துக்கு மரம் தாவி கொண்டிருந்த ஒரு குரங்குதான். அந்த குரங்கோ வலும் அவசரமாக மாம் பழம் ஒன்றை பிடுங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. என் பேச்சை இது எங்கே கேட்க போகிறது எண்டு சலிச்சவ, பேசாமலே இருந்து விட்டா.

இந்த காட்சிகளை தாண்டி செல்லவே கால் மணி நேரமாச்சு. அதுதான்டின உடனை  வானை தொடுற உயரத்துக்கு கருங்கல்லிலை செய்த சிலுவையிலை, எங்களுக்காய் மரிச்ச யேசுபிரான் முள்ளு மகுடம் அணிந்து உதிரம் சிந்தி தொங்குகின்றார். அவரை சுத்தி வட்டமா பல வர்ண ரோசாக்கள் "வாங்கோ ! வாங்கோ! எண்டு வரவேற்பது போல் பல நறுமணங்களை பரப்பி, ராச குமாரிகள் மாதிரி தலை நிமிர்ந்து நிற்கின்றன.

அதை தாண்டினவுடன், மேரி மாதா தேவாலயமும், அலுவலகங்களும், விடுதிகளும். பள்ளிகூடங்களும், வதிவிடங்களும், சமையல் கூடங்களும் எண்டு பெரிய காட்சியே முன்னுக்கு விரிகிறது. குதிரை வண்டில் நின்றவுடன் கருப்பு நூலில் வெள்ளி சிலுவை கோத்து கழுத்தில் அணிந்த ஒரு வயதானவர் ஓடி வாறார். வாங்கோ, வாங்கோ என்ரை பெயர்  சூசை அப்பன், பாதிரியார் வந்து கொண்டிருக்கிறார் எண்டவர் ஒரு பக்கமா ஒதுங்கி நிக்கிறார்.

பாதிரி அதிரியான் உயரமா வளர்ந்து, திடகாத்திரமான உடம்புடன் புன்னகை பூத்து, நீளமா வெள்ளை அங்கி அணிந்து, கையில் பரிசுத்த வேதாகமத்தை  ஏந்தி, மரத்தில் செய்த சிலுவையை அரையில் சொருகி, பரிசுத்தமான ராச புத்திரனா, இந்த பூலோகத்தையே இரட்சிக்க வந்த பரமண்டிலத்திலை இருக்கிற பரம பிதா மாதிரி "வாங்கோ சின்னையா, வாங்கோ சின்னம்மா, வா தங்கச்சி" எண்டுறார்.

வண்டிலாலை இறங்கின ஐயாக்கண்டுவும், செல்லாச்சனை பாதிரியாரை அன்புடன் பார்க்கிறார்கள். "எப்பிடி  இருக்கிறாய் மேனை?" என்கிறார் ஐயாக்கண்டு. "ஏதோ கடவுள் கிருபையினால் சுகமாக இருக்கிறன்" எண்டு சொல்லி முடிய, பொன்னு  தனது வலது காலை "ஜல்" என வெள்ளி கொலுசு குலுங்க அந்த புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைத்தவள் தனது ஒன்று விட்ட அண்ணனை முதன் முறையாக பாக்கிறாள்.  "சின்னப்பிள்ளையாய் கண்டது நல்லா வளர்ந்திட்டாள்" என்கிறார் பாதிரியாகிய அவள் அண்ணன்.

அதன் பிறகு மள மளவென காரியங்கள் ஆகின்றன. சூசையப்பன் அவர்களது பெட்டி படுக்கைகளை கோச்சு இளையவன் உதவியுடன் உள்ளே கொண்டு போக, பாதிரி அவர் உறவுகளை தன் அலுவகத்திற்கு இட்டுச்சென்றார். உள்ளே போனதும் ஐயாக்கண்டு நடந்த விபரங்களை பாதிரியாருக்கு சொல்லுகின்றார். ஊர் வழக்கமறிந்த பாதிரிக்கு விளங்குவதற்கு கடினமாக இருக்கவில்லை.

பொன்னுவை மிக கனிவுடன் பாத்தவர், " என்ன தங்கைச்சி, நடந்த உடனையே அம்மா, ஐயாவுக்கு சொல்லி இருந்தால் இவளவு தூரம் நீ விசனப்பட வேண்டிய அவசியமில்லை, கணவதி அத்தானும் ஒரு தங்கமான மனிசன், காதும், காதும் வைச்ச மாதிரி எல்லாத்தையும் முடிச்சிருக்காலாம், சரி விடு  நீ இங்கை வரவேணும் எண்டு கர்த்தருடைய சித்தம் போலும்" எண்டவர் மீண்டும் அண்ணன் உறவிலிருந்து பாதிரி அதிரியான் ஆனார்.

"இங்குள்ளவர் எல்லாம் காசு பணம் இல்லாதவர்கள் எனவே நீங்கள் இவ்வளவு நகை நாட்டோடை இங்கை உலாவினால் மற்றவர்களுக்கு நீங்கள் ஏதோ வேற்று கிரக வாசிகள் என்று நினைப்பு தோன்றும், சகசமாக பிழங்க மாட்டார்கள். இது பாதுகாப்பான இடம்தான் ஆனால் இங்கை இருக்கும்வரை அவர்களுள் ஒருவராகவே இருந்து விடுங்கள் என்கிறார். சொன்னது மட்டும் இல்லாமல் ஒரு மஞ்சள் துணியை விரித்து "எல்லா நகைகளையும் கழட்டி எல்லாத்தையும் இதிலை வையுங்கோ" என்கிறார் பாதிரி.

செல்லாச்சன் தன்  தாலி தவிர எல்லா நகையளையும் கழட்டி அந்த துணியிலை வைக்கிறா. அவ சிவந்த மேனியிலை பலகாலமாக அந்த நகைகள்  இருந்ததால் அவ உடம்பில் சிவந்த தழும்புகளை ஏற்படுத்தி இருந்தன. தடவிப்பார்த்தவ சிரிச்சு கொண்டே "இப்பிடி ஒரு காலம் வரும் எண்டு, யாருக்கு  தெரியும் எண்டவ, பொன்னுவின் நகையளையும் கழட்டி அந்த துணியிலை போடுறா. பொன்னு  நகை ஒண்டும் இல்லாமல் மூளியாக நிக்கிறா. ஐயாக்கண்டுவும் தன்னுடைய பவுன் உருத்திராக்க மாலை, தங்க காப்புகள், வைர கடுக்கன்களையும் கழட்டி வைத்தார்.

முகத்தில் எதுவித சலனமும் இல்லாமல் தன்னுடைய மேசை இழுப்பறையிலிருந்து  இருந்து ஒரு மஞ்சள் கயித்தை எடுத்து தன் மேசையில் வைத்தவர் "நீ தாலி ஏறாமல் கற்பமானது ஒருத்தருக்கும் தெரிய வேண்டாம். கணவதி அத்தானை நினைச்சுக்கொண்டு இந்த கயித்தை கழுத்திலை கட்டு" என்றார். அங்கு வருகின்ற எல்லா தாலி ஏறாமலே கற்பமான பெண்களுக்கென அவர் ஒரு கட்டு மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்திருந்தார்.

பொன்னு மிகுந்த கவலையுடன் அதை அணிந்து கொண்டாள். நகைகள் இருந்த துணியை முடிச்சுப் போட்டு, மெழுகு உருக்கி முடிச்சில் வார்த்து , அந்த தேவாலய முத்திரையை பதித்து ஐயாக்கண்டு என்ற பெயரை எழுதி அதில் பசை கொண்டு ஒட்டி விட்டார் . "இதை உள்ளை இரும்பு பெட்டியிலை வைக்கிறன், போறபோது தாறன்" எண்டார். ஐயாக்கண்டு கோச்சு இளையவன் ஊர் திரும்ப வேணும், பணம் குடுத்து அனுப்பியிட்டு வாறன் எண்டார். நாங்களும் வாறம் எண்டு தாயும், மகளும் கூட அவருடன் புறப்பட்டார்கள்.

"கொஞ்சம் பொறுங்கோ, இந்த கோலத்திலை இளையவர் உங்களை கண்டால் மயக்கம் போட்டு விழுந்திடுவார், நான் எதோ சொல்லி காசு குடுத்து அனுப்பியிட்டு வாறன்.  எவ்வளவு குடுக்கவேணும்  ஒரு முப்பது வருமே" எண்டவர், ஐயாக்கண்டு  கொடுத்த பணத்தை எண்ணியபடி வாசலுக்கு விரைந்தார். கோச்சு இளையவன் உணவு உண்டு புறப்பட தயாராக நின்றான்.

"இளையவரே! இங்கை வாரும் சாப்பிட்டாச்சா" என ஒரு அன்புள்ள தாய் போல பரிவுடன் கேட்டார்.  " அதெல்லாம் ஆச்சு சாமி, எனக்காக யேசுவிடம் மன்றாடுங்கள்" என முழந்தாளில் நிக்கிறார் கிறிஸ்தவரான இளையவர். "ஆண்டவர் உம்முடன் எப்போதும் இருப்பாராக , பிதாவினது  சித்தம் பரமண்டலத்தில் இருப்பதுபோல் உம்முடனும் எப்போதும் இருப்பதாக" என காற்றிலே சிலுவையிட்டவர், பணத்தை இளையவரின் கொடுத்தார்.

இளையவர் பணம் கிடைத்த பின்பும் அவ்விடம் அகலாமல் நிக்க கண்டு, காரணத்தை உணர்ந்த பாதிரி "சின்னையா குடும்பம் உள்ளை  கொஞ்சம் அலுவலா இருக்கினம், உன்னை போய் வரும்படியும், போய் சேர்ந்தவுடன் மாமா வீட்டுக்கு அவர்கள் சுகமாக முல்லைத்தீவு வந்ததை சொல்லும்படியும்" அவர்கள் சொல்ல சொன்னார்கள் என்றார். அவர்களை பார்க்காமல் போகிறோமே  என சிறிது விசனப்பட்ட இளையவர் அதை முகத்தில் காட்டாமல் "சரி சாமி, அப்பிடியே ஆகட்டும்" எண்டவர், தாவி வண்டிலில் ஏறி குதிரைகளை தட்டிவிட்டார்.

பொன்னு அந்த அலுவலக யன்னலூடாக வண்டில் போவததை பார்த்துக்கொண்டு நிண்டாள். வண்டில்  கண்ணுக்கு எட்டிய தூரம் மறைந்தவுடன், "சூசை அப்பரே எனக்கும், வந்தவர்களுக்கும் உணவு எடுத்து வையுங்கள், அவர்கள் மிகுந்த பசியுடன் இருப்பார்கள்" என்றவர் விரைந்து அலுவலகம் போனார். 

உணவுண்ண சாப்பிடும் மண்டபத்திற்கு வந்த ஐயாக்கண்டு குடும்பத்தை கண்ட சூசை அப்பர் மனம் கலங்கி , கண்களை மூடியபடி சேசுவே இவர்களுக்கு என்ன நடந்தது. சிறிது நேரத்திற்கு முன் அவ்வளவு நகை நட்டுடன் நின்றவர்கள், ஏன் இப்படி ஆனார்கள். ஆண்டவரே என்னை வழி நடத்தும் என மனத்திற்குள் மன்றாடி நின்றார்.  இதை உணர்ந்த பாதிரி " சூசையப்பரே, மேய்ப்பரின் மந்தையில் எந்த ஏற்ற தாழ்வும் இருக்காது, எல்லா ஆடுகளும் மேய்ப்பரின் சம ஆசீர்வாதங்களைத்தான் பெறும். இந்த ஆட்டு மந்தையில் ஒருவராகி விட்ட இவர்கள் எங்களைப்போல் எளிமையாக இருப்பதுதான் உசிதமானது." என்கிறார் பாதிரி.

புரிந்தும், புரியாத சூசை அப்பர் "சரி சாமி" என்கிறார். பிறகு தாழ்ந்த குரலில் இவர்களுடைய மாற்றம் இங்குள்ள எவருக்கும் தெரிய வேண்டாம் என்கிறார். செல்லாச்சன் தன் கணவருக்கு உணவு பரிமாற எழுந்தவள், பாதிரி என்னவோ சொல்லவே திரும்ப அமர்ந்து கொள்கிறாள்.

பாதிரி கண்களை மூடி செபிக்கிறார், " பர மண்டலத்திலை இருக்கிற பிதாவே,  என்னுடன் என் உறவினரை  தங்கும் வாய்ப்பை அளித்தற்கு நன்றி, இப்படியான ஒரு சமயத்தை கொடுத்தற்கு நன்றி, இந்த உணவை எல்லோருடனும் பகிரப்பண்ணிய உம்முடைய கிருபைக்கு நன்றி.  ஆண்டவரே இந்த உணவை ஆசீர்வதியும், இந்த உணவு எங்களுக்கு ஊட்டம் அளிக்கட்டும், உம்முடைய திருச்சபை எங்களுடைய வாழ்கையை ஆசீர்வதிக்கட்டும், எல்லாவற்றிற்கும் மேலாக எங்களுடைய வீட்டிலும், கிருதயத்திலும் உம்முடைய வரவு எப்பொழுதிலும் எதிர் பார்க்கப்படும்".என பாதிரி முடிக்க .. ஆமென் என சூசை அப்பரும், பாதிரியும் ஏக குரலில் செபத்தினை முடித்தனர்.

ஐயாக்கண்டு குடும்பம் திருவிழாவில் தொலைந்த குழந்தைகள் போல் திரு, திரு என முழித்தனர். "உங்களுடைய வருகைக்காகவும், இந்த உணவை எங்களுக்கு தந்ததுக்காகவும் கடவுளிடம் நன்றி சொன்னேன் அவ்வளவுதான், சைவர் சாமிக்கு படைச்சு நைவேத்தியம் வைச்சு நன்றி சொல்லுறது மாதிரி" என்கிறார் பாதிரி.  "சரி, சரி அதுவும் நல்லதுதான்" எண்ட ஐயாக்கண்டு உணவுண்ண ஆரம்பித்தார். உணவு மிகவும் எளிமையாக இருந்தது. புழுங்கல் அரிசி சோறு, கத்தரிக்காய் வெள்ளை கறி, மீன்குழம்பு அவ்வளவுதான். பொரியல், வறுவல், துவையல் என்று வகை, வகையாக இருக்கவில்லை.

உண்ட குறையில் பாதிரியார் சொலுறார் "சின்னையா, இங்கை இருக்கும் வரை திரு நீற்றை உத்தூளனமாக அணியாமல், வேணும் எண்டால் சும்மா தனி கீறா, பட்டும், படாமலும் வையுங்கோ, ஏன் தேவை இல்லாத விமர்சனங்களை உண்டாக்குவான்" என்கிறார் மிகுந்த சங்கடத்துடன். "எட 
போ மேனை, திரு நீற்றை இங்கயிருந்து போகும் வரை பூசாமல் விடுறன், சாமி என்கிறது மனசிலை இருந்தால் காணும், அது சரி நீ என்ன உறவு முறையெல்லாம் மாத்திப்போட்டாய், ஊரிலை எங்களை சின்னப்பு, சின்னாத்தா என்டனி, இப்ப சின்னையா, சின்னம்மா எண்டு கூப்பிடுறாய் "  என வினாவினார் ஐயாக்கண்டு.

"அதொண்டுமில்லை, யாழ்ப்பாண பட்டினத்திலையும், கொழும்பிலையும், பிள்ளையள் தாய் தகப்பனை அம்மா, அப்பா அல்லது ஐயா எண்டுதான் கூப்பிடுகினம். கொஞ்ச காலம் போக எங்கடை ஊருக்கும் வந்திடும். கால மாறுதலோடை நாங்களும் மாற வேண்டியத்துதான்" என்கிறார் பாதிரி.

பொன்னு அந்த சாப்பாட்டு மண்டபத்தை கண்களால் சுற்றி பாக்கிறா. நீள் சதுர மண்டபம், முன்னுக்கு சுவரில் சிலுவையில் தொங்கும் இயேசு நாதர். குறுக்கு வாக்கில் பத்துப்பேர் அமர்ந்து சாப்பிட மரத்தால் செய்த எந்த அலங்காரமும் இல்லாத மர மேசையும் கதிரைகளும் போட்டிருந்தன. பின்பு நெடுக்கு வாக்கில் மூண்டு வரிசையில் மர மேசைகளும், மேசைக்கு இருபுறமும் வாங்கில்கள் போடப்பட்டிருந்தன.

"என்ன பொன்னு பாக்கிறாய், இரவு சாப்பாட்டை இங்குள்ள பாதிரிமார், படிப்பிக்கிற வாத்தியார் மார், இங்கை உள்ள குழந்தைகள்,  பெரியவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவம். ஆனால் கலாமையும், பகலும் அந்த சந்தர்பம் வராது. அவை அவை, வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்ளை வந்து சாப்பிடுவினம். மற்றும்படி, நல்ல நாள் பெருநாள் எண்டால் இங்கைதான் ஒண்டு கூடுவம். நீ எல்லாத்தையும் பாக்கத்தானே போறாய்" என்கிறார் திரு தூய்ப்புக்கு உரியவரான அண்ணன்காரன். 

பொன்னு குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட விடுதி எதிர்பார்த்ததை விட வசதியாக இருந்த்தது. பின்னேரம் பால் கோப்பியும், வடையும் விடுதிக்கே வந்தது. அங்குள்ள குழந்தைகள், பெரயவர்கள், பாதிரிமார், ஆசிரியர்கள் என பலர் இவர்களை வரவேற்க வந்தார்கள். பொன்னு  குடும்பத்திற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இரவு சாப்பாட்டை, பொன்னு சிறுமிகளுடனும், அவ தாய் பெண்கள் பகுதியிலும், ஐயாக்கண்டர் ஆண்கள் வரிசையிலும் அமர்ந்து உண்டார்கள். மிகவும் அமைதியான இரவாக இருந்தது. மிக தாழ்ந்த குரலில் அங்குள்ளோர் பேசுவது மட்டும் கேட்டது.

இரவு கடவுளுக்கு நன்றி சொல்லியபின் அவர் அவர் விடுதிகளுக்கு சென்றனர். பொன்னு  குடும்பமும் 
தங்கள் விடுதிக்கு சென்று, பயணகளைப்பினால் வரப்போகும் விடியல்களை எதிபார்த்து விரைவாக தூங்கிவிட்டனர்.

இன்னும் வரும் ...........







 
















கருத்துகள் இல்லை: